June 26, 2020














“அங்கு அடிமைச் சந்தைகள் உருவாயின. அடிமை வியாபாரம் ஒரு அதிகாரபூர்வ தொழிலாக மாறியது. அடிமைகளை வாங்கவும் விற்கவும் ஊருக்கு ஊர் புரோக்கர்கள் முளைத்தார்கள். ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் அந்தச் சந்தைகளில் பகிரங்கமாக விலை கூவி விற்கப்பட்டார்கள். நாளிதழ்களிலும், பத்திரிகைளிலும் `அடிமைகள் விற்பனைக்கு` விளம்பரங்கள் வெளியாயின. அடிமைகளை வாங்க வந்தவர்கள் கிள்ளிப் பார்த்தும், குத்திப் பார்த்தும், எலும்புகளைத் தட்டிப் பார்த்தும் விலைக்கு வாங்கினார்கள். திடகாத்திரமான அடிமைகளை அதிக விலை கொடுத்து வாங்க ஆட்கள் போட்டி போட்டார்கள்.”

இப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் அடிமை வரலாறு. இன்று ஜோர்ஜ் பிளைடின் நிற வெறிக் கொலையைக் கண்டு உலகமே கொதித்தெழுகிறது. ஆனால், பல்லாயிரம் ஜோர்ஜ் பிளைட்கள் இதை விடக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கதைகள் கறுப்பினத்தவர்களின் வரலாற்றுப் பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன. நிறத்தின் பெயரால் விலங்குகளுக்கு ஒப்பாக பல கோடி கறுப்பின மக்கள் வெள்ளையர்களின் காலடியில் பல நூற்றாண்டுகளாக வீழ்ந்து கிடக்கச் செய்யப்பட்ட மனித இனத்தின் மிக மோசமான அவல நாகரீகத்தை அமெரிக்க வெள்ளைத் தோல் வர்க்கம் மிகச் சாதாரணமாகச் செய்தது. ஓர் இனமே எழுந்து நிற்கத் துணிவற்று வெள்ளையினத்தின் அடக்கு முறையில் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்தொழிந்துகொண்டிருக்கையில், அதனில் இருந்து தன் இனத்தைக் காக்க வீழ்ந்து கிடக்கும் மக்கள் பெருங்கூட்டத்தின் மனங்களில் விடுதலைத் தீயைப் பற்ற வைக்கத் தொடங்குகிறான் ஒருவன். அவன் இட்ட விடுதலைத் தீயின் சுவாலை அமெரிக்க சுதந்திர தேவிச் சிலையின் உயரத்தை விடவும் மிகப் பெரும் சோதியாக எரியப் போகிறதென்பதை அப்போது வெள்ளை நிற வெறியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 


நூல் விமர்சனம் – கறுப்பு வெள்ளை (மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை)

1968 ஆம் வருடம் ஏப்ரல் ஐந்தாம் தேதி மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மாபெரும் ஆளுமை கொலை செய்யப்பட்ட போது, அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையொன்று இவ்வாறு எழுதியது;
“நாட்களும் வருடங்களும் உருண்டோடினாலும் மார்ட்டின் லூதர் கிங்கை மரியாதையோடு நினைத்துப் பார்க்கிற மனிதர்கள் கொஞ்சம் பேராவது எப்போதும் இருப்பார்கள். ஏனெனில், அவர் ஆத்ம பலத்தால் வரலாற்றைத் திருப்பிப் போட்டவர்.“

ஆம்! அவர் வரலாற்றினை புரட்டித்தான் போட்டார். அவர் கிட்டத்தட்ட தன் இனத்தின் வரலாற்றை மீள எழுதினார் என்றால் அதில் மிகை எதுவும் இருக்கப்போவதில்லை. 1929 ஆம் வருடம் ஜனவரி 15 ஆம் தேதி மார்ட்டின் லூதர் கிங் பிறந்த போது, அது அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கெதிராக இனவெறி கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஓர் காலப்பகுதியாக இருந்தது. சட்ட ரீதியாக கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்திருந்த போதிலும், வெள்ளையர்களுக்கு இணையாக சமவுரிமை கிடைத்திராத ஓர் காலப்பகுதியாக அது விளங்கியது. கறுப்பினத்தவர்களுக்கான விடுதலைச் சட்டங்கள் வெறும் காகித எழுத்துக்களாக மாத்திரம் எழுதப்பட்டு அவை வெள்ளை நிற இனவெறியர்களின் நிறத் துவேசத்தின் அழுக்குகளை மீறி செயலாற்ற முடியாதவையாகக் கிடந்தன. 

தன் சிறு பராயம் முதல் நிற வெறியின் கோர முகத்தைப் பார்த்தே வளர்ந்த மார்டினுக்கு முதலில் வெள்ளையர்கள் மீது கடுங்கோபமும் வஞ்சம் தீர்க்கும் குரூர எண்ணமும் தோன்றியதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால், அந்த எண்ணங்கள் நீண்ட காலம் நீடிக்கவில்லை. மகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டத்தினைப் பற்றி அறிந்துகொள்ள நேர்ந்த அவருக்கு, அகிம்சை ஆயுத்தத்தின்பால் தீரா நம்பிக்கை உதயமாகியது. அதுவே தன் இனத்தின் அடிமை விலங்கையும் தகர்க்கக்கூடிய ஒரேயொரு சக்தி என்பதை அவர் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டார். அகிம்சை ஆயுதத்தை கையிலெடுத்துக்கொண்ட அவர், அதன் மூலமாக முதலில் தன்னைத் தானே மீளப் புதுப்பித்துக் கொண்டார்.  அதற்கடுத்ததாய் அந்த அகிம்சைத் தீயை மெல்ல மெல்ல அடிமை வர்க்கமாய் வீழ்ந்து கிடந்த தன் இனத்தின் உள்ளங்களிலும் பற்ற வைக்கத் தொடங்கினார். அது கொழுந்துவிட்டு எரியப் போகும் நாளை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அமெரிக்க அதிபராக இருந்து பின்னர் கொல்லப்பட்ட ஆபிரஹாம் லிங்கனின் முயற்சியினால், கறுப்பின மக்களின் அடிமை விலங்குகள் தகர்க்கப்பட்டு, அவர்களுக்கும் அமெரிக்காவில் சம உரிமையுள்ளது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அது நடைமுறைக்கு வந்தபாடில்லை. எழுத்தில் எழுதப்பட்ட சட்டம் வெறும் ஏட்டுச் சுரக்காயாக மாத்திரமே இருக்க, கறுப்பின மக்கள் தொடர்ந்தும் நிற வெறியர்களின் வக்கிரங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது. கறுப்பின மக்களும் வெள்ளையர்களைப் போலவே கிறிஸ்தவர்களாய் இருந்த போதிலும், அவர்கள் வெள்ளையின மக்களுக்கான கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. உணவகங்களில் கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களுக்குச் சமமாக உணவருந்தவோ அமரவோ முடியாது. கறுப்பினக் குழந்தைகள் வெள்ளையினக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களின் வாசல் படியைக் கூட மிதிக்க முடியாது. அவர்கள் அவர்களுக்குரிய கறுப்பினப் பள்ளிக்கூடங்களில் மட்டுமே கல்விகற்க முடியும் என்பதுடன், அப்படியான பள்ளிக்கூடங்களால் வெள்ளையர்களின் பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாதியளவுகூட நிதியைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. இவ்வளவுயேன், பேருந்துகளில் கறுப்பினத்தவர்கள் முன் இருக்கைகளில் அமர்ந்து கொள்ள முடியாது. அவை வெள்ளையர்களுக்காக மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன. அவ்வாறான இருக்கைகள் வெறுமையாக இருந்தாலும்கூட அவற்றில் கறுப்பினத்தவர்கள் அமர்ந்துகொள்ள முடியாது. அவர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பின்வரிசை இருக்கைகளில் மட்டுமே அமர முடியும். 



