November 23, 2017

காதல் கடிதம்



பேறுகாலம் இல்லாத கர்ப்பம் போல் நெஞ்சில் தேங்கிக் கிடக்கும் சொல்ல முடியாத காதல்களுக்கும், சொல்ல வாய்ப்புக்கள் மரணித்துப்போன காதல்களுக்கும் இந்தக் காதல் கடிதம் சமர்ப்பணம் ஆகட்டும்......

அன்புள்ள அதிசயமே!!
நான் கடிதம் எழுதுகின்றேன்.... வரிகள் தொடுத்தல்ல என் சுவாசம் தொடுத்து. சுவாசம் சுமக்கும் நேசம் தொடுத்து. நேசம் நெய்த உன் பாசம் தொடுத்து. இதழ் வாசம் தேடும் என் காதல் தேசம் தொடுத்து......

உன்னை என் அதிசயம் என்றுரைத்ததில் ஏதும் அதிசயம் உணர்கிறாயா? உணர்ந்தால் நீ உனையே உணரா அதிசயமே.

பொன் வார்த்த தேகமோ நீ அதிசயம் என்றெண்ணக் காரணம்? மின் ஊற்றும் பார்வையோ நீ அதிசயம் ஆன காரணம்? அருவிகள் வியந்த கூந்தலோ நீ அதிசயம் என்ற காரணம்? படைத்தவன் அடைந்த மோகமோ நீ அதிசயம் என்னும் காரணம்?

அல்ல!!
எதுவுமல்ல!!!!!!!

ஒரே ஒரு காரணம் மாத்திரம் உன்னை என் அதிசயமாக்கியது என்பதை நினைக்கயில் அதுவும் ஓர் அதிசயமே. காரணம் உரைப்பேன் அதைக் காரணம் இன்றி ஏற்றுக்கொள்.

காரணம்
நீ அதிசயம் அல்ல என்று ஒதுக்க ஒரு காரணமேனும் தோன்றவில்லை அதனால் நீ அதிசயமே!!

கால அருவி கடல் போல் தோன்றி கையில் பேசிகள் கண்ணியம் பேசும் நூற்றாண்டில், நான் ஒருவன் மாத்திரம் கடிதம் எழுதுகின்றேன். நான் புதுமை உணராதவன் அல்ல காதலின் பழமை உணர்ந்தவன். வழமை தவறாதவன் அல்ல. காகித வலிமை மறவாதவன். இன்றைய நுட்பங்களாலும் வடிவம் இயற்ற இயலாக் காதலை ஒரு கடிதம் படைக்கும் என்றெண்ணுவது உன்னையும் என்னையும் தவிர பிறர்க்கு நகைச்சுவை என்றாகலாம்.

அதனால் என்ன?? நகைச்சுவையால் நீ என் அகச்சுவை உணர்ந்தால் அதனால் சிதைப்பேன் என் தனிமைச் சிறையை....

காதல் கடிதங்கள் எவையும் காதலை முழுதாய்ச் சொல்வதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் என் கடிதம் காதலை முழுதாய்ச் சுமக்கும் என்பதை நான் மறவேன். காரணம் என் வரிகள் வடிப்பவை என் மனதின் ஜாலங்களை அல்ல. உன் மனதை உணர்ந்த கோலங்களை.

குச்சி மிட்டாயை முதன் முறை பார்த்த குழந்தை அதற்காய் உச்சி வெயிலிலும் அடம் பிடிப்பது போல உன்னில் விழுந்த என் முதல் விழி பொழுதுகளிலேயே என் மனம் உன்னை வேண்டி அடம் பிடிக்கவில்லை. காரணம் உன் அழகு சித்திரத்தில் தொலைந்த என் மனம் சித்தம் கலையவே சில வாரங்களைப் பறித்து விட்டது.

நீ இல்லாமல் எனக்கு எதிர்காலம் இல்லை என்று ஒரு பொழுதும் நான் புலம்பியது இல்லை. காரணம் உன் சுகமான நினைவுகளை மட்டும் அசைபோடவே நாளிகை போதவில்லை.

உனக்காய் காதல் விண்ணப்பம் கொடுக்கக் காத்திருக்கும் வாலிப வரிசையினில் நான் கடைசி அங்கத்தவனாயேனும் நின்றதில்லை. காரணம் இருந்த ஒரேயொரு விண்ணப்பப் படிவத்தையும் தவறாக நிரப்பி விட்ட காரணத்தால். ஆம் கோரப்பட்ட அனைத்து தகவல்களுக்குமான கோடுகளிலும் உனது பெயரை மாத்திரம் எழுதிவிட்டேன் என் நிலை மறந்து உன்னையே நினைந்து.

