May 29, 2020

எண்ணம்













திரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அவன் தூக்கத்தைத் தொலைத்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவன் நிகழ் உலகத்தையே கிட்டத்தட்ட மறந்திருந்தான். இவை எல்லாவற்றுக்கும் காரணம் அந்தப் புத்தகம் தான். அந்தப் புத்தகம் அவனைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது. அதிலிருந்து மீளவும் முடியாமல் அதை உதாசீனப்படுத்தவும் முடியாமல், அவன் தடுமாறிக் கொண்டும், எதையோ சிந்தித்தபடி தனக்குத் தானே பேசிக் கொண்டுமிருந்தான். அதை படித்தது தவறென்று தன்னைத் தானே நொந்து கொள்வதா அல்லது அதன் எழுத்துக்களைக் கண்டு பூரிப்பதா என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். அந்தக் குழப்பங்களினால்தான் அவன் தூக்கமற்ற இரவுகளோடு போராட வேண்டியிருந்தது. அவனின் இந்த அசாதாரண நிலைமைக்குக் காரணம், ஒரு வாரத்திற்கு முன்னர் அவன் படித்த ஒரு புத்தகம்தான் என்று சொன்னால் எவரும் அதை நம்பப் போவதில்லை.

கதிர் மிகப் பெரிய புத்தகப் பிரியன். அவனைப் பிரியன் என்று சொல்வதைக் காட்டிலும் பித்தன் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். அவனும் அப்படிச் சொல்லிக் கொள்வதைத்தான் பெரிதும் விரும்பினான். ஆனாலும், அவனது பொருளாதார நிலை புத்தகங்களை புதிதாக விலைக்கு வாங்கிப் படிக்கும் படியாக எப்போதுமே இருந்ததில்லை. வறுமைக்கென்றே எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு விவசாயக் குடும்பத்தின், அந்தப் பதினாறு வயது இளவலுக்கு பெரும்பாலும் புத்தகங்கள் என்பவை இரவல் சொத்து மாத்திரம்தான். சில விதி விலக்கான சமயங்களில் மாத்திரம் பிறர் படித்துவிட்டு விற்பனை செய்கிற பழைய புத்தகங்களை இரண்டாம் உடமையாளனாக விலைக்கு வாங்கும் பாக்கியம் கிட்டும். அப்படியான சந்தர்ப்பங்கள் பெரும்பாலும் வருடத்திற்கு ஓரிரு முறையாகவே அமையும். அதற்குக்கூட அவன் பல மாதங்களாக பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்தாக வேண்டியிருக்கும்.

அப்படி ஒரு நிகழ்வாகத்தான் அவன் அன்றும் அந்தக் கடைக்குச் சென்றிருந்தான். அது அவனுக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கி விற்கின்ற கடை. பெரும்பாலும் அங்கு கிடைக்கும் புத்தகங்கள் அதன் உண்மை விலையில் பாதி விலைக்குக் குறைவாகவே இருக்கும். ஆனாலும், அங்கு ஒரேயொரு சங்கடம் மட்டும் தவிர்க்க இயலாதது. அங்கு அவனுக்குப் பிடித்த புத்தகங்களைக் கேட்டு வாங்க முடியாது. அங்கு என்ன இருக்கிறதோ அவற்றைத்தான் வாங்கிக் கொள்ள முடியும். சில சமயங்களில் பையில் இருக்கும் பணத்தின் பெறுமதிக்கு எது கிடைக்குமோ அதை மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். ஆனாலும், அவன் அவற்றையெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. தனக்குச் சொந்தமாக ஒரு புத்தகம் கிடைப்பதே அவனுக்குப் பேரானந்தமாகவிருக்கும்.