இந்த அடக்கு முறைகளையெல்லாம் மார்ட்டினால் பலரைப் போல சகித்துக் கொள்ளவோ, அதற்கிசைந்து வாழப் பழகிக் கொள்ளவோ முடியவில்லை. மாறாக அவர் கனவு கண்டார். அமெரிக்கக் கறுப்பின வர்க்கம் தன் முதுகெலும்பை நிமிர்ந்தி நிற்கக்கூடிய நாள் ஒன்றை உருவாக்குவதனையே அவர் கனவாகக் கண்டார். அவர் எதிர்பார்த்திருந்த நாளை பேருந்துகளின் வாயிலாக அடைய முடியும் என அவர் நம்பினார். ஆம்! அவரின் எண்ணப்படியே தொடங்கியது மாபெரும் பேருந்து பகிஸ்கரிப்பு அகிம்சைப் போராட்டம். அமெரிக்க பேருந்துகளில் பயணம் செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்களாக இருந்த போதிலும், அவர்களால் வெள்ளையர்களுக்கு இணையாக பேருந்தில் பயணம் செய்வதென்பது நடவாத காரியம். பின்வரிசை இருக்கைகளைத் தவிர்த்து எவரேனும் வெள்ளையர்களுக்கான முன்வரிசை இருக்கைகளில் அமர்ந்துவிட்டால், அவர்கள் போலிஸாரால் கைதுசெய்யப்படுமளவிற்கு அங்கே நிற வெறி தலை விரித்தாடியது. எனவேதான், இவற்றையெல்லாம் கண்டித்து மார்ட்டின் வெள்ளையர்களின் நிறவெறி அகந்தையின் மடியில் கை வைப்பதெனத் தீர்மானித்தார். அவர் அறிவித்தது போலவே பேருந்து பகிஸ்கரிப்புத் தொடங்கியது. அவர் நினைத்ததை விடவும் மிகப்  பெருமளவில் கறுப்பின மக்கள் அந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதுவரை பேரூந்துகளிலேயே பயணம் செய்துகொண்டிருந்த மக்கள், அவற்றுக்குப் பதிலாக மாற்று வாடகை வண்டிகளை உபயோகிக்கத் தொடங்கினார்கள். பலர் பல மைல்கள் தொலைவைக்கூட நடந்தே சென்றார்கள். ஆனால், எவரும் பேருந்தில் மாத்திரம் ஏறுவதாக இல்லை.

சில நாட்களில் கறுப்பர்கள் சலித்துப்போய் பேருந்துகளுக்குத் திரும்பி விடுவார்கள் என நினைத்தது நிற வெறி வர்க்கம். ஆனால், பேருந்துகள் தொடர்ந்தும் வெறுமையாகவே ஓடிக்கொண்டிருந்தன. பல தடைகள், நிற வெறியர்களின் பல்வேறு சதித் திட்டங்கள் என என்னென்னவோ அரங்கேறியும்கூட அந்த அகிம்சைப் போராட்டம் வலுவிழப்பதாகத் தெரியவில்லை. பேருந்துகள் நட்டத்தை ஈடு செய்ய இயலாது தடுமாறத் தொடங்கின. அங்குதான் மார்ட்டினின் போராட்டம் மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி நகரத் தொடங்கியது.

இவ்வாறாக மார்ட்டின் லூதர் கிங்கின் காந்தி வழி அகிம்சைப் போராட்டங்கள் அதன் வெற்றியை அடைந்த போதுதான் பலநூற்றாண்டுகளாக மூச்சுவிட திராணியற்றுக் கிடந்த கறுப்பின மக்கள் சுதந்திரக் காற்றை மெல்ல மெல்ல சுவாசிக்கலானார்கள். அமெரிக்கா மெல்ல மெல்ல அவர்களையும் தங்கள் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. இயேசுவின் மீதும் காந்தியின் மீதும் தீராக் காதல் கொண்டு அவர்களின் பாதையிலேயே பயணித்து தன் மக்களின் விடுதலைக் கனவை நனவாக்கிய மார்ட்டின் லூதர் கிங், மக்களுக்காகக் குரல் கொடுத்த இயேசுவையும் காந்தியையும் போலவேதான் இறுதியில் படுகொலை செய்யப்பட்டார். அன்பையும் அகிம்சையையும் ஆயுதமாகக் கொண்டு கறுப்பின மக்களுக்காகப் போராடி, அதற்காக நோபல் பரிசையும் பெற்றுக்கொண்ட மார்ட்டின், தான் இறப்பதற்கு  இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையொன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“விட்டுச் செல்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இல்லை. அருமையான மற்றும் ஆடம்பரமான எதுவும் என்னிடமில்லை. ஆனால், ஒரு கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை விட்டுச்செல்ல நான் விரும்புகிறேன்.“

உலகில் மிகச் சக்திவாய்ந்த ஆயுதமாகக் கருதப்படும் அகிம்சையை கையிலெடுத்து காந்தியின் வழியில் அமெரிக்க கறுப்பின மக்களுக்கு விடிவைத் தேடித் தந்த மாமனிதர் மார்ட்டின் லூதர் கிங் இன் வரலாற்றை மிகச் சுருக்கமாகவும் எளிமையாகவும் `கறுப்பு வெள்ளை` என்ற நூலின் வாயிலாக எழுதியிருக்கிறார் பாலு சத்யா. அவரது எளிமையான எழுத்துக்களும், அதனூடு மார்டினை அறிமுகம் செய்யும் வசனங்களும் இலகுவான நடையில் மார்ட்டினின் வாழ்வினை மட்டுமல்லாது அப்போதைய காலச் சூழலையும் அதிக வர்ணிப்புகளின்றி விளக்கிச் செல்கிறது. காந்தியத்தின் பாதை வெறும் தற்செயலானதொன்றல்ல என்பதுவும், அது உலகிலேயே மிக வலுவான ஆயுதம் என்பதுவும் மார்ட்டின் லூதர் கிங் இன் மூலமாக மீண்டுமொரு முறை உலகுக்கு உணர்த்தப்பட்ட வரலாற்றை இந்நூல் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது. காந்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் நம்பிக்கை கொண்ட அனைவரும் படிக்கக்கூடிய ஒரு நூலாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.


உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இப்பதிவு  தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.





