May 15, 2020

சாம்பல் நிறக் கண்கள்














என் வாழ்க்கையையே மொத்தமாகப் புரட்டிப்போட்ட அந்த நிகழ்வு நடந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் தாக்கத்திலிருந்து என்னால் இன்னமும் முழுதாக வெளிவந்துவிட முடியவில்லை. அப்போது நான் ஒரு யூடியூப்பராக இருந்தேன். என் யூடியூப் சேனலை நீங்கள்கூட அன்றைய நாட்களில் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஓரளவு பிரபல்யமாக இருந்த `ட்ராவல் பாய்ஸ்` என்ற யூடியூப் சேனலை நடாத்திக் கொண்டிருந்த ஆதவன் என்பவன் நான் தான். நான் என்றால் நான்மட்டுமே அதை நடாத்தவில்லை. நானும் என் நண்பன் விக்கியும் சேர்ந்து அந்தச் சேனலை நடாத்திக்கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் கல்லூரிக் காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்குமே பயணம் செய்வதில் பெரும் ஆர்வமும் ஆசையும் இருந்தது. நாங்கள் பயணம் செய்கிற புதுப்புது இடங்களையெல்லாம் மேலும் அழகாக உலகுக்குக் காட்ட வேண்டும் என்று முதலில் விக்கிதான் விரும்பினான். அவனது சிந்தனையின்படி ஆரம்பிக்கப்பட்ட ட்ராவல் சேனல்தான் அந்த `ட்ராவல் பாய்ஸ்`. ஆரம்பத்தில் விளையாட்டாக அப்லோட் செய்த வீடியோக்கள் மெல்ல மெல்ல பிரபல்யமடையத் தொடங்கியது. எங்கள் சேனலுக்கு அன்றைய நாட்களில் வரவேற்பு கூடிக்கொண்டிருந்தது. அந்த வரவேற்பைக் கண்டு பூரித்துப்போன நாங்கள் எங்கள் வீடியோக்களை முன்பை விடத் தரமாகவும் புதுமையாகவும் வழங்க விரும்பினோம். மக்களால் பெரிதும் அறியப்படாத புதுப் புது இடங்களையும் அதன் அழகையும் தேடி பயணப்பட ஆரம்பித்தோம். அங்குதான் எங்களுக்குப் பிரச்சனையும் ஆரம்பித்தது.

எனக்கு அந்தப் பயணம் இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. இலேசான மழைநாள் ஒன்றில் நாங்கள் கன்னல் நீர் வீழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மோட்டர் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். பெரும்பாலான பயணங்களைப்போலவே, அந்தப் பயணத்தையும் போவது ஒரு பாதையாகவும், வீடு திரும்புவது மற்றுமொரு பாதையாகவும் திட்டமிட்டு அதன்படியே பயணப்பட்டுக்கொண்டிருந்தோம். நாங்கள் பயணம் செய்கிற பாதைகளையும், அந்தப் பாதைகளில் நிறைந்திருக்கிற இயற்கைகளையும் அனுபவித்துக் கொண்டே பிரயாணப்பட்டுக்கொண்டிருந்தோம். எங்கெல்லாம் மனம் தாமதிக்கச் சொல்கிறதோ, எங்கெல்லாம் இயற்கை கண்களை வசீகரித்துக் கொள்கிறதோ அங்கெல்லாம் தவறாது பைக்கை நிறுத்திவிட்டு இயற்கையை வேண்டிய அளவுக்குப் பருகிக்கொண்டோம். கூடவே கேமராவில் அந்தக் காட்சிகளையும் பதிவு செய்து கொண்டோம். பச்சைப் பசேலென்ற அந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஊரைக் கடந்துகொண்டிருந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த விக்கி பைக்கை நிறுத்துமாறு என் தோளில் தட்டினான். வழக்கம்போல பைக்கை நிறுத்திவிட்டு அவன் கை காட்டிய திசையைப் பார்த்தேன். ஆகா! அங்கே அழகான ஒரு மலைக் குன்று பள்ளத்தாக்கிற்கு அருகில், எங்களை வா என்று அழைப்பது போல கம்பீரமாக நின்றிருந்தது. சாதாரண மலைக்குன்றுதான் என்ற போதும், அதனிடம் ஏதோ ஒரு இனம் புரியாத வசீகரம் எங்களை அதை நோக்கி ஈர்ப்பது போல தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் மேல் ஏறி நின்று அந்தப் பள்ளத்தாக்கைப் பார்த்துப் பூரிக்கும் எண்ணத்திற்காகவே அதில் ஏறிவிடுவதென்று முடிவு செய்தோம்.