அன்று அவன் அந்தக் கடையின் புத்தக அடுக்குகள் வழியே உலாவிக் கொண்டிருந்தபோது மிகப் பழமையான பருமனான ஒரு புத்தகம் அவனது கண்ணில் பட்டது. அதன் சிதைந்த முகப்பு அட்டையில் சாமுரா என்று தலைப்பிடப்பட்டிருந்ததை சற்று சிரமப்பட்டு படிக்க முடிந்தது. முகப்பு அட்டைதான் சிதைந்திருந்ததேயொழிய அதன் உட்பக்கங்கள் பெரும்பாலும் உயிர்ப்போடுதான் இருந்தன. அதன் பழுப்பேறிய பக்கங்கள் எழுத்துக்களை சிதைத்துவிடவில்லை என்பது சற்றுத் திருப்தியளித்தது. அதைத் தவிரவும் அது ஒரு புதினம் என்பதுதான் அவனுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. கதைகள் படிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டிருந்த அவன் அதை திருப்தியோடு மிகக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டான்.

அவன் நினைத்தது போலவே அந்தப் புத்தகம் மிகச் சுவாரசியமானதாக இருந்தது. சாதாரண புத்தகம் ஒன்றையே ஆர்வத்தோடு படிக்கும் அவனுக்கு அப்படியொரு சுவாரசியமான புத்தகம் கிடைத்தால் கேட்கவும் வேண்டுமா! அவன் பள்ளி சென்று வருகிற சமயம் தவிர்த்து மற்றைய அனைத்துப் பொழுதுகளையும் அந்தப் புத்தகத்துடனேயே கழித்தான். அதன் கதையோட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அது சாமுரா என்ற ஒரு இளைஞனைப் பற்றிய கதை. வாழ்வில் மிகக் கொடிய வறுமையின் பிடியில் இருக்கும் சாமுரா என்ற அந்த இளைஞன், தன் கனவுகளை அடைந்து கொள்ள எப்படியெல்லாம் வாழ்வோடு போராடுகிறான் என்பதாகவே அந்தக் கதை நகர்ந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட தன் வயதையும் தன் பொருளாதாரச் சூழ்நிலையையும் ஒத்திருந்த சாமுராவின் கதை கதிரினது தற்கால வாழ்வுக்கு மிக நெருக்கமாக இருந்தமையால், அவன் அதை தன் கதைபோலவே எண்ணிக் கொண்டான். அதனால்தான் அவனால் அவ்வளவு ஆர்வமாகவும் அதனைப் படிக்க முடிந்தது.

இவ்வாறு அதிக ஆர்வத்தோடு அந்தப் புதினத்தைப் படித்துக்கொண்டு, அதன் இறுதிப் பக்கத்தை அவன் அடைந்தபோது, அவனுக்கு ஓர் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் நிறைவடைந்துவிட்ட போதும், அதன் கதை முற்றுப் பெற்றிருக்கவில்லை. இறுதிப் பக்கத்தின் இறுதி வாக்கியம் முற்றுப் பெறாமலேயே திடீரென இடை நடுவே நின்றுபோயிருந்தது. அந்தப் புத்தகத்தின் இறுதிப் பக்கங்கள் சில காணாமல் போயிருக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொள்ள கதிருக்கு வெகுநேரங்கள் ஆகவில்லை. எல்லாவற்றையும் விட சாமுரா கதை நடுவே திக்குத் திசையற்று நின்று கொண்டிருப்பதுதான் கதிருக்கு எரிச்சலைத் தந்தது. அவனுக்கு தன்னை நினைக்கக் கோபம் கோபமாக வந்தது. ஒரு புத்தகத்தை அதன் அனைத்துப் பக்கங்களும் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து வாங்க முடியாத அளவுக்கு தான் ஒரு ஏமாளியாய் இருந்ததையிட்டு அவன் தன்னைத் தானே சபித்துக் கொண்டான். அவனால் அதனை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

