July 10, 2020

www.wikipedia.org














முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது. பதினெட்டு படிகள் கொண்டு உயர்ந்து நின்றிருந்த சூலக்கருப்பசாமி கோவிலின் முன்னால் இருந்த சிமெண்ட் திண்டில், வெளிறிய ஆரஞ்சு நிற சால்வை ஒன்றை விரித்து உட்கார்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்த ரத்தினம் திடுக்கிட்டு நிமிர்ந்த போது, "தாயோளி... நிறுத்துறா. சாமிக்கு யாரு வில்லு குடுக்கிறதுங்கிற பிரச்சனையே இன்னும் முடியலை. அதுக்குள்ளே வாய்ல வச்சி ஊத ஆரம்பிச்சிட்டீங்க. ரெண்டுல ஒண்ணு முடிவுசெய்யாம இன்னைக்கு சாமி வேட்டைக்குப் புறப்படாது பார்த்துக்கோங்க." என கத்திக் கொண்டிருந்தான் சின்னு.

இப்படித்தான் ஆரம்பிக்கிறது அந்தக் கதை.

நூல் விமர்சனம்: சஞ்சாரம்

கரிசல் மண்ணின் நாதஸ்வர இசையையும், அதன் கலைஞர்களின் வாழ்வியல் கதையையும் பக்கிரி மற்றும் ரத்தினம் என்கிற கதாபாத்திரங்கள் வாயிலாக கூறுகிற நாவலே இந்த சஞ்சாரம். நயனக்காரர்களினது வாழ்வியலின் ஏற்றம் இறக்கம் என்ற இரு துருவங்களையும் இந்நாவல் ஊடாடிச் செல்கிறது. தமிழர்களுக்கே உரித்தான இசைக்கருவியாகிய நாதஸ்வரத்தின் கதையை மையக் கருவாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், கதை  அதனுடன் மட்டுமே மட்டுப் பெற்றுவிடவில்லை. நாதஸ்வரக் கலைஞர்கள் மூலமாக தமிழகத்தின் சாதியக் கொடுமைகளும், கிராமியக் கலைகளின் வீழ்ச்சிகளும், கரிசல் நில மக்களின் வாழ்வியலும் கதையின் போக்கிலேயே லாவகமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.




எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனால் எழுதப்பட்டு 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதைப் பெற்ற இந்நாவலானது, நிகழ்கால நிகழ்வுகளால் அல்லாமல் பெரும்பாலும் கடந்தகால நினைவுகள் மூலமாகவே நகர்ந்து செல்கிறது. நினைவுகள் வழியாக கதைக்குள் கதை, அதற்குள் மற்றொரு கதை என்ற ரீதியில் எழுத்தாளர் எஸ்.ரா தன் பரீட்சார்த்தங்களையெல்லாம் நேர்த்தியோடு சாத்தியங்களாக்கியிருக்கிறார். பக்கிரி மற்றும் ரத்தினம் ஆகிய இரு பாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்பவர்களாக இருக்கின்ற போதிலும், அவர்களை விடவும் வலுவான பல கதாபாத்திரங்கள் உப கதைகளில் வந்து செல்கின்றன.

இந்த சஞ்சாரம் ஒரு கதையை மாத்திரம் கொண்டு எழுதப்பட்ட நாவலாக அல்லாமல், பல கதைகளின் கதையாக எழுதப்பட்டிருப்பதே இதன் தனித்துவமாகவும் இருக்கக்கூடும். எப்போதுமே சாமான்ய மக்களின் கதை சொல்லியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளப் பிரியப்படும் எழுத்தாளர் எஸ்.ரா வின் இந்தப் படைப்பும் அந்த நோக்கத்தை அடையத் தவறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மண்சார்ந்தும், மண்சார் கலைகள் சார்ந்தும் எழுதப்பட்ட நாவல்களில் சஞ்சாரத்திற்கும் நிச்சயம் மிக முக்கிய இடம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இருக்கப்போவதில்லை.