November 24, 2017

கருக் க(கொ)லைப்பு



விதையொண்டு முழைச்சதம்மா - அது
விதம் விதமா தழைச்சதம்மா
விந்தொண்டு தந்த சாபம் - என்ன
வீண் கருவா விதச்சதம்மா

கறுப்பான பேழைக்குள்ள - அது
என் உசிர அடைச்சதம்மா
கருவறையாம் அதுவென்று - தொப்புள்
காத்த கொடி சொன்னதம்மா

சிரிப்போடு அவள் இருக்க - அன்று
சிலிர்ப்போடு நான் முழைச்சேன்
சலிப்போடு அவள் இருக்கா - என்ன
அழிப்பேன்ணு சபதம் வைக்கா

இன்பத்தத் தான் எடுத்து - என்ன
ஈனமென ஏன் நினைக்கா
அன்பத்தான் நான் கேக்கன் - ஏந்தான்
ஆத்திரத்தில் அழுது நி(ற்)க்கா

கருவறையில் நான் இருந்து - இப்ப
அழுங்குரலு கேக்கலையோ
அழுங்குரலக் கேட்டிருந்தா - உனக்கு
அழுக நிக்கும் நினைக்கலையோ

கருக்கலைப்பு செய்வேன்ணு - நீ
கலங்காம சொல்லுறியே
உருவொண்டு வரும் முன்னே - என்ன
சொல்லால கொல்லுறியே

தேவையா இந்தக் கருவென்று - அப்போ
உன் தாயும் நெனைச்சிருந்தா
இங்க தேவதையா நீ எங்க - இப்போ
தேவையில்லாம ஏன் நான் ஏங்க

முழுதாகிப் போகும் முன்னே - இப்போ
பழுதாகிப் போகப் போறன்
அழிகியே நான் போயும் - அம்மாவின்
அழுகைய நிறுத்தப் போறன்

No comments:

Post a Comment