உடனே புறப்பட்டு புத்தகம் வாங்கிய கடையை அடைந்தான். ஆனாலும், கடைக்கார வயோதிபர் அதற்குப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். அவனுக்கு புத்தகம் முழுமையானதாக இல்லை என்பதை விட, சாமுராவின் மீதிக் கதை என்னவென்று தெரியாததுதான் பெரும் துன்பமாக இருந்தது. சாமுராவின் மீதிக் கதை என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளாமல், அவனால் ஒரு நிமிடத்தைக் கூட நிம்மதியாகக் கடந்துவிட முடியவில்லை. அந்தக் கடையில் அந்தப் புதினத்தின் வேறு பிரதி இருக்கிறதா என்று தேடினான். ஆனால், அந்த ஒன்றைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தான் புத்தகம் இரவல் பெறும் நண்பர்களை விசாரித்தான். அவர்களுக்கு அப்படியொரு புத்தகம் இருப்பதே தெரிந்திருக்கவில்லை. அவனுக்குத் தெரிந்த எந்தவொரு நூலகங்களிலும் அப்படியொரு புத்தகத்தைக் காண முடியவில்லை. இந்த எழுத்தாளர் ஒரேயொரு புத்தகத்தை மட்டும்தான் வெளியிட்டாரா என்பது போல ஆச்சரியமாகவும், ஏமாற்றமாகவுமிருந்தது. அவனால் சாமுராவின் மீதிக் கதையை அறிந்து கொள்ளாமல் நிம்மதியடைய முடியவில்லை.

சில நாட்களில் அதிலிருந்து வெளி வந்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் சாமுரா அவனை விடுவதாயில்லை. ஒரு வாரத்திற்கு மேலாகியும் அதன் பாதிப்பிலிருந்தும், சாமுராவின் மீதிக் கதை தெரியவில்லை என்ற ஏமாற்றத்திலிருந்தும் அவனால் வெளிவரவே முடியவில்லை. வாழ்க்கையில் முதன் முறையாக இப்படியொரு புத்தகமும், அதன் கதாபாத்திரமும் தன்னைத் தொல்லை செய்வதை எப்படிப் கையாள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. எங்கு தேடியும் அந்தப் புத்தகத்தின் வேறு ஒரு பிரதியையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. இறுதியாக அவன் ஒரு முடிவுக்கு வந்தான். தனிமையான பொழுது ஒன்றில் ஒரு பேனாவையும் சில காகிதங்களையும் கையில் எடுத்தான். ஆம்! அவன் மீதிக் கதையை தானே எழுதிவிடுவதென்று தீர்மானித்திருந்தான். அது அவனுக்குச் சுவாரசியமாகவும் இருந்தது. அவன் விருப்பம் போல சாமுராவிற்கு அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்று அவனது சொந்தக் கற்பனைகளின் வழியே எழுதத் தொடங்கினான்.  உண்மையில் தன்னையே சாமுராவாக எண்ணிக் கொண்டுதான் எழுதினான்.

முதன் முறையாக கதை எழுத ஆரம்பித்த முயற்சி அவனுக்குக் குதூகலமாகவிருந்தது. அவன் தன் கற்பனையெல்லாம் திரட்டி எழுதிக் கொண்டேயிருந்தான். அவனது எழுத்தில் எழுத்தாளர்களுக்குண்டான நெளிவு சுளிவுகள் இருக்கவில்லை என்றபோதும், அவன் அதற்காக அலட்டிக் கொள்ளவுமில்லை. அவன் மனம் போன போக்கில் சாமுராவாகவே பயணப்பட்டான். இரண்டு வாரங்கள் முழுக்க இப்படி எழுதிக் கொண்டேயிருந்தவனுக்கு ஒரு கட்டத்திற்கப்பால் சலிப்புத் தட்டிய போதுதான், அவன் சாமுராவின் கதையை முடித்து வைத்தான். தான் எழுதிய பகுதிகளையும் அந்தப் புத்தகத்துடன் இணைத்துக் கொண்டான். அவனது மனம் அத்தோடுதான் ஆசுவாசப்பட்டது. தனக்கு மிகப் பிடித்த புத்தகம் ஒன்றை படித்த திருப்தி மட்டுமல்லாமல் அதை எழுதி நிறைவு செய்து வைத்த திருப்தியும் அவனைப் பூரணப்படுத்தியிருந்தன. அதன் பின்னர் அவன் எப்போது புத்தகங்கள் வாங்கினாலும் மிக அவதானமாக புத்தகங்களைப் பரிசோதித்து வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். தான் எழுதிய அந்தப் புத்தகத்தை அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்தாலும், கால ஓட்டத்தில் அதை அவன் மறந்திருந்தான்.