June 12, 2020














டேவிட் மயங்கி விழுந்தான். அந்தக் காட்டுப் பாதையில் நடந்து செல்வது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. மாறனும் விமலும் அவனது முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவனைச் சுயநினைவடையச் செய்தார்கள். ஆனால், அவர்களும் வெகுவாகச் சோர்ந்துதான் போயிருந்தார்கள். சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்து சிறிது இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது போல, அவர்கள் மூவரும் அச்சுராவைப் பார்த்தார்கள். ஆனால் அவளில் சற்றேனும் சலனம் இருக்கவில்லை. அவள் களைப்படைந்திருப்பதாகக்கூடத் தெரியவில்லை. அச்சுரா இன்னும் வேகமாகப் பயணிப்பதற்குத் தயாராக இருந்தாள். இந்த மூன்று நோஞ்சான்களை நம்பி இத்தனை சவாலான காரியத்தைச் செய்யப் புறப்பட்டு வந்ததற்காக, அவள் தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தாள். இப்போது எழுந்து நடக்கப்போகிறீர்களா இல்லையா என்பது போல தன் இடுப்பில் கை வைத்தபடி அதிகார தோரணையில் நின்று, அவள் அந்த மூவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள். வேறு வழியின்றி சிறிது நேரத்தில் அவர்கள் எழுந்து மீண்டும் பயணத்தை ஆரம்பித்தார்கள். அச்சுராவின் தலைமையின் கீழ் அந்த நால்வர் அடங்கிய குழு ராஜ புதையலொன்றைத் தேடி கீழைக் காடுகளினூடு நகர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் நால்வரும் ஆர்கியாலஜிஸ்ட்கள். அவர்களில் அச்சுராதான் அனைவரிலும் சீனியர். பல ஆண்டுகளாக வரலாற்றைத் தேடி நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தவர்கள், அதில் சலித்துப்போய் புதையல்களைத் தேடிப் பயணப்பட ஆரம்பித்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆங்காங்கே சில புதையல்களைக் கண்டு பிடித்து அதனைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டார்கள். அவற்றைப் போன்ற ஒரு பயணம்தான் இதுவும். ஆனால், இது மற்றைய பயணங்களைப் போல அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. பெரும் சவாலான பயணம் ஒன்றை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

அச்சுராவினது நடையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டே மாறன் பேச்சை ஆரம்பித்தான்.

“அச்சுரா! இன்னும் எவ்வளோ தூரம்தான் நடக்கிறது? எங்களால முடியல.“

“முடியலனா திரும்பிப்போ! நீயெல்லாம் தண்டச் சோறு திங்கத்தான் லாயக்கு.“

“அதுக்காக இல்ல அச்சுரா! நீ சொன்னதுமே மூணு பேரும் மறு பேச்சுப் பேசாம புறப்பட்டு வந்துட்டோம். எங்க போய்க்கிட்ருக்கோம்னு தெரியாமலேயே நாலு நாளா இப்படியே நடந்துக்கிட்ருக்கோம். ஒரு சில கிராமங்களை கண்ணுல பார்க்க முடிஞ்சாலுங்கூட பெரும்பாலும் காட்டுலயேதான் நடந்துக்கிட்ருக்கோம்.  புதையலைக் கண்டுபிடிக்க சில நாட்களாவது இப்படி நடக்க வேண்டியிருக்கும்னு மட்டும்தான் நீ எங்கக்கிட்ட சொல்லியிருந்த. என்ன புதையல்? அது எங்க இருக்குனு ஒரு வார்த்தைகூட நீ சொல்லவேயில்ல. நீயாவே சொல்லுவேனு காத்துட்ருந்தோம். ஆனா நீ புதையலைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கிற.“

“ஏன்? இத்தனை நாளா புதையலைப்பத்தி எல்லா விவரமும் தெரிஞ்சிக்கிட்டுத்தான் என் கூட வந்தீங்களா? கூப்பிட்டதுமே வந்தீங்களா இல்லியா? நான் சொன்னபடி புதையலும் கிடைச்சிச்சா இல்லியா? இப்ப மட்டும் என்ன வந்திச்சி?“

“நீ சொல்றது உண்மைதான் அச்சுரா. ஆனா இதுக்கு முன்னாடியெல்லாம் நாம இப்படி நாள் கணக்கா காட்டுல அலைஞ்சதில்லையே! புதையல் இருக்கிற இடத்தைத் தெரிஞ்சிக்கிட்டு நேரா அங்க போய்ச் சேருவோம். அங்க நாம அனுமானிக்கிற இடங்களில தோண்டுவோம், தேடுவோம்.”

“மாறா! இது அது மாதிரியான புதையல் கிடையாது. உண்மையைச் சொல்லணும்னா எனக்குக் கூட புதையல் இருக்கிற இடம் நூத்துக்கு நூறு சரியாத் தெரியாது. ஆனா, கண்டு புடிக்க முடியும்னு என்னால கான்ஃபிடன்டா சொல்ல முடியும்.“

“என்னது புதையல் இருக்கிற இடம் தெரியாதா? அச்சுரா! விளையாட்றியா? நீ உன் மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்க? எங்கக்கிட்ட புதையல் பத்தி எதுவுமே சொல்லாம இப்படிக் காட்டுலையும் மேட்டுலையும் நாலு நாளா அலைக்கழிச்சுக்கிட்ருக்க. இனியும் புதையலைப் பத்தி நீ எங்கக்கிட்ட சொல்லலைனா நாங்க ஒரு அடி கூட இங்க இருந்து நகரப் போறதில்லை.“

மாறன் சொன்னதுதான் தங்களின் முடிவும் என்பது போல விமலும் டேவிட்டும்கூட மாறனுடனேயே அதே இடத்தில் நின்று விட்டார்கள். களைப்பும் சலிப்பும் அவர்களை வெகுவாக மூழ்கடித்திருந்தது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது அச்சுராவின் தலைக்கனத்தைச் சீண்டினாலும், இனியும் புதையலைப் பற்றிச் சொல்லாவிட்டால், அவர்கள் அங்கிருந்து நகரமாட்டார்கள் என்பதனால் அவள் அந்த இரகசியத்தை விபரிக்க வேண்டியிருந்தது.

“உங்க மூணூ பேருக்கும் வல்லான் சிற்றரசைப் பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு எவ்வளோ தெரியும்னு எனக்குத் தெரியல. எனக்குத் தெரிஞ்சதையெல்லாம் இப்போ சொல்றேன். வல்லான்பதி அப்படீங்கிற ஊரை தலைநகராகக் கொண்டு வல்லான் சிற்றரசர்கள் கி.பி 1400 களின் முற்பகுதி வரைக்கும் அரசாட்சி நடத்தினாங்க. அந்த அரசின் பிற்கால ஆட்சியாளர்களோட திறமையின்மையினால, அவங்களோட ஆட்சி கொஞ்சம் கொஞ்சமா நலிவடைஞ்சுக்கிட்டிருந்திச்சி. ஆட்சி ஆதிகாரத்துல ஆர்வம் இல்லாதவனும், பெரும் சிவ பக்தனுமான அந்தச் சிற்றரசினுடைய இறுதி மன்னனான ஏழாம் வல்லமறவன் ஆட்சியில இருந்தப்போ, வேளிவேந்தன் அப்படீங்கிற மற்றொரு குறுநில அரசன் வல்லான்பதி கோட்டையை முற்றுகையிட்டான். திறமையோ தைரியமோ இல்லாத வல்லமறவனுக்கு, வேளிவேந்தன்கிட்ட சரணடையிறதத் தவிர வேறு வழி எதுவும் இருக்கல. அவன் கோட்டையையும் அதிகாரத்தையும் தானே முன்வந்து வேளிவேந்தன்கிட்டக் கொடுத்தது மட்டுமல்லாம, அதுக்கப்பறமா சிவனடியாராகச் சந்நியாசம் பூண்டு அங்கிருந்து வெளியேற விரும்பினான். எதிர்ப்பேயில்லாம தன் அரசை வல்லமறவன் தாரை வார்த்துக் கொடுத்ததனாலையும், சந்நியாசம் பூண விரும்பினதனாலையும், வேளிவேந்தன் வல்லமறவனைக் கொலை செய்யாம பெரும் அரச கௌரவங்களோடு அங்கிருந்து வெளியேற அனுமதிச்சான். தன்னோட ஆட்சிச் சுமையை இல்லாது செய்து, தன்னை ஒரு சிவ சந்நியாசியாக ஆட்கொண்டது சிவபெருமான்தான்னு மனசார நம்பிய வல்லமறவன், கோட்டையை விட்டு வெளியேறும்போது வேளிவேந்தனின் அனுமதியோட, வல்லான் சிற்றரசின் எருதுச் சின்னம் பொறிக்கப்பட்ட பொன்னாலான அரச பொக்கிஷம் ஒன்றை வல்லான்பதி திருநீலகண்டன் கோயில் திருப்பணிக்குக் கொடையாகக் கொடுத்துட்டுப் போனான். ஆனா, திருநீலகண்டன் கோயில் பூசகர்கள் அவன் கொடுத்த அரச பொக்கிஷத்தைக் கோயில் திருப்பணிச் செலவுகளுக்காகப் பயன்படுத்த விரும்பாம, முற்றாக அழிந்துபோன வல்லான் சிற்றரசின் ஞாபகார்த்தமாகவும், ஏழாம் வல்லமறவ மன்னனின் சிவ பக்திக்கு அடையாளமாகவும் அதை கோயில் கருவறையின் அடியில பாதுகாப்பாக வைச்சு, அதுக்கு மேல கோயில் எழுப்பிட்டாங்க. நாம இப்போ அந்த வல்லான் பொக்கித்தைத் தேடித்தான் போய்ட்டிருக்கோம்.“

