June 26, 2020

கறுப்பு வெள்ளை














“அங்கு அடிமைச் சந்தைகள் உருவாயின. அடிமை வியாபாரம் ஒரு அதிகாரபூர்வ தொழிலாக மாறியது. அடிமைகளை வாங்கவும் விற்கவும் ஊருக்கு ஊர் புரோக்கர்கள் முளைத்தார்கள். ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் அந்தச் சந்தைகளில் பகிரங்கமாக விலை கூவி விற்கப்பட்டார்கள். நாளிதழ்களிலும், பத்திரிகைளிலும் `அடிமைகள் விற்பனைக்கு` விளம்பரங்கள் வெளியாயின. அடிமைகளை வாங்க வந்தவர்கள் கிள்ளிப் பார்த்தும், குத்திப் பார்த்தும், எலும்புகளைத் தட்டிப் பார்த்தும் விலைக்கு வாங்கினார்கள். திடகாத்திரமான அடிமைகளை அதிக விலை கொடுத்து வாங்க ஆட்கள் போட்டி போட்டார்கள்.”

இப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் அடிமை வரலாறு. இன்று ஜோர்ஜ் பிளைடின் நிற வெறிக் கொலையைக் கண்டு உலகமே கொதித்தெழுகிறது. ஆனால், பல்லாயிரம் ஜோர்ஜ் பிளைட்கள் இதை விடக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கதைகள் கறுப்பினத்தவர்களின் வரலாற்றுப் பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன. நிறத்தின் பெயரால் விலங்குகளுக்கு ஒப்பாக பல கோடி கறுப்பின மக்கள் வெள்ளையர்களின் காலடியில் பல நூற்றாண்டுகளாக வீழ்ந்து கிடக்கச் செய்யப்பட்ட மனித இனத்தின் மிக மோசமான அவல நாகரீகத்தை அமெரிக்க வெள்ளைத் தோல் வர்க்கம் மிகச் சாதாரணமாகச் செய்தது. ஓர் இனமே எழுந்து நிற்கத் துணிவற்று வெள்ளையினத்தின் அடக்கு முறையில் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்தொழிந்துகொண்டிருக்கையில், அதனில் இருந்து தன் இனத்தைக் காக்க வீழ்ந்து கிடக்கும் மக்கள் பெருங்கூட்டத்தின் மனங்களில் விடுதலைத் தீயைப் பற்ற வைக்கத் தொடங்குகிறான் ஒருவன். அவன் இட்ட விடுதலைத் தீயின் சுவாலை அமெரிக்க சுதந்திர தேவிச் சிலையின் உயரத்தை விடவும் மிகப் பெரும் சோதியாக எரியப் போகிறதென்பதை அப்போது வெள்ளை நிற வெறியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 


நூல் விமர்சனம் – கறுப்பு வெள்ளை (மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை)

1968 ஆம் வருடம் ஏப்ரல் ஐந்தாம் தேதி மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மாபெரும் ஆளுமை கொலை செய்யப்பட்ட போது, அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையொன்று இவ்வாறு எழுதியது;
“நாட்களும் வருடங்களும் உருண்டோடினாலும் மார்ட்டின் லூதர் கிங்கை மரியாதையோடு நினைத்துப் பார்க்கிற மனிதர்கள் கொஞ்சம் பேராவது எப்போதும் இருப்பார்கள். ஏனெனில், அவர் ஆத்ம பலத்தால் வரலாற்றைத் திருப்பிப் போட்டவர்.“

ஆம்! அவர் வரலாற்றினை புரட்டித்தான் போட்டார். அவர் கிட்டத்தட்ட தன் இனத்தின் வரலாற்றை மீள எழுதினார் என்றால் அதில் மிகை எதுவும் இருக்கப்போவதில்லை. 1929 ஆம் வருடம் ஜனவரி 15 ஆம் தேதி மார்ட்டின் லூதர் கிங் பிறந்த போது, அது அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கெதிராக இனவெறி கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஓர் காலப்பகுதியாக இருந்தது. சட்ட ரீதியாக கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்திருந்த போதிலும், வெள்ளையர்களுக்கு இணையாக சமவுரிமை கிடைத்திராத ஓர் காலப்பகுதியாக அது விளங்கியது. கறுப்பினத்தவர்களுக்கான விடுதலைச் சட்டங்கள் வெறும் காகித எழுத்துக்களாக மாத்திரம் எழுதப்பட்டு அவை வெள்ளை நிற இனவெறியர்களின் நிறத் துவேசத்தின் அழுக்குகளை மீறி செயலாற்ற முடியாதவையாகக் கிடந்தன. 