***

ன் படிப்பை வெற்றிகரமாக முடித்து ஒரு ஆசிரியராக ஆகியிருந்த அவனுக்கு, சில வாரங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது. வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பித்திருந்தவனுக்கு வெளியூர் ஒன்றுக்குப் பணி இடமாற்றம் வரவே, மனைவியோடு அங்கு குடிபெயர வேண்டியிருந்தது. அப்படியான சந்தர்ப்பத்தில் தன் பொருட்களை பொதிசெய்கிற போதுதான், பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தப் புத்தகம் அவனது கண்களில் பட்டது. அதைப் பார்த்ததுமே அது பற்றிய இனிமையான பழைய நினைவுகள் அவனை நிறைத்துக் கொண்டன. அன்றைய நாட்களில் தான் எப்படியெல்லாம் குறும்புத்தனமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சிரிப்பாகவும் இருந்தது. மறக்காமல் அந்தப் புத்தகத்தையும் தன் கையோடு எடுத்துக் கொண்டான். அதன் கதையை தன் புது மனைவியிடம் சொல்லி அவளைப் பூரிக்கச் செய்ய விரும்பினான்.

வாடகைக் கார் ஒன்றில் அவர்கள் புதிய ஊரை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். மனைவி ராதா அவனது தோளில் சாய்ந்தபடி காரின் ஜன்னல் வழியாக தூரத்துக் காட்சிகளை இரசித்தபடி இருந்தாள். அந்த அமைதியான பயணத்தில் அந்தப் புத்தகத்தை அவன் மீண்டும் புரட்டினான். அடுத்த கணமே அவனது பள்ளிக் கால நினைவுகள் எல்லாம் கண் முன்னே ஓடி வந்தன. அவை நினைக்க நினைக்க இனிமையாகத் தோன்றின. அவன் பக்கங்களை மெல்ல மெல்லப் புரட்டிக் கொண்டிருந்தான். தன் எழுத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தவனை தீடீரென்று ஒரு பதற்றம் பற்றிக்கொண்டது. நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அதை வாசிக்க வாசிக்க ஆச்சரியமாக இருந்தது. அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அந்தப் புத்தகத்தில் அவன் பல ஆண்டுகள் முன்பு எழுதிய கதை அச்சொட்டாக அவனின் கதையாகவும் இருந்தது. அந்தக் கதையை எழுதிய பின்னர் அவனது வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் அந்தக் கதையில் அதற்கு முன்பே அவனால் எழுதப்பட்டிருந்தன. எழுதியது அவன்தான் என்றாலும், அதை வெகு காலங்களுக்கு முன்னரே முற்றிலுமாக மறந்திருந்தவனுக்கு, எப்படி இது சாத்தியம் என்று வியப்பாக இருந்தது. சாமுரா என்ற காதாபாத்திரத்தின் வாழ்வில் நடப்பதாக அந்தக் கதையில் தான் எழுதியிருந்த பல்வேறுபட்ட சம்பவங்கள் தன் வாழ்வில் கடந்த காலங்களில் எப்படி நடந்தது என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. `இது ஏதும் மாயாஜாலமா? அல்லது நான் எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய தீர்க்கதரிசியா?` என்று தன்னைத் தானே கேள்வி கேட்டான். வியப்பு ஒன்றைத் தவிர அவனிடம் பதில் எதுவும் இருக்கவில்லை.

