May 22, 2020

ஒரு ஊர்ல ஒரு ராஜா














`ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்` என்ற வாக்கியத்தினால்தான் எம்மில் பலரது குழந்தைப் பருவ இரவுகள் அழகூட்டப்பட்டது என்று சொன்னால், அதில் மிகை எதுவும் இருக்கப் போவதில்லை. ஸ்மார்ட் ஃபோன்களும், தொலைக் காட்சிகளும் எம் வாழ்வியலில் பெரும்பாலும் நுழைவதற்கு முன்பு அந்தத் தொழில்நுட்பத்தின் பணியை நிறைவேற்றியது எம்மில் பலரதும் வீடுகளில் இருந்த பாட்டன் அல்லது பாட்டி என்ற அற்புதமான கதை சொல்லிகள்தான். அவர்களிடம் கதை கேட்பதற்காகக் காத்துக் கிடந்த பொழுதுகளையும் தவிப்புகளையும் இன்றைய நாட்களில் ஏக்கத்துடன் எண்ணிப் பார்க்கிறபோது, அந்தத் தவிப்பை இன்றைய எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் ஈடு செய்துவிட முடியவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை. எனக்கு அவ்வாறாக கதைகளின் உலகத்தை அறிமுகம் செய்தவர் என் பாட்டனார்தான். அதிகம் கல்வி கற்றிடாத அவரது கதைகள்தான் எனக்குள் விழுந்த முதல் கற்பனை விதை என்பதில் எனக்குத் தெளிவான நம்பிக்கையுண்டு.

தினம் இரவில் தொடங்கும் அந்தக் கற்பனைப் பயணம் பெரும்பாலும் `ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்` என்பதாகவே தொடங்கும். அவ்வாறு இல்லையென்றாலும் முடிகிறபோதாவது ராஜாவோடு முடியும். என் பாட்டனுக்கு பல ராஜாக்களைத் தெரிந்திருப்பது அப்போது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. அவர் எனக்கு அறிமுகம் செய்த ராஜாக்களை என்னால் எங்கள் தெருக்களிலோ அல்லது ஊரிலோ பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், அது மேம்போக்கானதுதான். ஏனெனில், அந்த ராஜாக்களை என் கற்பனையினூடே பார்க்கும் வித்தையை நான் என் பாட்டனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தேன். ஒரு வேளை என் தெருக்களில் ராஜாக்களை நான் காண நேர்ந்திருந்தால்கூட, என் கற்பனையில் உலாவிய ராஜாக்களின் அளவுக்கு அவர்கள் நேர்த்தியானவர்களாகவும் வீர தீரர்களாகவும் இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனாலும் அந்தக் கதைவழிப் பயணங்கள் எனக்கு வெகுகாலங்கள் நீடிக்கவில்லை என்பது துர்ப்பாக்கியமான உண்மைதான். என் கதை சொல்லிப் பாட்டன் தன் சொந்தக் கதையை நிறைவு செய்து கொண்டு மாற்று உலகை நோக்கிப் புறப்பட்டதுமே அந்த ராஜாக்களும் அவரோடு சேர்ந்தே போய்விட்டிருந்தனர்.

அதன் பின்னர் என் கற்பனை ஊற்று பெரும்பாலும் தடைப்பட்டுத்தான் போனது. அதை மீண்டும் ஊற்றெடுக்கச் செய்யும் வித்தையை மிக நீண்ட காலங்களுக்கு என்னால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தமையால், அந்தத் தாகத்தை நான் தொலைக்காட்சிகளின் காட்சிப் பிம்பங்களினூடு தணித்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்டேன். ஆனாலும், என் கற்பனையில் அரசாட்சி நடாத்திய  ராஜாக்களின் அளவுக்கு தொலைக்காட்சி ராஜாக்கள் என்னை பாதிப்பதாக இல்லாதது பெரும் ஏமாற்றமாகவே இருந்து வந்தது.  எனினும், எதிர்பாராத சந்தர்ப்பம் ஒன்றில் அந்தக் கற்பனை ராஜாக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வித்தையை நான் கற்றுக்கொண்டேன். அந்த வித்தை ஒளிந்துகொண்டிருப்பது எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட ஒரு காகித அடுக்கிற்குள் என்பதை நான் கண்டுகொண்டேன். அதன் பெயர் புத்தகம் என்று நீங்கள் சொன்னாலும் நான் அதை மறுக்கப் போவதில்லை. ஆம், எப்போது நான் புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேனோ, அந்தக் கணமே பல ஆண்டுகள் உயிரற்றுக் கிடந்த என் ராஜாக்கள் உயிர் பெற்றுக் கொண்டு வாள் வீசத் தொடங்கினார்கள். அவர்களுக்கு நான் மீண்டும் வாழ்க்கை கொடுத்ததற்காக எனக்கு நன்றி பாராட்டிக் கொண்டார்கள்.  அன்றுதான் நான் அறிந்துகொண்டேன், கற்பனை அறிவை விட உயர்வானது என்றும், எழுத்துக்கள் காட்சிகளை விட வீரியமானது என்றும். அன்றிலிருந்து என் கற்பனைகளும் நான் படிக்கும் எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. சில நேரங்களில் எழுத்து வெற்றி பெற்றாலும், பெரும்பாலான நேரங்களில் கற்பனை எழுத்தைக் காட்டிலும் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றதுண்டு. ஆனாலும், இரண்டும் தனித் தனியாக இயங்க முடியாதவை என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