தன் சிறு பராயம் முதல் நிற வெறியின் கோர முகத்தைப் பார்த்தே வளர்ந்த மார்டினுக்கு முதலில் வெள்ளையர்கள் மீது கடுங்கோபமும் வஞ்சம் தீர்க்கும் குரூர எண்ணமும் தோன்றியதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால், அந்த எண்ணங்கள் நீண்ட காலம் நீடிக்கவில்லை. மகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டத்தினைப் பற்றி அறிந்துகொள்ள நேர்ந்த அவருக்கு, அகிம்சை ஆயுத்தத்தின்பால் தீரா நம்பிக்கை உதயமாகியது. அதுவே தன் இனத்தின் அடிமை விலங்கையும் தகர்க்கக்கூடிய ஒரேயொரு சக்தி என்பதை அவர் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டார். அகிம்சை ஆயுதத்தை கையிலெடுத்துக்கொண்ட அவர், அதன் மூலமாக முதலில் தன்னைத் தானே மீளப் புதுப்பித்துக் கொண்டார்.  அதற்கடுத்ததாய் அந்த அகிம்சைத் தீயை மெல்ல மெல்ல அடிமை வர்க்கமாய் வீழ்ந்து கிடந்த தன் இனத்தின் உள்ளங்களிலும் பற்ற வைக்கத் தொடங்கினார். அது கொழுந்துவிட்டு எரியப் போகும் நாளை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அமெரிக்க அதிபராக இருந்து பின்னர் கொல்லப்பட்ட ஆபிரஹாம் லிங்கனின் முயற்சியினால், கறுப்பின மக்களின் அடிமை விலங்குகள் தகர்க்கப்பட்டு, அவர்களுக்கும் அமெரிக்காவில் சம உரிமையுள்ளது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அது நடைமுறைக்கு வந்தபாடில்லை. எழுத்தில் எழுதப்பட்ட சட்டம் வெறும் ஏட்டுச் சுரக்காயாக மாத்திரமே இருக்க, கறுப்பின மக்கள் தொடர்ந்தும் நிற வெறியர்களின் வக்கிரங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது. கறுப்பின மக்களும் வெள்ளையர்களைப் போலவே கிறிஸ்தவர்களாய் இருந்த போதிலும், அவர்கள் வெள்ளையின மக்களுக்கான கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. உணவகங்களில் கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களுக்குச் சமமாக உணவருந்தவோ அமரவோ முடியாது. கறுப்பினக் குழந்தைகள் வெள்ளையினக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களின் வாசல் படியைக் கூட மிதிக்க முடியாது. அவர்கள் அவர்களுக்குரிய கறுப்பினப் பள்ளிக்கூடங்களில் மட்டுமே கல்விகற்க முடியும் என்பதுடன், அப்படியான பள்ளிக்கூடங்களால் வெள்ளையர்களின் பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாதியளவுகூட நிதியைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. இவ்வளவுயேன், பேருந்துகளில் கறுப்பினத்தவர்கள் முன் இருக்கைகளில் அமர்ந்து கொள்ள முடியாது. அவை வெள்ளையர்களுக்காக மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன. அவ்வாறான இருக்கைகள் வெறுமையாக இருந்தாலும்கூட அவற்றில் கறுப்பினத்தவர்கள் அமர்ந்துகொள்ள முடியாது. அவர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பின்வரிசை இருக்கைகளில் மட்டுமே அமர முடியும். 



இந்த அடக்கு முறைகளையெல்லாம் மார்ட்டினால் பலரைப் போல சகித்துக் கொள்ளவோ, அதற்கிசைந்து வாழப் பழகிக் கொள்ளவோ முடியவில்லை. மாறாக அவர் கனவு கண்டார். அமெரிக்கக் கறுப்பின வர்க்கம் தன் முதுகெலும்பை நிமிர்ந்தி நிற்கக்கூடிய நாள் ஒன்றை உருவாக்குவதனையே அவர் கனவாகக் கண்டார். அவர் எதிர்பார்த்திருந்த நாளை பேருந்துகளின் வாயிலாக அடைய முடியும் என அவர் நம்பினார். ஆம்! அவரின் எண்ணப்படியே தொடங்கியது மாபெரும் பேருந்து பகிஸ்கரிப்பு அகிம்சைப் போராட்டம். அமெரிக்க பேருந்துகளில் பயணம் செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்களாக இருந்த போதிலும், அவர்களால் வெள்ளையர்களுக்கு இணையாக பேருந்தில் பயணம் செய்வதென்பது நடவாத காரியம். பின்வரிசை இருக்கைகளைத் தவிர்த்து எவரேனும் வெள்ளையர்களுக்கான முன்வரிசை இருக்கைகளில் அமர்ந்துவிட்டால், அவர்கள் போலிஸாரால் கைதுசெய்யப்படுமளவிற்கு அங்கே நிற வெறி தலை விரித்தாடியது. எனவேதான், இவற்றையெல்லாம் கண்டித்து மார்ட்டின் வெள்ளையர்களின் நிறவெறி அகந்தையின் மடியில் கை வைப்பதெனத் தீர்மானித்தார். அவர் அறிவித்தது போலவே பேருந்து பகிஸ்கரிப்புத் தொடங்கியது. அவர் நினைத்ததை விடவும் மிகப்  பெருமளவில் கறுப்பின மக்கள் அந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதுவரை பேரூந்துகளிலேயே பயணம் செய்துகொண்டிருந்த மக்கள், அவற்றுக்குப் பதிலாக மாற்று வாடகை வண்டிகளை உபயோகிக்கத் தொடங்கினார்கள். பலர் பல மைல்கள் தொலைவைக்கூட நடந்தே சென்றார்கள். ஆனால், எவரும் பேருந்தில் மாத்திரம் ஏறுவதாக இல்லை.