என்று சொல்லியவாறு அச்சுரா பேச்சை நிறுத்திவிட்டு அனைவரின் முகத்தையும் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த கேள்வி டேவிட்டிடமிருந்து வந்தது.

“இது தெரிஞ்ச கதைதானே! 1991 ஆம் ஆண்டு வள்ளன்குறிச்சி அப்படீங்கிற ஊர்ல கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள்லதான் நீ இப்போ சொன்ன வல்லான் பொக்கிம் பத்தின தகவல் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டிச்சி. அதைத் தொடர்ந்து ஆர்கியாலஜிக்கல் டிபார்ட்மென்ட் வல்லான்பதி கிராமத்துல ஒரு தனிக் கேம்ப் அமைச்சு அந்தப் பொக்கித்தைத் தேடினாங்க. அவங்களால அங்கிருக்கிற எந்தவொரு கோயில்லையும் அப்படியொரு பொக்கித்தைக் கண்டுபிடிக்கவே முடியல. பிற்பட்ட கால படையெடுப்புக்களினால, அது கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம்னு முடிவுக்கு வந்தாங்க. அத்தோட அந்தப் ப்ராஜெக்டையும் நிறுத்திட்டாங்க. இப்படி நம்ம டிபார்ட்மென்ட் சல்லடை போட்டு அலசிக்கூட கண்டுபிடிக்க முடியாத அந்தப் பொக்கித்தை நம்மளால கண்டுபிடிக்க முடியும்னு எப்படிச் சொல்ற?“

“நீ சொன்னது ரொம்பச் சரி. நம்ம டிபார்ட்மென்ட்னால கண்டுபிடிக்க முடியாத அந்தப் புதையலை நாம தான் கண்டுபிடிக்கப்போறோம்.”

“ஆனா எப்படி? இப்போ இருக்கிற வல்லான்பதிக்கும், அது தலைநகராக இருந்தப்போ இருந்த வல்லான்பதிக்கும் நிறையவே மாறுபாடு இருக்கு. பிற்காலப் படையெடுப்புக்கள்னால, ரொம்பவும் சூறையாடப்பட்டு அது தன்னோட செல்வங்களைப் பூராவும் இழந்தது மட்டுமல்லாம, அது ஒரு ராசதானியாக இருந்ததுக்குண்டான அடையாளங்களே அங்கு கிடையாது. இதுதான் உங்க தலைநகர்னு சொன்னா இறந்து போன வல்லான் சிற்றரசர்கள்கூட நம்ப மாட்டாங்க.“

“ஆமா! நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. இதுதான் உங்க தலைநகர் வல்லான்பதின்னு சொன்னா, வல்லான் சிற்றரசர்கள் நிச்சயமா நம்ப மாட்டாங்க. ஏன்னா, உண்மையிலேயே இது அவங்களோட தலைநகராக இருந்த வல்லான்பதி கிடையாது.“

“அப்படீன்னா?“

“நீ சந்தேகப்படுறது சரிதான். வல்லான் சிற்றரசர்கள் அரசாட்சி நடத்திய வல்லான்பதி அப்படீங்கிற ஊரு உண்மையில இது கிடையாது. பிற்கால படையெடுப்புக்களினாலேயோ அல்லது வல்லான்பதியை ஆக்கிரமிச்ச ஆட்சியாளர்களுடைய சௌரியத்துக்காகவோ வல்லான்பதி அரசு இடம் பெயர்ந்து இப்போ இருக்கிற வல்லான்பதிக்கு வந்திருக்கலாம்னு நான் நம்புறேன். இப்போ நாங்க போய்கிட்டிருக்கது அந்த உண்மையான வல்லான்பதியைத் தேடித்தான்.“

“ இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?“

“கொற்றன்காதி எழுத்தோலைகள்!“

“கொற்றன்காதி எழுத்தோலைகளா? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஏழாம் வல்லமறவ மன்னனுடைய ஆட்சிக்காலம் கி.பி 1400 இன் முற்பகுதின்னு தெளிவாத் தெரியும். ஆனா, கொற்றன்காதி எழுத்தோலைகள் எழுதப்பட்டது கி.பி 1260 க்கு உட்பட்ட காலப்பகுதி. “

“நீ சொல்றது சரி. ஆனா, சம்பந்தம் இருக்கு. கொற்றன்காதி அப்படீங்கிற கவிஞன் தென்புலத்தில இருந்து புறப்பட்டு பெரும்பாலும் கீழைக் காடுகளினூடாகப் பயணம் செஞ்சு வீராதேசம், வைகுலமகிழி, பக்குவஞ்சோலை, கரமேலாறு, வல்லான்பதி, வளரிக்கோட்டம் வழியாக திருக்குவன்கோட்டம் வரைக்கும் நடந்தே பயணம் செய்தாரு. அவர் பயணம் மட்டுமே செய்யாம, பயணத்தில் அவர் கண்ட காட்சிகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் அழகிய செய்யுள்களாக ஓலையிலே எழுதினாரு. அதுக்குப் பேர்தான் `கொற்றன்காதி பயண ஓலை`! அந்த ஓலையின்படி, கொற்றன்காதி பயணம் செய்த திசைகளும் இடங்களும் தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டிருக்கு. அதுலதான் நான் ஒரு விசயத்தைக் கண்டுபிடிச்சேன். அதுல கரமேலாற்றில் இருந்து நேர் கிழக்கில் ஒரு காத தூரத்தில் இருக்கிற வல்லான்பதியை அவர் சென்றடைஞ்சதாகக் குறிப்பு இருக்கு. ஆனா, கரமேலாற்றில் இருந்து வடமேற்குத் திசையிலதான் இப்போ இருக்கிற வல்லான்பதி அமைஞ்சிருக்கு. அப்படீன்னா, கொற்றன்காதி குறிப்பிட்ட வல்லான்பதி அப்படீங்கிறது, இப்போ இருக்கிற வல்லான்பதி கிடையாது. நாம இப்போ போய்கிட்டிருக்கிறது, கொற்றன்காதி குறிப்பிட்டதும், வல்லான் சிற்றரசர்கள் அரசாண்டதுமான அசல் வல்லான்பதியைத் தேடித்தான்.“