அந்த ஆச்சரியத்தை ராதாவிடம் கூறலாமா என்று யோசித்தான். ஆனாலும் அவளை நம்பச் செய்யக்கூடிய எந்தவொரு விடயங்களும் தன்னிடம் இருக்கவில்லை என்பதனால், இன்னும் இன்னும் பக்கங்களைப் புரட்டி அதில் இருக்கின்ற வேறு என்னென்ன சம்பவங்கள் தனக்கு நடந்திருக்கிறது என்பதை வியப்போடு தேடிக் கொண்டிருந்தான். ஆசிரியப் பணியில் இணைந்தது, அப்பாவின் மறைவு மற்றும் சொந்த மாமாவின் மகளையே திருமணம் செய்து கொண்டது என பல்வேறுபட்ட சம்பவங்கள் சாமுராவுக்கு நடப்பது போல, தான் எழுதியவைகளே தன் வாழ்விலும் நடந்திருப்பதைக் கண்டு அவனால் ஆச்சரியப்படாமலும், அச்சப்படாமலும் இருக்கமுடியவில்லை. அப்போதுதான் அந்தக் கதையில் சாமுரா என்ற கதாபாத்திரம் அடிக்கடி தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் வாசகமான “நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்.” என்ற வாசகம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அது அவனுக்கும் பிடித்த வாசகம்தான். எண்ணங்கள் மிக வலிமையானவை என்று அவன் சமீப காலமாகக் கேள்விப்பட்ட விடயங்களும், படித்த விடயங்களும் அவனுக்கு ஞாபகம் வந்தன. எண்ணங்களை வடிவமைப்பதன் மூலம் எங்கள் வாழ்வை எப்படி வேண்டுமானாலும் நாங்கள் விரும்புகிறபடி மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்ற அவனது சமீபகால நம்பிக்கை அவனுக்கு முற்றிலும் உண்மை என்று ஊர்ஜிதமாகிற்று.

`ஆகா! எப்போதோ ஒரு காலத்தில் என் கதை என்று எண்ணியபடி சாமுராவுக்காக நான் எழுதிய கதை உண்மையிலேயே இன்று பலித்திருக்கிறதே` என்று எண்ணுகிற போது, அவனுக்குப் புலங்காகிதமாய் இருந்தது. நாம் எங்களை எதுவாக நினைத்துக் கொள்கிறோமோ, எங்களுக்குள் என்ன எண்ணங்களை விதைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்ற தன் அண்மைக் கால நம்பிக்கையில் அவனுக்கு அசைக்க முடியாத பற்று உருவாகியது. `அந்தக் கதையை எழுதுகிறபோது, இந்த உண்மை தெரிந்திருந்தால், சாமுராவை இதைவிடவும் மிகப் பெரும் வெற்றியாளனாகவும் அதிஸ்டக்காரனாகவும் வடிவமைத்து அதன் பலனை நாம் இன்று அனுபவித்திருக்கலாமே` என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். `அதனால் என்ன! விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து எழுதலாம். இனி என் வாழ்வில் நடக்கப் போகும் ஒவ்வொன்றும் எனக்குப் பிடித்ததாகவே இருக்கப் போகிறது` என்று எண்ணியபடி கதையின் தொடர்ச்சியை வடிவமைக்க இறுதிப் பக்கத்தைப் படித்தான்.  ஆனால் துரதிஸ்டவசமாக அதன் இறுதி வாக்கியத்தில் சாமுரா மரணமடைந்த செய்தி எழுதப்பட்டிருந்தது. அவன் அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது எதிரில் ஒரு லாரி தன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து திமிறியபடி வந்து கொண்டிருந்தது!

முற்றும்.


- உங்களுக்கு இந்தச் சிறுகதை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இந்தச் சிறுகதை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.




No comments:

Post a Comment