சில நாட்களில் கறுப்பர்கள் சலித்துப்போய் பேருந்துகளுக்குத் திரும்பி விடுவார்கள் என நினைத்தது நிற வெறி வர்க்கம். ஆனால், பேருந்துகள் தொடர்ந்தும் வெறுமையாகவே ஓடிக்கொண்டிருந்தன. பல தடைகள், நிற வெறியர்களின் பல்வேறு சதித் திட்டங்கள் என என்னென்னவோ அரங்கேறியும்கூட அந்த அகிம்சைப் போராட்டம் வலுவிழப்பதாகத் தெரியவில்லை. பேருந்துகள் நட்டத்தை ஈடு செய்ய இயலாது தடுமாறத் தொடங்கின. அங்குதான் மார்ட்டினின் போராட்டம் மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி நகரத் தொடங்கியது.

இவ்வாறாக மார்ட்டின் லூதர் கிங்கின் காந்தி வழி அகிம்சைப் போராட்டங்கள் அதன் வெற்றியை அடைந்த போதுதான் பலநூற்றாண்டுகளாக மூச்சுவிட திராணியற்றுக் கிடந்த கறுப்பின மக்கள் சுதந்திரக் காற்றை மெல்ல மெல்ல சுவாசிக்கலானார்கள். அமெரிக்கா மெல்ல மெல்ல அவர்களையும் தங்கள் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. இயேசுவின் மீதும் காந்தியின் மீதும் தீராக் காதல் கொண்டு அவர்களின் பாதையிலேயே பயணித்து தன் மக்களின் விடுதலைக் கனவை நனவாக்கிய மார்ட்டின் லூதர் கிங், மக்களுக்காகக் குரல் கொடுத்த இயேசுவையும் காந்தியையும் போலவேதான் இறுதியில் படுகொலை செய்யப்பட்டார். அன்பையும் அகிம்சையையும் ஆயுதமாகக் கொண்டு கறுப்பின மக்களுக்காகப் போராடி, அதற்காக நோபல் பரிசையும் பெற்றுக்கொண்ட மார்ட்டின், தான் இறப்பதற்கு  இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையொன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“விட்டுச் செல்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இல்லை. அருமையான மற்றும் ஆடம்பரமான எதுவும் என்னிடமில்லை. ஆனால், ஒரு கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை விட்டுச்செல்ல நான் விரும்புகிறேன்.“

உலகில் மிகச் சக்திவாய்ந்த ஆயுதமாகக் கருதப்படும் அகிம்சையை கையிலெடுத்து காந்தியின் வழியில் அமெரிக்க கறுப்பின மக்களுக்கு விடிவைத் தேடித் தந்த மாமனிதர் மார்ட்டின் லூதர் கிங் இன் வரலாற்றை மிகச் சுருக்கமாகவும் எளிமையாகவும் `கறுப்பு வெள்ளை` என்ற நூலின் வாயிலாக எழுதியிருக்கிறார் பாலு சத்யா. அவரது எளிமையான எழுத்துக்களும், அதனூடு மார்டினை அறிமுகம் செய்யும் வசனங்களும் இலகுவான நடையில் மார்ட்டினின் வாழ்வினை மட்டுமல்லாது அப்போதைய காலச் சூழலையும் அதிக வர்ணிப்புகளின்றி விளக்கிச் செல்கிறது. காந்தியத்தின் பாதை வெறும் தற்செயலானதொன்றல்ல என்பதுவும், அது உலகிலேயே மிக வலுவான ஆயுதம் என்பதுவும் மார்ட்டின் லூதர் கிங் இன் மூலமாக மீண்டுமொரு முறை உலகுக்கு உணர்த்தப்பட்ட வரலாற்றை இந்நூல் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது. காந்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் நம்பிக்கை கொண்ட அனைவரும் படிக்கக்கூடிய ஒரு நூலாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.


உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இப்பதிவு  தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.





No comments:

Post a Comment