ஒருவாறாக அந்தக் குன்றைச் சென்றடையக்கூடிய பாதையைக் கண்டுபிடித்து அதன் வழியே சென்றுகொண்டிருந்தோம். அந்தக் காட்டுவழிப் பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கப்பால் பைக்கில் தொடர்ந்து செல்ல முடியவில்லை. பாதை மிகக் கரடுமுரடாகவும் மேடாகவும் இருந்தமையால், பைக்கை ஸ்டாண்டில் போட்டுவிட்டு குன்றை நோக்கி நடக்கத் தொடங்கினோம். பயணம் முழுக்க மழைச் சாரலில் நனைந்திருந்த எனக்கு, தடிமன் பீடித்து மூக்கிலிருந்து நீர் வடிந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தது. ஆனாலும், என் எதிர்பார்ப்புகள் அந்த அசௌகரியங்களைக்கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது, அந்த ஒற்றையடிப் பாதையில் சுறுசுறுப்போடு என்னைப் பயணிக்கச் செய்துகொண்டிருந்தன. திடீரென்று நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்த அந்தக் குறுகலான பாதை ஓர் இடத்தோடு முடிவடைந்து எங்களுக்குச் சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதற்கப்பால் பாதை இல்லை என்பது, யாரும் அந்த இடத்தைத் தாண்டி மேற்கொண்டு பயணிப்பதில்லை என்று உணர்த்தியது. மனிதர்கள் தொந்தரவு செய்யாத இயற்கைதான் அழகை தன்னுள் புதைத்துக் கிடக்கிறது என்று எண்ணிக்கொண்டே மலைக் குன்று இருந்த திசையை நோக்கி முன்னேற எத்தணித்த போது, ஒரு பலமான கை என் தோளைப் பிடித்து நிறுத்தியது.

நான் துணுக்குற்று பின்னால் திரும்பினேன். அங்கு ஒரு விசித்திரமான கிழவன் நின்றிருந்தான். அவனது வாயில் நீளமான மலைச் சுருட்டு புகைந்து கொண்டிருந்தது. அவனது பழுத்த சடை முடியும், வெண்தாடியும் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ஒரு பிச்சைக்காரனைப் போல அவன் கிழிசலான ஆடைகளை அணிந்திருந்தான். அவனது சிவந்த கண்கள் எங்களை மிரட்டுவது போல் பார்த்தன.

“யாரு நீங்கெல்லாம்? எங்கே போறீங்க?”
அவன் சற்றுக் கோபமாகக் கேட்டான்.

“ஐயா, நாங்க அந்த மலைக்குன்றுக்குப் போறோம். அது பார்க்க ரொம்ப அழகா இருக்கு. அதை படம் புடிக்கலாம்னு போய்ட்டிருக்கோம்.” 
என்று கூறியவாறு நான் எங்கள் கேமராவை தூக்கிக் காட்டினேன்.

“அழகா இருக்கா! ஹா.. ஹா.. நம்பாதீங்க. அவளை நம்பவே நம்பாதீங்க.. அவ மோசக்காரி. மயக்கியே கொன்னுருவா. அவகிட்டப் போகாதீங்க.”

“ஐயா நீங்க சொல்றது புரியலையே. நீங்க யாரைப் பற்றி சொல்றீங்க?”

“வேற யாரைப் பற்றி! அவதான்… அந்த சாம்பல் கண்ணியைப் பற்றித்தான் சொல்றேன்.”

“சாம்பல் கண்ணியா? யாரது?”

“உங்களை அந்த மலைக்கு அழைச்சது அவள்தான். அவளை நம்பாதீங்க. அவ ரொம்ப மோசக்காரி.”

“ஐயா, நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே?”

“சாம்பல் கண்ணினு முப்பது வருசத்துக்கு முதல்ல இந்த ஊர்ல ஒருத்தி இருந்தா. அவளுக்கு அந்தப் பேரு வந்ததுக்குக் காரணம் அவளோட கண்கள் சாம்பல் நிறத்துல இருந்ததுதான்.  அவள் ஒரு நடத்தை கெட்டவள்னு சொல்லி இந்த ஊர்க்காரங்க அவளை அடிச்சு விரட்டிட்டாங்க. உறவுன்னு யாரும் இல்லாத அவள், எங்கே போறதுன்னு தெரியாம, அந்த மலைமேல ஏறி தற்கொலை பண்ணிக்கிட்டா. அவளோட ஆவி அங்கதான் சுத்திக்கிட்டிருக்கு. அந்த மலைக்குப் போன யாரையும் அது விட்டு வச்சதில்லை. அங்க போறவங்களை அவளோட அழகைக் காட்டி மயக்கி அந்த மோசக்காரி கொன்னுருவா. அப்படிப் பல பேரை அவ பலியெடுத்திருக்கா. உங்க நல்லதுக்காகத்தான் சொல்றேன். திரும்பிப் போய்டுங்க.”

அவர் அப்படிச் சொன்னதும் நானும் விக்கியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். ஆனால், எங்களால் வெகு நேரத்துக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சத்தமாகச் சிரித்தேவிட்டோம். விக்கி சற்று அதிகப்பிரசங்கித்தனமாக அந்தக் கிழவரையும் கேலிசெய்துவிட்டான்.

“போய்யா கூமுட்ட! இதை சொல்றதுக்கன்னே நீ இதுல உட்காந்திருக்கிறியா! உன் கண் சிவந்திருக்கும்போதே நினைச்சேன். இந்த ஊர்ல கஞ்சா தாராளமாக் கிடைக்கும் போலருக்கே.”

அந்தக் கிழவனுக்கு கோபம் சீறிக்கொண்டு வந்தது.

“அடே நாய்களா! நான் உங்க நல்லதுக்காகத்தான் சொன்னேன். போறதுன்னா தாராளமாப் போங்க. ஆனா, நான் சொன்னது உண்மைனு உங்களுக்குப் புரியும்போது நீங்க சாவுக்குப் பக்கத்துல இருப்பீங்க. அப்போ நான் சொன்னதை நினைச்சு வருத்தப்படுவீங்க. ஆனா, பொழைக்க மாட்டீங்க. அவ உங்களை விட மாட்டா. நீங்க எங்க ஓடி ஒளிஞ்சாலும் விடமாட்டா. அந்த சாம்பல் கண்கள் உங்களை கொல்லாம விடாது.”

என்று சபித்துக்கொண்டே அவன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தான். அவனது சுருட்டின் புகை நீண்ட நேரம் அவன் போன திசையில் சுழன்று கொண்டிருந்தது.

அந்தக் கிழவனைக் கேலி செய்தபடி குன்றினினை அடைந்தோம். அந்த மலைக் குன்றில் சற்று சிரமப்பட்டு இருவரும் ஏறி நின்றோம். ஆகா! அங்கிருந்து பார்க்க அந்தப் பள்ளத்தாக்கு அத்தனை ரம்மியமாய் தெரிந்தது. பள்ளத்தாக்கின் அடியில் ஓடிக்கொண்டிருந்த நீரோடையொன்று பெரும் இராட்சச நாகம் நெளிவதைப்போல் இருந்தது. எங்கோ தூரத்தில் உயர்ந்து நின்றிருந்த மலைகளையெல்லாம் கரு மேகங்கள் தழுவிக்கொள்வதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பேரானந்தமாகவிருந்தது. குன்றின் அடிவாரங்களில் கொத்துக்கொத்தாக பல வர்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அவையெல்லாம் எங்குமே காணக்கிடைக்காத தனி அழகாய் தோன்றின. அந்த மொத்த இடத்தையும் இரசித்ததோடு மாத்திரம் நின்றுவிடாது, அந்த மனதுக்கினிமையான அழகை வேண்டியளவு கேமராவில் பதிவு செய்துகொண்டோம். அந்த மலைக்குன்றுக்கு மட்டுமே தனியாக ஒரு வீடியோ அப்லோட் செய்துவிடலாம் என்பதுதான் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தளவுக்கு அங்கு அழகு நிறைந்து கிடந்தது.  ஆனால், விக்கிதான் அங்கு ஏதோவொரு கெட்ட வாடை வீசுகிறதென்று அடிக்கடி கூறிக்கொண்டேயிருந்தான்.

அங்கிருந்து புறப்பட்டு மாலை வேளையில் நேராக வீட்டை வந்து சேர்ந்தோம். விக்கி வரும் வழியில் அவனது வீட்டிலேயே இறங்கிக் கொண்டான். எனக்குக் களைப்பாக இருந்தது. ஆனாலும், வீடியோவை அப்லோட் செய்துவிடவேண்டும் என்பதற்காக பொறுமையாக அதை எடிட் செய்து முடித்தேன். வீடியோ எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருந்தது. அப்லோட் செய்வதற்கு முன் விக்கியை வரச் சொல்லி, அதனைப் பார்க்கச் செய்யலாம் என்று அவனது செல்ஃபோனிற்கு கால் செய்தேன். ஆனால், அவனது செல்ஃபோன் ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பயண அசதியில் நித்திரையாகியிருப்பான் என்று நினைத்துக்கொண்டு, வீடியோவை அப்லோட் செய்துவிட்டு நானும் நன்றாகப் படுத்துறங்கிவிட்டேன். 

பயணக் களைப்பினால் நன்றாக நித்திரையாகியிருந்தேன். அடுத்த நாள் நண்பகல் பன்னிரெண்டு மணியளவில்தான் நித்திரை கலைந்தது. அப்போது எனக்குப் பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நான் அப்லோட் செய்த அந்த மலைக்குன்று வீடியோவை 12 மணித்தியாலங்களுக்குள் முதன் முறையாக ஐந்து இலட்சம் பேர் பார்த்திருந்தார்கள். என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. அதுவரை எங்களுடைய அதிகபட்ச வியூஸ் என்பது ஒரு இலட்சம் மட்டுமே. என் செல்ஃபோனைப் பார்த்தேன். விக்கியிடமிருந்து மிஸ்ட் கால் எதுவும் இருக்கவில்லை. நான் அவனுக்குக் கால் செய்தேன். அப்போதும் அவனது செல் ஸ்விச் ஆஃபில் தான் இருந்தது. அவன் இன்னும் எழும்பியிருக்கவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவனிடம் அந்த சந்தோசத்தை உடனே பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று என் மனம் துடியாய் துடித்தது. முடிந்தவரை வேகமாக தயாராகிக்கொண்டு அவசர அவசரமாக அவனது வீட்டை அடைந்தேன்.

அங்கே அவனது படுக்கையறை உட்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. எவ்வளவு தட்டியும் அவன் திறப்பதாக இல்லை. எனக்கு சற்றுப் பதற்றமாக இருந்தது. ஜன்னல்களும் இறுக்க மூடப்பட்டிருந்தன. எனக்கு அந்த மலைச்சுருட்டு புகைத்துக்கொண்டிந்த கிழவன் மனக் கண்ணில் தோன்றி மறைந்தான். மனம் படபடக்கத் தொடங்கிவிட்டது. வீட்டிலிருந்தவர்களின் உதவியோடு கதவை உடைக்க முயற்சி செய்தேன். என்னை விட அவனின் அண்ணனும் அம்மாவும் பதறிப்போயிருந்தார்கள். அவனது அம்மா அழுது கொண்டிருந்தாள். அவளது முகம் எனக்கு எதையோ ஞாபகப்படுத்தியது. அது என்னவென்று புரிவதற்கு எனக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. ஆம்! அந்த சாம்பல் கண்ணி!  அந்த சாம்பல் கண்ணியின் கற்பனையான உருவமொன்று என் மனதுக்குள் வந்து வந்து சென்றுகொண்டிருந்தது. எனக்குப் பதட்டம் முன்பைவிட அதிகரித்துவிட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கதவின் தாழ்ப்பாள் நொறிங்கி விழவும் கதவு மெல்லத் திறந்துகொண்டது.

அங்கு நான் கண்ட காட்சி இப்போதும் என் இதயத்தை நொறுக்கிக் கொண்டிருக்கிறது. அங்கே விக்கி இரத்த வெள்ளத்தில் படுக்கையில் விழுந்து கிடந்தான். அவனது வலது கையில் சிறிய கத்தி ஒன்று இருந்தது. அவனது இடது கை முழுக்க கத்தியால் அறுத்துக்கொண்ட அடையாளங்கள் நிறைந்து கிடந்தன. அந்தக் காயங்களிலிருந்து இரத்தம் வடிந்து உலர்ந்து போயிருந்தது. நிச்சயமாக சம்பவம் நடந்து நீண்ட நேரமாகிவிட்டது என்பது புரிந்தது. அவன் தன்னைத்தானே கொன்று கொண்டிருந்தான். அனைத்தும் கை மீறிப் போயிருந்தது. அழுதோம், புரண்டோம், ஒப்பாரியிட்டோம். ஆனாலும் என்ன பயன்! அவன் வெகுதூரம் போய்விட்டிருந்தான். ஆனால், எல்லோருக்குள்ளும் எழுந்தது ஒரேயொரு கேள்விதான். `தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு விக்கிக்கு என்ன பிரச்சனை இருந்தது?` என்பதே அந்தக் கேள்வி. நான்தான் அவனது நெருங்கிய நண்பன் என்றபடியால், எல்லோரும் அந்தக் கேள்விக்கு என்னிடமே பதிலை எதிர்பார்த்தார்கள். ஆனால், அதே கேள்விதான் எனக்குள்ளும் தெளிவான பதில் அற்றுக்கிடந்தது. ஆனால், என் உள் மனமோ நான் நம்ப மறுத்தாலும் அந்தக் கேள்விக்கு வேறு விதமாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அச்சமூட்டக்கூடிய இரண்டு சாம்பல் நிறக் கண்கள் என் மனக் கண்ணில் தோன்றித் தோன்றி மறைந்தன. அந்தக்  கேள்வி எனக்குள் எழுகிறபோதெல்லாம் அந்தக் கண்கள் அடுத்தது நீதான் என்பது போல நகைத்தன.