“சரி, அப்படியே இருந்தாலுங்கூட நாங்களும் எதுக்காக கொற்றன்காதி பயணத்தை ஆரம்பிச்ச தென்புலத்துல இருந்து நடந்துகிட்டிருக்கோம்? வல்லான்பதி எங்க இருக்குன்னு எங்களுக்குத் தெரியாட்டியுங்கூட, கரமேலாறு இருக்குற இடம் நல்லாவே தெரியுமே. நாங்க அங்கிருந்து பயணத்தை ஆரம்பிச்சிருந்தா வெறும் ஒரு காத தூரப் பயணத்திலேயே வல்லான்பதியைக் கண்டுபிடிச்சிருக்கலாமே?“

“அப்படிச் செய்திருக்க முடியும். ஆனா, வல்லான்பதியைப் போலவே இப்போ இருக்கிற கரமேலாறு அப்படீங்கிற ஊரும் பண்டைய கரமேலாறு இல்லாம, பின்னைய நாட்களிலே உருவான புதிய கரமேலாறாக இருந்திச்சினா, நம்ம உழைப்பெல்லாம் வீணாப் போயிடும். அப்பறோம் ஆத்துல போட்டதை குளத்துல தேடின கதையாக புதையலை வேறு எங்கேயோ தேடிக்கிட்டிருப்போம். அதனாலதான் கொற்றன்காதி பயணிச்ச அதே பாதையிலேயே நாங்களும் பயணிச்சு அந்த வல்லான்பதியை கண்டுபிடிக்கலாம்னு முடிவு பண்ணினேன். பல நூறு ஆண்டுகள் கடந்திருந்தாலுங்கூட, இந்த நாலு நாள் பயணத்துல நாம பார்த்த பல இடங்கள் மட்டுமல்லாம, இப்போ நம்ம எதிர்ல இருக்கிற இந்த மலைப் பாறையுங்கூட கொற்றன்காதியின் குறிப்புக்களோடு ஒத்துப்போகுது. “

அவள் சொன்னதும் அந்த மூவரும் எதிரில் இருந்த மலைப் பாறையை வியப்போடு பார்த்தார்கள்.

பின்பு விமல் கேட்டான்,
“எல்லாமே சரி! ஆனா, வள்ளன்குறிச்சி செப்பேடுகளின்படி வல்லமறவன் அரச பொக்கிம் ஒன்றை திருநீலகண்டன் கோயிலுக்குக் கொடுத்ததாக மட்டும்தான் குறிப்பு இருக்கு. அது என்ன பொக்கிம்னு எந்தத் தகவலும் கிடையாது. அப்படி இருக்கிறப்போ, அது ரொம்பச் சின்னப் பொருளாக இருக்காதுன்னு என்ன நிச்சயம். வேளிவேந்தனுடைய அனுமதியோட வல்லமறவன் கொடையாகக் கொடுத்த பொருளுங்கிறதனால, அது ரொம்பப் பெறுமதியான பொருளாக இருக்கும்னு எனக்குத் தோணலை. அப்படிப் பெறுமதி குறைஞ்ச பொருளாக இருக்கிற பட்சத்துல, நாங்க இப்படிக் காட்டுலையும் மேட்டுலையும் நடந்து பட்ட கஸ்டம் எல்லாமே வீணாப் போயிடாதா?“

“நீ சொல்றது மாதிரி அது சின்னப் பொருளாக இருக்க நிறையவே வாய்ப்பிருக்கு. ஆனா, வள்ளன்குறிச்சி செப்பேடுகளின்படி பொன்னாலான ஒரு அரச பொக்கித்தைக் கொடுத்ததாகத்தான் தகவல் இருக்கு. ஆகையினால, அது என்ன பொருளாக இருந்தாலும் நிச்சயமாக பொன்னாலான பொருளாகத்தான் இருக்கும் அப்படீங்கிறதுல எனக்குத் துளியளவும் சந்தேகமில்ல.“

அச்சுராவின் அனுமானங்களை மற்றவர்களும் ஆமோதித்தனர். அதன் பின்னர் அச்சுராவைப் போல மற்றைய மூவருக்கும் கூட பயணத்தில் ஆர்வம் தொற்றிக்கொண்டுவிட்டது. அவர்கள் முன்பை விட வேகமாக முன்னேறத் தொடங்கினார்கள்.

தொடர்ச்சியான நடைபயணங்களினூடே ஆங்காங்கே சில கிராமங்களின் கோயில் மடங்களில் இளைப்பாறிக் கொண்டும், கிராமத்தில் கிடைக்கக் கூடிய உணவுகளை உண்டுகொண்டும் அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆர்கியாலஜிஸ்ட் என்ற அவர்களது அடையாளத்தினால், கிராமத்தவர்கள் அவர்கள் மீது எந்த ஐயமும் கொள்ளவில்லை. அவர்கள் அதிகாலை வேளையில் பயணத்தைத் தொடங்கி இருள் படியத் தொடங்கும் முன்பு பயணத்தை நிறுத்திக் கொள்வார்கள். இவ்வாறாக, காட்டுப் பாதைகளையும் பல கிராமங்களையும் ஊடறுத்து பயணித்துக் கொண்டிருந்த அவர்கள், எட்டாவது நாள் மாலை வேளையில் கரமேலாற்றை அடைந்தார்கள். அச்சுரா கூறியது போலவே கரமேலாற்றிலிருந்து வடமேற்குத் திசையிலேயே தற்போதுள்ள வல்லான்பதி அமைந்திருந்தது. ஆனால், அசலான வல்லான்பதியை அடைய அவர்கள் அங்கிருந்து நேர் கிழக்காக பயணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் விசாரித்துப் பெற்ற தகவல்களின்படி, அங்கிருந்து நேர்கிழக்குத் திசையில் ஒரு காத தூரத்தில் வல்லான்பதி அமைந்திருக்கக்கூடும் என அனுமானிக்கப்படும் இடத்தில் வல்லபுரி என்ற ஒரு பழமையான கிராமம் இருப்பதாக ஊர் மக்கள் மூலமாக அறிய முடிந்தது. பண்டைய வல்லான்பதிதான் பின்னைய நாட்களில் பெயர் மருகி வல்லபுரி ஆகியிருக்கக்கூடும் என்பது அவர்களது அனுமானமாக இருந்தது. எதுவானாலும் நாளை தெரிந்துவிடும் என்று எண்ணியபடி அன்றைய இரவை கரமேலாற்றிலேயே கழித்துவிட்டு அடுத்த நாள் அதிகாலையில் கிழக்குத் திசையில் பயணப்பட நினைத்திருந்த அவர்களுக்கு, கிராமத்தவர்கள் வாயிலாக அந்தத் துரதிஸ்டகரமான செய்தி கிடைத்தது.

வெட்டன்குளம் என்ற ஊரில் புதிதாக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கோட்டன் அணை அடுத்தநாள் அதிகாலையில் நீர் திறக்கப்படவிருந்த செய்தியே அது. அந்த அணை திறக்கப்பட்டால், கரமேலாற்றின் கிழக்கு எல்லை வரை நீரில் மூழ்கிவிடும். அவ்வாறு நீரில் மூழ்கும் பகுதிகளில் முழுமையாக நீரில் மூழ்கப்போகும் ஊர்களில் ஒன்றாக பழைய வல்லான்பதி என்று சந்தேகிக்கப்படும் வல்லபுரியும் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே நீரில் மூழ்கக் கூடிய ஊரைச் சேர்ந்த மக்களுக்கு அரசு மாற்று இடங்களை வழங்கி அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டிருந்த செய்தியும் அவர்களுக்குக் கிடைத்தது. எனவே நீர் வரத்திற்கு முன்னதாக அன்றைய இரவுக்குள் அவர்கள் வல்லபுரியை அடைய வேண்டியிருந்தது. ஆகையினால் அவர்களுக்குத் தாமதிக்க நேரமிருக்கவில்லை. அந்தக் காரிருள் சாலைகளினூடாக நேர் கிழக்குத் திசையை நோக்கி அவர்கள் டார்ச் லைட்டுகளோடு புறப்பட்டார்கள்.

கடந்த எட்டு நாட்கள் பயணத்தைக் காட்டிலும் அந்த இறுதிச் சில மணித்தியாலப் பயணங்களே அவர்களுக்குப் பெரும் சவாலானதாக இருந்தது. ஓட்டமும் நடையுமாக அவர்கள் வல்லபுரியை சென்றடையும்போது அதிகாலை மூன்று மணியைக் கடந்திருந்தது. ஊரிலிருந்து மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட நிலையில், ஆள் நடமாட்டமற்ற அந்தக் கிராமம் நிசப்தத்தில் உறைந்து கிடந்தது. வழியில் காணக்கிடைத்த பழங்காலக் கோயில்களும், சிதைந்த கோட்டைகளின் எஞ்சிய இறுதி எச்சங்களும் இதுதான் வல்லான் சிற்றரசுகள் அரசாட்சி புரிந்த வல்லான்பதி என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. ஒரு பாரம்பரிய நகரம் கவலையீனத்தினால் அத்தனை காலங்களாகத் தன் பெருமையிழந்திருந்தது மாத்திரமன்றி, இறுதியில் நிரந்தரமாகத் தண்ணீருக்குள்ளும் மூழ்கிவிடக் காத்திருந்தது. ஆனாலும், அவர்கள் நால்வருக்கும் அதைப் பற்றிக் கவலைப்பட சிறிதளவும் அவகாசம் இருக்கவில்லை. அவர்களின் இலக்கு அந்தப் புதையல் மாத்திரமே.

ஊரைச் சுற்றி நோட்டமிட்டதில் ஊரின் இரு வேறு திசைகளில் இரண்டு சிவன் கோயில்கள் இருப்பதனை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அவற்றில் திருநீலகண்டன் கோயிலில்தான் புதையல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த இரண்டு சிவன் கோயில்களில் எது திருநீலகண்டன் கோயில் என்பதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் எதுவும் அங்கு இருக்கவில்லை. ஊரின் மேற்குத் திசையிலிருந்த கோயில் பகுதியளவில் கற்றழிகளாலான தொன்மையான சிற்ப அமைப்புக்களைக் கொண்டிருந்த அதே வேளை, ஊரின் தென் கிழக்குத் திசையிலிருந்த கோயில் சற்று நவீன சிற்ப அமைப்புக்களையுடையதாக இருந்தது. எனவே மேற்கு எல்லைச் சிவன் கோயில்தான் திருநீலகண்டன் கோயில் என்பதனை அனுமானித்துக் கொண்டு, அவர்கள் அங்கு புதையலைத் தேடத் தீர்மானித்தார்கள். இதற்குள்ளாகவே நீர் வரத்து சிறிது சிறிதாக ஊருக்குள் ஊடுருவ ஆரம்பித்திருந்ததை ஈரமான மண்ணின் பிசுபிசுப்புக்களில் உணர முடிந்தது. எனவே, நீர் வரத்தின் வேகம் அதிகரிக்கும் முன்பு, அவர்கள் புதையலைக் கண்டுபிடித்தாக வேண்டியிருந்தது. அதற்கு சொற்ப நேரமே அவகாசமிருந்தது.

அந்தக் கோயிலினுடைய கருவறைக் கதவின் இரும்புப் பூட்டுகளை மிகவும் சிரமப்பட்டுத் தகர்க்க வேண்டியிருந்தது. ஒருவாறாக கதவைத் திறந்தபோது, அங்கே ஐந்தடிக்கு அதிக உயரம் கொண்ட கருங்கல்லாலான பெரிய சிவலிங்கமொன்று கம்பீரமாக வீற்றிருந்தது. கருவறையின் வேறு இடங்களில் புதையலை மறைத்து வைக்கத்தக்க இடங்கள் எதுவும் சந்தேகிக்கும்படி இல்லையென்றபடியால், நிச்சயமாக அந்தப் புதையல் சிவலிங்கத்திற்குக் கீழேதான் இருக்க முடியும் என்று அச்சுரா அனுமானித்தாள். எனவே அவர்கள் சிவலிங்கத்தை நகர்த்தப் பிரயத்தனப்பட்டார்கள். இதற்கிடையில் நீர் வரத்து அதிகரித்து அவர்களின் கணுக்கால்களை நனைக்கத் தொடங்கியிருந்தது. கடுமையான பிரயத்தனத்தின் பின்னர் சிவலிங்கம் சிறிது நகர்ந்தது. ஆனாலும், அது போதுமானதாகயில்லை. அவர்கள் அதன் சிறு நகர்வுக்குக்கூட கடுமையாகப் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. இவ்வாறு தாமதித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீர் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. அங்கே கிடைத்த இரும்புத் தடிகளையும் சில மரக்குற்றிகளையும் நெம்புகோல்களாக்கிக் கொண்டு, அவர்கள் அவசர அவசரமாக சிவலிங்கத்தை நகர்த்த முயற்சித்தார்கள். இறுதியில், சிவிலிங்கம் நகர்ந்தது.

சிவலிங்கம் நகர்ந்ததும் அது முன்பு இருந்த இடத்தில் ஒரு சதுர வடிவக் குழி தென்பட்டது. நீர் உட்புகாவண்ணம் விளிம்புகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்தக் குழி, இரண்டரையடி வரை ஆழமானதாக இருந்தது. டார்ச் லைட் வெளிச்சத்தில் உள்ளே ஒரு மண்பானை இருப்பது தெரிந்தது. மாறன் கையை உள்ளே விட்டு அந்தப் பானையை வெளியில் தூக்கினான். அது கனதியானதாகவும், அதன் வாய்ப் பகுதி தோல் ஒன்றினால் மூடிக் கட்டப்பட்டும் இருந்தது. அனைவரும் வெற்றிக் களிப்பில் துள்ளிக் குதித்தார்கள். புதையல் கைக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் கூச்சலிட்டார்கள். அச்சுரா அந்தப் பானையை மூடியிருந்த தோலையகற்றி உள்ளிருந்ததை நீர் தொடாத ஒரு உயரமான பகுதியில் கொட்டினாள். உள்ளிருந்தவை வெளியில் விழுந்ததும் அச்சுரா மட்டுமல்லாமல் அனைவரதும் முகங்கள் ஏமாற்றத்தினால் வெளிறிப் போயின. அவை வல்லான் சிற்றரசின் செப்பு நாணயங்கள். வெறும் செப்பு நாணயங்களுக்காகவா இத்தனை தூரம் பயணம் செய்து வந்தோம் என்று அதிர்ச்சியானார்கள். ஏமாற்றத்தை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. அங்கே சில நிமிடங்களுக்கு பெரும் அமைதி நிலவியது. ஆனால், அச்சுரா அந்த அசௌகரியமான அமைதியைக் கிழித்துக் கொண்டு கட்டளையிடும் தொனியில் பேசினாள்.

“டோன்ட் வேஸ்ட் தி டைம். திருநீலகண்டன் கோயில்னு நாங்க இந்தக் கோயிலை நினைச்சது தப்பாயிடிச்சி. வள்ளன்குறிச்சி செப்பேட்டுல பொன்னாலான அரச பொக்கிம்னு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கு. அது பொய்யாக இருக்க வாய்ப்பில்ல. நாங்க தப்பான இடத்தில டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோம். நாங்க சீக்கிரம் தென்கிழக்குக் கோயிலுக்குப் போயாகணும். அதுதான் உண்மையான திருநீலகண்டன் கோயிலாக இருக்க வாய்ப்பிருக்கு“

“அச்சுரா! அதுக்கு இனி நேரமில்ல. நீர் வரத்து ரொம்ப அதிகமாயிடிச்சி. நாங்க சீக்கிரமா இங்கிருந்து மேடான இடத்துக்குப் போயாகணும். இல்லேனா, எங்களை யாராலும் காப்பாத்த முடியாது. அந்தக் கோயிலுக்குப் போய் புதையலைக் கண்டுபுடிக்கிற வரைக்கும் இந்தத் தண்ணி வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்காது. அது ரொம்ப ரிஸ்க்.“ விமல் பதிலுரைத்தான்.

ஆனால், அவள் அவனின் பதிலை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வேகமாக தென் கிழக்குக் கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினாள். அதன் பின்னர் அவர்களுக்கும் வேறு வழி இருக்கவில்லை. அவர்களும் கோயிலை நோக்கி முழங்காலளவுத் தண்ணீருக்குள் தடுமாறியபடி ஓடத் தொடங்கினார்கள். இதற்குள் பொழுது விடிந்து வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. அவர்கள் நால்வரும் கோயிலை அடைவதற்கு முன்பாக திடீரென நீரின் அளவு அதிகரித்து, மார்பளவு நீர் அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. இவ்வாறு நீரின் அளவு மிக வேகமாக அதிகரிக்குமென்பதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. கண்ணுக்கெட்டும் தூரத்தில் அந்தக் கோயில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருந்தது. இனியும் முன்னோக்கிச் சென்றால் தங்களால் நிச்சயமாக உயிர் பிழைக்க முடியாது என எண்ணிய அச்சுரா, தன்னால் மற்றவர்களும் செத்துவிடாமலிருக்க திரும்பிச் சென்றுவிடுவதென்ற முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அந்தத் தோல்வியை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் பெருங் கோபத்தோடு பாதுகாப்பான பகுதியை நோக்கி நீந்தியபடியும் பின்னர் ஓடியவாறும் சென்றுகொண்டிருந்தார்கள். நீர் வரத்து மிகக் குறைவாக இருந்த ஒரு மேட்டு நிலத்தை அடைந்ததும் அவர்கள் அந்தத் தென் கிழக்குக் கோயிலைத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே அந்தக் கோயிலினை தண்ணீர் கிட்டத்தட்ட மூழ்கடித்திருந்தது. அவர்களின் வல்லான் பொக்கிக் கனவும் அதனுடனேயே மூழ்கியிருந்தது. அவர்கள் பெரும் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றுகொண்டிருந்த போது, மேற்கு எல்லைக் கோயிலுக்குள்ளும் நீர் புகுந்து, சிவலிங்கத்துக்கடியில் கண்டெடுத்த பானையினை நனைத்து, அதன் மட்பூச்சுக்களை சிதைத்துவிடவும், மட்பூச்சு அகன்ற பொன்னாலான பானையில் பதித்திருந்த எருது வடிவ மரகதக்கல் மின்னிக் கொண்டிருந்தது.

முற்றும்.


- உங்களுக்கு இந்தச் சிறுகதை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இந்தச் சிறுகதை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.




June 5, 2020














நாங்கள் கருஞ்சிறுத்தையொன்று பொறியில் சிக்கி உயிரை விட்டதற்காகக் கண்ணீர் சிந்துவோம். ஆனால், பொறிகளை எலிக்கு வைத்து அவற்றைத் துடிதுடிக்கக் கொல்வதனை ஆட்சேபிக்க மாட்டோம். நாங்கள் யானை ஒன்றுக்கு அன்னாசியில் வெடி வைத்துக் கொலை செய்ததற்காக சீறியெழுவோம். ஆனால், தூண்டிலில் இரை வைத்துப் பிடித்த மீனை ருசித்து உண்போம். இங்கே தராசின் இரு பக்கமும் இருப்பது ஓர் உயிர்தான். ஆனால், தராசின் முள் எப்போதுமே நடு நிலையாக இருப்பதில்லை. இந்த முரண் எங்கள் சமூகத்தினால் பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை. அல்லது புரிந்து கொள்ளப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. கடந்த சில நாட்களாக பெரும் பேசு பொருளாய் ஆகியிருந்த இலங்கையின் நல்லதண்ணி என்னும் இடத்தில் பொறியில் சிக்கி காயமுற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கருஞ்சிறுத்தைக்காகவும், கேரளாவில் வெடி வைக்கப்பட்டிருந்த அன்னாசியை உண்டதனால் வாய் சிதைந்து உயிரை விட்ட கர்ப்பிணி யானைக்காகவும் சமூக ஊடகங்களில் அள்ளி வீசப்பட்டிருக்கும் அனுதாபங்களினூடே நடந்து சென்று யதார்த்தத்தை நோக்கிப் பயணிப்போம் வாருங்கள்.

உயிரிழந்த அந்த இரு விலங்குகளுக்காகவும் நாங்கள் கவலைப்படுவது ஞாயமானதுதான். ஆனால், எதன் அடிப்படையில் என்பதே இங்கு எழுப்பப்பட வேண்டிய வினாவாக இருக்கின்றது. அவற்றுக்காக நாங்கள் கவலைப்பட வேண்டியது, பரிதாபகரமான மரணத்திற்காக மாத்திரமல்ல. மாறாக அருகிக் கொண்டு வரும் தொன்மையான ஓர் உயிரினத்தை எம்மால் காப்பாற்ற முடியவில்லையே என்பதற்காகத்தான். அவற்றின் பரிதாபகரமான மரணத்திற்காக மட்டுமே வருத்தப்படுவதாகயிருந்தால், முன்பே சொன்னது போல பொறி வைத்துக் கொல்லப்படும் எலிகளுக்காகவும், இரை வைத்துப் பிடிக்கப்படும் மீன்களுக்காகவும் ஏன் நாங்கள் வருத்தப்படுவதில்லை? ஏனெனில், உலகின் உயிர்ப் பரப்பில் தாராளமாக நிறைந்து கிடக்கும் உயிரினங்களின் இறப்பைப் பற்றி நாங்கள் கரிசனை கொள்வதில்லை. எங்கள் கரிசனைகள் எல்லாமே அரிதான உயிரினங்களை மாத்திரம் சார்ந்தது. எனவேதான், அந்தக் கருஞ்சிறுத்தையினதும், கர்ப்பிணி யானையினதும் நேயமற்ற கொலைக்காக நாங்கள் பரப்பவேண்டியது அனுதாபங்களையல்ல மாறாக விழிப்புணர்வுகளை என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். எங்கள் அனுதாபங்களை உயிரிழந்த அந்த விலங்குகள் கூட எதிர்பார்க்கப் போவதில்லை. அவற்றின் எதிர்பார்ப்புகளாக விழிப்புணர்வுகள் மட்டுமே இருக்க முடியும்.

இன்றைய நிலையில் ஒரு மில்லியன் அளவிலான வன விலங்குகள் அழியும் தருவாயில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். இதற்குப் பெரும்பாலான காரணமாக இருப்பது நீங்களும் நானும்தானேயன்றி வேறொன்றல்ல. நேரடியாகவும் மறைமுகமாகவும் நாங்கள் இயற்கை மீது செலுத்துகின்ற பாரியளவிலான செல்வாக்குகளே இன்று இந்த அரிய விலங்கினங்களின் உலக இருப்புக்களை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாக அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பத்து உயிரினங்களையேனும் இன்றைய நாளில் அடையாளம் கண்டு வைப்பதன் மூலமாக, ஒரு கர்ப்பிணி யானையையும் ஒரு அரிய கருஞ்சிறுத்தையையும் போல மற்றோர் இயற்கையின் அரிய படைப்பை இழந்துவிடாமல் இருப்போம்.


10. பிலிப்பைன்ஸ் முதலைகள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் சதுப்பு நிலங்களில் மட்டுமே வாழும் இந்த அரிய வகை முதலைகளானவை அண்மைய கணக்கெடுப்புக்களின்படி 200 மட்டுமே எஞ்சியிருப்பதாக கூறப்படுகிறது. தோல்களுக்காக வேட்டையாடப்படும் இவ்வகை முதலைகள், இதே நிலை நீடிக்குமானால், உலகில் இருந்து முற்றாக காணாமல் போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதே நிதர்சனம்.

9. வகுய்டா

1958 ஆம் ஆண்டிலேயே முதன் முறையாகக் கண்டறியப்பட்ட வகுய்டா என்ற டொல்பின் வகை அரிய உயிரினங்கள் கால நிலை மாற்றத்தினால் மிக விரைவாக அழிவடைந்துகொண்டு வரும் உயிரினமாகப் பட்டியற்படுத்தப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு கணக்கெடுப்பிலேயே அவற்றில் தொண்ணூற்று இரண்டு விழுக்காடு வகுய்டாக்கள் அழிவடைந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது.

8. கருப்புக் காண்டாமிருகம்

கொம்புகளினது சந்தை மதிப்புக் காரணமாக, ஏராளமாக வேட்டையாடப்பட்ட இந்தக் காண்டாமிருகங்களானவை, இன்றளவில் வெறும் 5400 ஐ விடக் குறைவானதாகவே உலகில் உயிர் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஐம்பதே ஆண்டுகளுக்குள் அவற்றின் தொண்ணூற்றெட்டு விழுக்காடு காண்டாமிருகங்கள் கொன்றழிக்கப்பட்டிருக்கின்றன.

7. சுமத்ரா ஊரங்குட்டான்

கிழக்காசியக் காடுகளில் அதிகம் வசிக்கும் இந்த ஊரங்குட்டான்களின் அழிவினால் காடுகளும், காலநிலையும் வெகுவாகச் சமநிலை தடுமாறியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பழங்களை உணவாக உண்ணும் இவை, காடுகள் பூராகவும் அப் பழங்களின் விதைகளைப் பரப்பும் இயல்பை உடையவை. காடழிப்புகளால் அதிகளவில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இவை, அண்மைய கணக்கெடுப்புக்களின்படி அண்ணளவாக 14 600 மட்டுமே எஞ்சியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

6. போர்போயிஸ்

சீனாவின் யாங்க்ட்சே ஆற்றில் மாத்திரம் வசிக்கும் இந்த அரிய வகை உயிரினமானது, டொல்பின்களைப் போன்று நுண்ணறிவும் உடலமைப்பும் கொண்டவையாகும். தற்போதைய கணக்கெடுப்புக்கள் இவற்றில் 1800 க்கு குறைவானவையே எஞ்சியிருப்பதாக உறுதிப்படக் கூறுகின்றன.

5. தென் சீனப் புலி

தென்சீனக் காடுகளில் மட்டுமே வசிக்கும் இப் புலியினமானது 1950 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 4000 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் வெகுவாகக் குறைவடைந்து 100 இற்குக் குறைவான புலிகளே இருக்கிறதென்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. பாதக நிலையை உணர்ந்த சீன அரசின் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவற்றின் இன விருத்தியில் தற்போது சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4. ஹாவ்க்ஸ்பில் கடல் ஆமைகள்

வண்ணமயமான ஓடுகளுக்காகவும், இறைச்சிக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படும் இவ்வகை ஆமைகள் வெப்ப மண்டலக் கடற்பகுதிகளில் அதிகம் வாழும் உயிரினமாகும். அவற்றில் எண்பது சதவீதத்திற்கு அதிகமானவை ஏற்கனவே வேட்டையாடப்பட்டுவிட்ட நிலையில், சொற்ப அளவிலானவை மாத்திரமே எஞ்சியிருக்கின்றன.

3. ஏசியன் யுனிகோர்ன்

இது ஒரு காட்டு ஆடு வகை உயிரினமாகும். வியட்னாம் மற்றும் லாவோஸ் காடுகளில் மட்டுமே இவை அவதானிக்கப்பட்டிருக்கின்றன. வெகு சில தடவைகள் மாத்திரமே ஆராய்ச்சியாளர்களால் அவதானிக்கப்பட்டிருக்கும் இவ்விலங்குகளின் சரியான எண்ணிக்கை விபரம் தெரியாவிட்டாலும், மிகக் குறைந்தளவானவைகளே உயிருடனிருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகிறது.

2. ஆபிரிக்க மலைக் கொரில்லா

ஆபிரிக்க மலைகளில் மட்டுமே காணப்படும் இத்தகைய கொரில்லாக்கள் இன்றளவில் 900 அளவிலேயே எஞ்சியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. போதிய சூழல் பாதுகாப்பின்மைகளால் விரைவாக அழிவடைந்து செல்கின்ற விலங்குகளின் பட்டியலில் இதற்கும் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

1. அமுர் சிறுத்தை

ரஸ்யாவின் அமுர் நதிக்கரைகளில் மாத்திரம் வசிக்கும் இத்தகைய அரிய வகைச் சிறுத்தைகளானவை இன்றைய நிலையில் அறுபதை விடக் குறைவாகவே காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மணிக்கு முப்பத்தேழு மைல்கள் வேகத்தில் ஓடக்கூடிய இவை, பதினேழு அடிகள் உயரத்தைத் தாண்டக்கூடியவை என்று கூறப்படுகிறது.


இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவை வெறும் பத்து உயிரினங்கள் மாத்திரம்தான். இதேபோன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தங்களின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன. இவற்றின் இருப்பு கேள்விக்குட்படுகிற போது, எமது இருப்பும் கேள்விக்குட்பட்டுத்தான் போகும். உலகையும் இயற்கையையும் சீராக வைத்திருக்கும் உயிர்ப் பல்வகைமை அற்றுப்போகுமாயின் அதற்கு முன்னரே மனித இனம் வேரோடு மடிந்திருக்கும். எனவே, அனுதாபங்களையல்லாது விழிப்புணர்வுகளைப் பரப்புவோம். பரிதாபங்களுக்காக அல்லாமல் இயற்கையின் உயிர்ப்பை உறுதி செய்வற்காக அரிய விலங்கினங்களைப் பாதுகாப்போம். ஆகையினால், இனியும் கண்ணீர் வேண்டாம். விழித்தால் போதும். விழி!


- உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.