மகாபாரதத்தை பெரும் தொலைக்காட்சித் தொடராக பார்த்த போது ஏற்படாத ஆச்சரியம், அதைக் கதையாகப் புத்தகங்களில் படித்த போது ஒவ்வொரு பக்கங்களிலும் எனக்குள் ஏற்பட்டதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதைவிடவும், அதுவரை பாதகனாக பலராலும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த துரியோதனன் அதன் பின் நாயகனாகவும், உத்தமர்கள் என்ற சான்றிதழ் பொறித்திருந்த பாண்டவர்கள் சதிகாரர்களாகவும் மாறிப்போனார்கள். இவையெல்லாவற்றையும் விட, கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி பிரம்மாண்டப் படைப்பென்று உருவாக்கப்பட்ட பாகுபலி திரைப்படமோ, அதன் போர்க் காட்சிகளோ தந்துவிடாத மிகப் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும், வர்ணனை மன்னன் எனக் குறிக்கப்படும் சாண்டில்யனின் கடல் புறா புதினத்தின் இறுதி யுத்தமான ஸ்ரீ விஜய மாநகர யுத்தத்தைப் படிக்கிற போது என் கற்பனைகள் எனக்குத் தந்தன. அப்படியான பிரம்மாண்ட யுத்தத்தை அதன் பிரம்மிப்புக் குன்றாமல் காட்சியாக்க வேண்டுமாயின், சில நூறு ராஜமௌலிகளாவது எமக்குத் தேவைப்படும் என்பதை என்னால் தைரியமாகச் சொல்லவும் முடியும்.

இப்படியாக நான் என்றோ தொலைத்த ராஜாக்கள், நான் திரைகளில் தேடியும் கிடைகாத அந்த ராஜாக்கள் எனக்கு எழுத்துக்களினால் திரும்பக் கிடைத்தார்கள். இது வெறுமனே என் கதை மாத்திரம் தான். இதைக் காட்டிலும் உங்கள் கதை சுவாரசியமாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருக்கக் கூடும். ஆனால், நான் கேட்க விரும்புவது, நம் அடுத்த சந்ததியும் இந்தக் கற்பனை ஊற்றை உபயோகிக்கக் கற்றுக் கொள்கிறார்களா என்ற கேள்வியைத்தான். விரும்பியோ விரும்பாமலோ இந்தக் கேள்விக்கு இல்லை என்ற பதிலைத்தான் எம்மால் தர முடிகிறது. கதை சொல்லிப் பாட்டன்களோ பாட்டிகளோ இல்லாத அளவிற்கு குடும்ப உறவுகள் மிகச் சுருங்கிவிட்ட இன்றைய சூழ்நிலையில், வீடியோ காணொளியொன்றாக அல்லாமல் இன்றைய குழந்தைகள் எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. எழுத்துக்கள் அவர்களுக்கு அந்நியமாக ஆகிக்கொண்டிருக்கின்றன. புத்தக வாசிப்புக்கள் வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் கதைகளைக் கூட எழுத்துக்களாக அல்லாமல் வெறும் காணொளிக் காட்சிகளாகவே அறிந்துகொள்ளப் பிரியப்படுகிறார்கள். இதனால் கற்பனைத் திறன் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும் கற்பனைக் கதையை எழுதுவதற்காக அல்ல, குறைந்த பட்சம் தனக்குப் பொருத்தமான உடையைத் தேர்ந்தெடுப்பதற்காகவேனும் அவர்கள் கற்பனையாற்றலை வளர்த்துக் கொள்ள முடியாத காலகட்டத்தை நோக்கி வாழ்க்கை முறை சென்றுகொண்டிருக்கிறது.

மின்குமிழ் பற்றிய கற்பனை எடிஷனுக்குத் தோன்றாது போயிருந்தால், நாம் இன்றும் குப்பி விளக்குக்கு மண்ணெண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்திருப்போம். வானளாவிய தஞ்சைப் பெருங்கோவில் பற்றிய கற்பனை பேரரசன் இராஜராஜச் சோழனுக்கு தோன்றாது போயிருந்தால், எம் மூதாதைத் தமிழர்கள் எம்மை விட புத்திசாலிகள் என்பதை ஏற்க மறுத்திருப்போம். ஆக, இதுவரை நிகழ்ந்த அனைத்துப் புத்தாக்கங்களும் கற்பனையின் விளைவுகள்தானேயன்றி வேறொன்றல்ல. அவ்வாறு இல்லையேல் உலக ஓட்டம் என்றோ ஸ்தம்பித்து நின்றிருக்கும். ஆகையினால், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதைத் தரப்போகிறீர்கள்? எவரோ ஒருவர் வடிவம் கொடுத்த காட்சிகளையா அல்லது தாங்களே வடிவமிட்டுக் கொள்ளும் கற்பனைகளையா என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


- உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment