May 8, 2020

ரஸவாதி­














பெரும்பாலான மக்கள் இளம் பராயத்திலேயே தாம் வாழ்வதற்கான காரணத்தை அறிந்து கொள்கிறார்கள். எளிதில் அறிந்து கொள்கின்றமையினால்தானோ என்னவோ, விரைவிலேயே அதனைக் கைவிடவும் செய்கிறார்கள். இருந்தபோதும், ஒரு சிலர் தங்களின் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள். ஆனால், அப்படியான பயணங்கள் அவ்வளவு எளிதானதல்ல. அவை மிக நீண்ட பயணங்களாக இருக்கலாம். ஆபத்துக்களை உள்வாங்கியவையாக இருக்கலாம். இவ்வளவுயேன், அந்தப் பயணங்களுக்காகப் பெரும் விலையைக்கூட கொடுக்க நேரிடலாம். தடைகளைக் கண்டு பின்வாங்காது பெரும் வைராக்கியத்தை மனதுக்குள்ளும், தங்களின் கனவுக்குள்ளும் சுமந்து செல்கிறவர்கள் மாத்திரமே இலக்கை அடைகிறார்கள். அந்த வெற்றி சாமான்யமானதல்ல. அது விபரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. உலக வரலாற்றை நிரப்பிய பல சாதனையாளர்கள் அவ்வாறுதான் தங்களின் வெற்றிச் செய்தியை உலகுக்கு உரக்க அறிவித்தார்கள். அவ்வாறாக ஏதேனுமொரு மகத்தான கனவை நோக்கிப் பயணிப்பவராக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கானதே.


நூல் விமர்சனம்: ரஸவாதி

சந்தியாகு என்பவன் ஸ்பெய்னின் கிராமமொன்றில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இளைஞன். அவனது பெற்றோர் அவன் ஒரு பாதிரியாராக வருவதையே விரும்பினார்கள். அது ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திற்கு மிகப் பெரும் கௌரவமும் கூட. ஆனால், அவனது கனவு அதைவிட மிகப் பெரியது. அவன் வெறுமனே மத உபதேசங்களைச் செய்துகொண்டு ஒரே இடத்தில் தன் வாழ்வைத் தொலைத்துவிட விரும்பவில்லை. மாறாக, அவன் இந்தப் பரந்த உலகத்தை அனுபவிக்க விரும்பினான். வெறும் கதை வழிச் செய்திகளாக மட்டும் அறிந்து கொண்ட தூர தேசங்களுக்கெல்லாம் பயணம் செய்வதற்கும், பல்வேறு புதுமைகளைக் காணவும் அனுபவிக்கவும் விரும்பினான். ஆனால், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்துவிட்ட அவனுக்கு அது அவ்வளவு எளிதானதல்ல. எனினும், தன் கனவுகளுக்கு பணம் ஒரு தடையாக இருக்குமென்று அவன் பின்வாங்கவில்லை. தன் தந்தையின் உதவியோடு சில ஆடுகளை தனக்கென விலைக்கு வாங்கிக்கொண்டான். இனி அவன் ஒரு ஆடு மேய்ப்பவனாக தன் மனம் போன திசைகளெல்லாம் பயணப்பட்டான். ஒரு நல்ல இடையனாக ஆடுகளின் மேய்ச்சல் நிலங்களைத் தேடி மாத்திரம் அவன் பயணம் செய்யவில்லை, தன் கனவுகளின் திசைகளைத் தேடியும்தான் பயணம் செய்தான்.

இவ்வாறு பல இடங்கள் தோறும் பயணித்தவனுக்கு எதிர்பாராவிதமாக எகிப்தின் பிரமிட்டுக்களுக்கருகில் புதையல் இருப்பது தெரியவரவே, அதை நோக்கி தரை வழியாகவே பயணப்பட்டான். மிக நீண்டதும், அபாயகரமானதுமான அந்தப் பயணத்தின் கதையே இந்த ‘ரஸவாதி’ என்ற புதினமாகும். 1987 ஆம் வருடம் பௌலோ கொய்லோ என்பவரால் எழுதப்பட்டு உலகப் புகழ் பெற்ற ‘The Alchemist’ என்ற புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே இதுவாகும். இந்த நூல் மற்றைய சாதாரண நூல்களைப் போல அவ்வளவு எளிதில் கடந்துவிடக் கூடியதல்ல. இதன் வலிமை மிகப் பெரியது. நாம் படிக்கின்ற அனைத்து நூல்களும் எம்மைக் கவர்ந்துவிடுவதோ பாதித்துவிடுவதோ கிடையாது. வெகு சில மாத்திரமே அப்படிச் செய்யக்கூடியவை. அப்படியான நூல்களின் பட்டியலில் ரஸவாதிக்கு மிகமுக்கிய பங்கு இருப்பதற்குக் காரணம், அதன் கதை நெடுங்கிலும் நிறைந்து கிடக்கின்ற ஆழமான தத்துவங்கள் தான். அந்தத் தத்துவங்கள் அந்த இளைஞனை நோக்கிக் கூறப்படுகிறவையாக கதை நெடுங்கிலும் அமைந்திருந்தாலும், அவை வாசகர்களை நோக்கியும் பேசப்படுவதாக மிகத் தத்துரூபமாக கதையுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பவன் எதிர்கொள்ளக்கூடிய தடைகளும் சவால்களும் அந்த இளைஞனின் கதாபாத்திரம் வாயிலாக இந்நூல் வாசகர்களுக்கு உபதேசம் செய்கிறது. பெரும் இலட்சியப் பயணத்தின் இடர்பாடுகளில் எங்கெல்லாம் ஒரு மனிதன் தடுமாறக்கூடும் என்ற உண்மைகளை மிக எளிய வசனநடைகளினூடாக, இந்தப் புதினம் வாசகர்களின் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகச் சென்றடைகிறது. ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் அற்புதமான சக்தியை எப்படி வெளிக்கொணர்வது என்ற கோட்பாட்டின் பிரதிபலிப்பே இந்தக் கதை. கதையில் ஆங்காங்கே தோன்றும் சில மாயாஜாலக் காட்சிகள், யதார்த்தவாதச் சிந்தனையுள்ள வாசகர்களுக்கு சில சமயம் சலிப்பைத் தரலாம். ஆனால், அந்த மாயாஜாலங்களைத் தாண்டி கதைக் கரு கொண்டிருக்கின்ற தத்துவங்கள் மிக ஆழமானவை.

இந்தக் கதையைப் படிக்கின்றபோது ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துகிடக்கும் வாழ்வைப் பற்றிய விடை தெரியாக் கேள்விகளுக்கு நிச்சம் விடைகள் கிடைக்கும். ஆனால், அந்த விடைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவையாக நிச்சயம் அமையாது. கேட்பவர் யார் என்பதைக் கொண்டு விடைகளும் தனித்தன்மையானவையாக இருக்கும். ஏனென்றால், அந்தக் கேள்விகட்கெல்லாம் பதில் சொல்லப்போவது இந்நூல் அல்ல, படிப்பவரின் மனம் தான். ஆம், இத்தனை நாளாய் பேசாது கிடந்த எங்கள் மனங்களை இந்நூல் பேச வைக்கிறது. அது பேச ஆரம்பித்த பின்னர் எங்கள் கேள்வி எதுவாகயிருந்தாலும், எங்கள் மனங்களை நோக்கிக் கேட்க முடிகிறது. மனம் நிச்சயமாக அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் செய்கிறது. ஏன் என்றால், எங்கள் மனதுக்கு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தெரியும். அந்த உண்மையைத் தான் இந்தக் கதையும் உணர்த்துகிறது. 

1987 ஆம் வருடம் ‘The Alchemist’ என்ற இந்நூல் வெளிவந்த போது ஆரம்பத்தில் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆரம்பத்தில் மெல்ல மெல்ல விற்பனையாகத் தொடங்கி ஒரு கட்டத்திற்கப்பால் சடுதியாக விற்பனை அதிகரித்தது மட்டுமல்லாமல், உலகின் அதிக பிரதிகள் விற்றுத் தீர்த்த புத்தகங்களின் பட்டியலில் இணைந்து மகத்தான சாதனையும் படைத்தது. இதுவரை முப்பது மில்லியனுக்கு அதிகமான பிரதிகள் விற்பனையாகியது மட்டுமல்லாமல் உலகின் அறுபத்து இரண்டு மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டுமிருக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் மேற்கத்தேய நாடுகள் பலவற்றின் பள்ளிகளில் பாடப் புத்தகமாகவும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை `ரஸவாதி` என்ற பெயரில் தமிழில் சி.முருகேசன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் எளிமையான மொழிநடைகள் கதையைச் சலிப்பில்லாது நகர்த்திச் செல்கிறது.

கனவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவராக நீங்களும் இருந்தால், இந்நூல் உங்களுக்கு மகத்தான ஒரு பொக்கிஷமாக இருக்குமென்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்கள் தற்போது நடந்து செல்பவராகயிருந்தால், இது உங்களை இனி துடிப்புடன் இலக்கை நோக்கி ஓட வைக்கும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருப்பவராகயிருந்தால், காற்றைவிட வேகமாகப் பறக்க வைக்கும். பயணத்தை தொடங்கலாமா வேண்டாமா என்று தயங்குபவர்களை முதல் அடியெடுத்து வைத்து துவக்கி வைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்தை இடைநடுவில் கைவிட்டவர்களை மீண்டும் முன்பைவிட வேட்கையுடன் பயணிக்கவும் வைக்கும்.  இனியென்ன! படித்தவுடன் உங்கள் பயணத்துக்குத் தயாராகிவிடுங்கள்.



- உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.




No comments:

Post a Comment