இவைகள் எல்லாம் வெறும் வார்த்தை விளையாட்டுக்கள் என்று நீ எண்ணுவதில் நான் ஆச்சரியம் காண மாட்டேன். காரணம் நீ எனக்கு இரண்டாவது காதலி என்பதால். ஆம் என் முதல் காதலியை அறிமுகம் செய்ய ஆயத்தம் செய்கின்றேன் சற்று பொறுமை அருள்வாய். அவள் என்னை செதுக்கியவள் எனக்கும் இரசனைகள் ஒதுக்கியவள். என்னை மூழ்கடித்தவள் வார்த்தையால் வாழ்வளித்தவள். அவள் பெயர் கவிதை.

நேற்றுவரை பொழுதுகளையெல்லாம் அவளிடத்திலே தொலைத்திருந்தேன். நீ வந்தவுடன் அவளையே உன்னிடம் தொலைக்கத் துணிந்து விட்டேன். நான் கவிதைக் காதலன் என்பதனை மறந்து.

உனக்காக எழுதிவைத்த கவிதைகளும் எழுத எண்ணி வார்த்தைகள் போதாமல் எழுதாமல்ப் போன கவிதைகளும் சேர்த்து வைத்திருக்கின்றேன். கவிதைகள் வடித்த எனக்கு அவைகள் உன்னிடம் வந்து சேர அவைக்குக் கால்கள் வரையத் தெரியவில்லை.

தென்றலை வேண்டித் திறந்து வைத்த ஜன்னல் வழி இரவின் வெண்ணிலா உருகி அழகிய வெள்ளொளி வார்ப்பது போல், உன் நினைவுகள் நுழைய திறந்து வைத்த அக கதவு வழி கவிதையும் வந்து சேர்கிறது என்னிடத்தில். அதனால் நான் கவிதைக் காதலனே...

கவிதை என் முதல் காதலி என்பதனால் நீ இரண்டாம் நிலைக்குரியவள் என்றாகவில்லை. ஏனெனில் உன்னை பார்த்த பின்பே என் முதல் காதலி எனக்கு அழகானாள்.

இந்தக் காதல்க் கடிதம் என் காதலை உனக்குச் சொல்வதற்காய் எழுதப்படவில்லை. வேறு எதற்காய் எழுதப்பட்டது அறிவாயா??

விண்ணுக்கும் மண்ணுக்கும் உரைத்து விட்டேன் என் காதலை
பொன்னுக்கும் பொருளுக்கும் உரைத்து விட்டேன் என் காதலை
ஆலுக்கும் அறுகுக்கும் உரைத்து விட்டேன் என் காதலை
கடைசியில் வெண் தாளுக்கும் பேனைக்கும் உரைக்கின்றேன் என் காதலை
இந்த கடிதம் எழுதுவதனால்........

உன்னைத் தவிர அனைத்திற்கும் உரைத்து முடித்து விட்டேன் என் காதலை. உன்னிடம் உரைக்க முடியாமல் தயங்குகிறேன் என் காதலை. அதற்காய் என்னைக் கோழை என்று கோசங்கள் எழுப்பப்படலாம், பெண் கண்களைப் பார்த்து காதலைச் சொல்லும் தைரியம் அற்றவன் என்று வரைவிலக்கணங்கள் எழுதப்படலாம். இச் சொற்களின் வெப்பம் என் ஜீவன் நனைத்த காதல் நதியை உலர்த்திவிடப்போவதில்லை. காரணம் என் தயக்கத்தின் காரணத்தை நீ அறிவாய்.

நீர்க்குமிழியின் உள்ளிருக்கும் சிறு வளிப் பந்து நான்
நீர் மேற்பரப்பின் மேலிருக்கும் பரந்த காற்று மண்டலம் நீ
என் காதலை உனக்குச் சொல்ல எத்தணித்தால் என்னைச் சூழ்திருக்கும் நீர் கவசம் கணமே சிதைந்து விடும் என்பதை நான் அறிவேன். எந்தன் நீர்க்கவசம் எது என்பதை நீ அறிவாய்.

புரிந்துகொள், நான் தயங்குவது நீர்க்கவசத்தின் சிதைவிற்காக அல்ல, சிதைவின் சத்தம் கூட உன்னைத் தீண்டிவிடலாம் என்பதற்காக.

ஏமாற்றங்களுக்கு நான் புதிதானவன் அல்ல. இருந்தும் இன்று ஏமாற்றத்தையே ஏமாற்றத் துணிந்துவிட்டேன் உன் மன மாற்றம் என்னில் காதலாகச் சீற்றம் கொண்டால்.

இப்படிக்கு
கவிதைக் காதலன்

No comments:

Post a Comment