என்னால் அந்தச் சம்பவத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. அரைப் பித்துப் பிடித்தவன் போல தன்னந் தனியாக புலம்ப ஆரம்பித்துவிட்டேன். என் உயிர் நண்பனின் பிரிவை விட, அந்தச் சாம்பல் நிறக் கண்கள்தான் என்னை மிக மோசமாகத் தொந்தரவு செய்தன. நான் கண்களை மூடுகிறபோதெல்லாம் அந்த சாம்பல் நிறக் கண்கள் விழித்துக் கொண்டு என்னையே பார்ப்பது போல பெரும் பிரம்மை என்னைச் சூழ்ந்துகொண்டது. நான் தூங்கிப் பல வாரங்களானது. தூக்கமற்ற என் கண்கள் எந்நேரமும் எரிச்சலடைந்தன. ஒரு மனநோயாளிபோல என் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தேன். என் நிலையைப் பார்த்து பெரிதும் மனமுடைந்துபோன என் பெற்றோர்கள் என்னை இந்த ஆசிரமத்தில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தார்கள். இங்கே வந்த பிற்பாடுதான், நான் மெல்ல மெல்ல என் சுய நிலையை அடையத் தொடங்கினேன்.

உண்மையில் இது ஒரு புனிதமான இடம் தான். ஆசிரமம் என்றவுடன் இது ஒரு சாமியார் மடம் என்று நினைத்துவிட வேண்டாம். இது ஒரு உளவியல் பயிற்சிகூடம். இங்கு பல்வேறுபட்ட மக்கள் தங்கள் உளவியல் பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு திருப்தியோடு வெளியேறுகிறார்கள். அந்த சிகிச்சைகளுக்காக பெரும்பாலும் மருந்துகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. சில பயிற்சிகளைத்தான் மேற்கொள்ள வைக்கிறார்கள். அப்படியான சிகிச்சைகள்தான் எனக்கும் தரப்பட்டன. நான் இங்கு அழைத்து வரப்பட்ட முதல் நாள், இந்த ஆசிரமத்தின் தலைமை குரு என்னை வந்து பரிசோதித்தார். அவரே வந்து ஒருவரை பரிசோதிக்கிறார் என்றால், அந்த நோயாளி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம் என பின்னாளில் அவர்கள் சொல்ல அறிந்துகொண்டேன். அவர் என்னைப் பரிசோதித்துவிட்டு ஒரு இருள் சூழ்ந்த விசாலமான அறையின் மத்தியில் தரையில் அமர வைத்தார். எனக்குச் சற்றுத் தொலைவில் ஒரேயொரு அகல் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதனுடைய மிக மிக மெல்லிய ஒளியைத் தவிர அந்த விசாலமான அறையில் வேறு வெளிச்சம் சிறிதளவும் இருக்கவில்லை. அந்த நிசப்தம் சூழ்ந்த இருளே என்னை மிரட்டுவதற்குப் போதுமானதாகவிருந்தது. அந்த சாம்பல் நிறக் கண்கள் இந்த இருளுக்குள்தான் எங்கோ மறைந்திருக்கின்றன என்பது போல மனம் பட படத்துக்கொண்டிருந்தது. ஆனாலும், அந்த குருவானவரின் கம்பீரமான குரலும் மங்களகரமான அகல் விளக்கின் ஒளிக் கீற்றுக்களும் என்னை சற்று சாந்தப்படுத்தின. சில நிமிடங்களின் பின்னர் அவர் சிகிச்சையை ஆரம்பித்தார். அவர் இருளில் எங்கோ என் கண்களுக்குப் புலப்படாதவாறு  மறைந்திருந்தபடி பேசத் தொடங்கினார்.

“மகனே! நீ இங்கு பாதுகாப்பாக இருக்கிறாய். இந்த இடம் என் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இங்கு என்னை மீறி உன்னை யாரும் நெருங்க முடியாது. தைரியமாக இரு.”

“ம்…..”

“நான் அதிகம் பேசி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். உனக்கு முன்னால் ஒரு அழகிய அகல் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. அதன் தீபம் மிகப் புனிதத் தன்மை வாய்ந்தது. நான் நிறுத்தச் சொல்லுகிறவரை நீ அதையே பார்த்துக்கொண்டிரு. அதை பார்த்துக்கொண்டிருக்கிற சமயத்தில் உன் உள்ளத்தில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும் கவலைகளும் தோன்றலாம். எதுவாக இருந்தாலும் அந்த எண்ணங்களை அதன் போக்கிலேயே விட்டுவிடு. உன் மனம் அதன் விருப்பம் போல பயணிக்கட்டும்.”

“ம்….”

“நல்லது”

அதன் பின் அவர் எதுவும் பேசவில்லை. நான் அந்தத் தீபத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அந்தச் சாம்பல் நிறக் கண்கள் மட்டும்தான் மனதில் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன. தீடீரென்று அங்கு ஒரு துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. அந்த துர்நாற்றத்தை அதற்குமுன் என் வாழ்நாளில் நான் எங்குமே அனுபவித்ததாக நினைவிலில்லை. அது ஒரு மோசமான நாற்றமாக என் நாசிவழியேறி என்னை ஏதோ செய்யத்தொடங்கியது. ஒரு வேளை இதுதான் பிண நாற்றமோ என்று தோன்றியது. பிசாசுகள் வருகிற போது அப்படியான துர்நாற்றங்கள் வீசும் என்று சிறுவயதில் யாரோ சொல்லிக் கேள்விப்பட்டது நினைவில் வந்தது. அப்படியென்றால் அவள் என்னைத் தேடி வந்து விட்டாளா என்று இதயம் படபடக்கத் தொடங்கியபோது, பட்டென்று அந்தத் துர்நாற்றம் விலகிவிட்டது புரிந்தது. மனம் சற்று ஆசுவாசப்பட்டது.

நான் தொடர்ந்து தீபத்தையே பார்த்த வண்ணம் இருக்க, மனம் மெல்ல மெல்ல பாரமாவதுபோல் இருந்தது. பயம் காணாமல் போனதுடன் பெரும் கவலைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன. எனக்கு விக்கி நினைவுக்கு வந்தான். நான் அழத்தொடங்கினேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினேன். எவ்வளவு அழுதாலும் போதாது என்பது போல அழுதுகொண்டே இருந்தேன். எனக்கு இன்னும் இன்னும் நீண்ட நேரம் அழவேண்டும் போல இருந்தது. யாரும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. யாரும் என்னை ஏன் என்று கேட்கவும் இல்லை. நான் எனக்குள் தேங்கிக் கிடந்த கவலைகளையெல்லாம் ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து அழுதேன். உடல் களைத்து தொண்டை வரண்டு நானாக ஓய்கிறவரை அழுதுகொண்டேயிருந்தேன். எவ்வளவு நேரம் அப்படி அழுதேன் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், சில மணித்தியாலங்களாவது அப்படி அழுதிருப்பேன். உடல் சக்தியற்று தரையில் உருண்டு புரண்டு அழுது ஓய்கிற சமயத்தில், என்னை யாரோ இருவர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். அவர்கள் யார் என்பதை நிமிர்ந்து பார்க்கிற சக்திகூட எனக்கு இருக்கவில்லை. ஒரு அமைதியான அறையில் படுக்கையில் படுக்க வைத்தார்கள். நான் அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டேன்.

நீண்ட நெடிய உறக்கத்திற்குப் பின்னர் விழித்துக் கொண்டேன். உடல் அசதியாய் இருந்தது. மனம் சற்று இலேசாகிவிட்டது போல் தோன்றியது. கவலைகளும் பயமும் சற்றுக் குறைந்திருந்தன. நீண்ட நாட்களுக்குப் பின் சிறு உற்சாகத்தை உள்ளத்தில் உணர முடிந்தது. ஒரேயொரு சிகிச்சையில் இத்தனையும் சாத்தியம்தானா என்று வியப்பாக இருந்தது. ஆனாலும், நான் பூரணமாகக் குணமாகிவிட்டதாக குருவானவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சிறிது காலம் இங்கு தங்கியிருந்து சில உடல் உள பயிற்சிகளை கடைப்பிடிக்கும்படி கூறினார். சில யோக ஆசனங்கள் முதற்கொண்டு பல்வேறுபட்ட பயிற்சிகளை அவர்கள் எனக்கு வழங்கினார்கள். என்னைப் போலவே பலர் அவ்வாறான சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டிருந்தார்கள். மூன்று மாதங்களை நான் சிகிச்சைகளுக்காகக் கழித்தேன். நானே விரும்பி அந்தப் பயிற்சிகளையெல்லாம் எடுத்துக்கொண்டதுக்கு முக்கியமாக மற்றுமொரு காரணமும் இருந்தது. அவளின் பெயர் இசையி. பெயரைப்போலவே அவளும் வித்தியாசமானவளும் இனிமையானவளும் தான். அவள் குருவானவரின் ஒரே மகள். ஆசிரமத்தில் குருவானவரைப் போலவே அவளும் செல்வாக்கானவள். குருவானவருக்கு நிகராக அவளும் பலருக்கு சிகிச்சைகள் அளித்துக்கொண்டிருந்தாள். ஆரம்பத்திலேயே நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். அவள் என்னை நோயாளியாக இல்லாமல் நண்பனைப் போலவே நடாத்தினாள். அவளது கனிவும் அன்பும் தான் என்னை அவளிடம் வசீகரிக்கச் செய்தது. அவளின் கண்கள் சாம்பல் நிறக் கண்களாக இல்லாமல் இருந்தது பெரும் ஆறுதலாக இருந்தது.

எங்கள் நட்பு விரைவிலேயே காதலாகவும் மாறியிருந்தது. நான் அப்போது சிகிச்சைகளை பூர்த்தி செய்துகொண்டு வெளியேறுகிற தருணத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஆனபடியால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்கள் காதலை குருவானவரிடம் வெளிப்படுத்தினோம். அவர் அவ்வளவு சீக்கிரத்தில் என்னையும் எங்கள் காதலையும் ஏற்றுக் கொண்டது பெரும் இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருவரின் பெற்றோரது ஆசிர்வாதங்களோடு எங்களுக்கு திருமணம் நடந்தது. இனியென்ன, ஆசிரமமே எனக்குக் கதியென்று ஆகிவிட்டது. எனக்கும் அது தான் பிடித்திருந்தது. மெல்ல மெல்ல சிறிய சிறிய பயிற்சிகளையும், சிகிச்சை முறைகளையும் எனக்கு இசையி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவற்றைக் கொண்டு நானும் நோயாளிகளுக்கு என்னாலான பயிற்சிகளும் சிகிச்சைகளும் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சிகிச்சை முறையிலும் நான் தேறத் தேற அவற்றுக்கு அடுத்தடுத்த கட்டமான சிகிச்சை முறைகளை அவள் எனக்குப் பயிற்றுவித்தாள். அன்றும் அப்படித்தான், புதிய ஒரு சிகிச்சையை கற்றுக் கொடுப்பதாகக் கூறி அவள் என்னை அழைத்துச் சென்றாள்.

அந்த சிகிச்சைக்குப் பெயர் புஷ்பப் பரிகாரம் என்பதாகும். நான் ஆசிரமத்துக்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு முதன் முதலில் வழங்கப்பட்ட சிகிச்சைதான் அது. இசையி என் கையில் பட்டுத் துணியொன்றினால் மூடப்பட்டிருந்த ஒரு கண்ணாடிப் பெட்டியைக் கொடுத்தாள். அந்தத் துணியை அகற்றிப் பார்த்தேன். உள்ளே அழகான சிவப்பு நிற மலரொன்று இருந்தது. அது பார்ப்பதற்கு ஓர் சூரியகாந்தி மலர் அளவுக்கு இருந்தாலும், அதன் இதழ்கள் சற்று விசாலமானவையாக இருந்தன. அதைச் சுட்டிக் காட்டி இசையி பேசத் தொடங்கினாள்.

“இந்தப் பூவோட பேரு மகாமல்லி. ரொம்ப அபூர்வமான மருத்துவப் பூ. பரிகார மண்டபத்துக்குள்ள இப்போ ஒரு பொண்ணு சிகிச்சைக்காகக் காத்துக்கிட்டிருக்கா. நீங்க அவள் பார்க்காத மாதிரி உள்ள போயி, இருட்டுல ஒரு மூலையில இந்தப் பெட்டியை திறந்து வச்சிட்டு வந்துடுங்க. இந்தப் பெட்டியத் திறந்ததும் இந்தப் பூவிலே இருந்து ஒரு துர்நாற்றம் வெளிய வரும். அந்தத் துர்நாற்றத்துக்கு ஒரு மருத்துவ சக்தி இருக்கு. அவள் அந்த துர்நாற்றத்தை தொடர்ச்சியா அஞ்சு நிமிசங்களுக்கு சுவாசிக்கும் போது, கொஞ்ச நேரத்துல அந்தத் துர்நாற்றம் அவளுக்கு ஒரு எதிர் மறையான போதையை கொடுக்கும். அந்த எதிர் மறையான போதை மனசுக்குள்ள புதைஞ்சு கிடக்கிற கவலை, கோபம், பொறாமை, நிறைவேறாத ஆசைகள் மாதிரியான எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி அவளை தொந்தரவு செய்யும். அது கொஞ்ச நேரத்துல அழுகையாக வெளியே வரும். அழுது அழுது தீர்க்கிறப்போ அந்த எதிர்மறை எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமா விலகும்.”

அவள் சொன்னதைக் கேட்டு நான் பிரம்மித்துப்போய் நின்றேன். `இப்படித்தான் எனக்கும் சிகிச்சை கொடுத்தார்களா! இதனால்தான் அன்று நான் அப்படி அழுது தீர்த்தேனா!` என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் அந்த அகல் விளக்கின் ஒளியில்தான் ஏதோ வித்தை இருக்கிறது என்று அத்தனை நாளாய் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் பெரியதொரு புதிருக்கு விடைகிடைத்தது எனக்கு நிறைவாக இருந்தது. அவள் கூறியபடி அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு அந்த இருள் படர்ந்த விசாலமான அறைக்குள் நுழைந்தேன். அங்கே குருவானவர் அந்தப் பெண்ணுக்கு சில ஆலோசனைகள் கொடுத்து சிகிச்சைக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அவர் எனக்குச் சைகை செய்யவும், நான் இருளில் மறைந்தவாறே சென்று, அந்தப் பெண்ணுக்கு சற்று முன்பாக அந்தப் பெட்டியை சத்தம் இல்லாது தரையில் வைத்துவிட்டு, அதைத் திறந்துவிட்டு வெளியேறினேன். இசையி கூறியது போல சரியாக ஐந்து நிமிட இடைவெளியின் பின்னர் அந்தப் பெட்டியை அகற்றுவதற்காக அறைக்குள் மீண்டும் நுழைந்தேன். அந்தப் பெண்ணுக்கு எதிரே சற்றுத் தொலைவில் இருந்த பெட்டியை, இருளிலும் சரியாக அடையாளம் கண்டுகொண்டு, அரவம் இல்லாமல் அதை மூடிய போதுதான் எனக்கு மனதுக்குள் பொறி தட்டியது. பட்டென்று நிமிர்ந்தேன். அப்போதுதான் முதன் முறை அந்தப் பெண்ணின் முகம் மங்கலான ஒளியில் என் கண்களில் பட்டது. அதே சாம்பல் நிறக் கண்கள். அவள் தீபத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் வேகமாக வெளியேறி ஓடினேன்.

இசையி வெளியே நின்றிருந்தாள். அவளின் கையில் என் செல்ஃபோன் இருந்தது. அதை அவசர அவசரமாகப் பறித்து யூடியூப்பைக் கிளறினேன். இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இறுதியாக எங்கள் சேனலில் அப்லோட் செய்த அந்த மலைக்குன்றின் வீடியோவை ப்லே செய்தேன். நான் சந்தேகித்தது சரிதான். அந்த வீடியோவில் விக்கி நின்றிருந்த குன்றுக்கு மிக அருகில் கொத்துக் கொத்தாய் மகாமல்லி மலர்கள் பூத்துக் கிடந்தன. சற்று நேரத்துக்கு முன்னர் எனக்கு இசையி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“இந்தப் பெட்டிய அஞ்சு நிமிசங்களுக்கு திறந்து வையுங்க. அதோட துர்நாற்றம் எதிர் மறை எண்ணங்களைத் தூண்டி அழுகையை வரச் செய்யும். ஆனால். ஒரு விசயத்தை மறந்துடாதீங்க. அஞ்சு நிமிசத்தை விட அதிகமாக அந்த துர்நாற்றத்தை நுகர்ந்தால், எதிர் மறை போதை உச்சத்துக்குப் போயி, அவங்க ரொம்ப ஆக்ரோஷமாகிடுவாங்க. அப்படி நடந்தா அவங்க தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கவோ தற்கொலை செய்துக்கவோ தயங்கமாட்டாங்க!”

முற்றும்


- உங்களுக்கு இந்தச் சிறுகதை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- `சாம்பல் நிறக் கண்கள்` சிறுகதை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment