May 1, 2020

நரவேட்டை














காலம் சில இரத்த சரித்திரங்களை போகிற போக்கில் புதைத்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், உண்மைகள் காலத்தின் பிணக்குழிகளிலிருந்து தாமதமாகவேனும் வெளிவரத்தான் செய்கின்றன. 1964 ஆம் வருடம் வேடமலைக் காடுகளில் நடந்த அந்த நரவேட்டைகள், அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாதவை. சுமார் நாப்பது ஆண்டுகள் கழித்து உண்மை வெளிவந்தபோது, சிங்கநாடு கிராமம் மட்டுமல்ல, முழுத் தேசமும் நடுங்கித்தான் போனது. அன்றைய நாட்களில் இரண்யனுக்கும் அவனது தம்பி இருவேளனுக்குமிடையே பரம்பரை சொத்துத் தகராறு பெரும் குடும்பப் பகையாக மாறியிருந்தது. அண்ணன் தம்பி இருவரும் சொத்துக்காக ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கிற அளவுக்கு வெறிகொண்டிருந்தார்கள். இருவரும் காங்கோச்சடையருக்குப் பிறந்த இரு மகன்கள்தான். ஆனால், தாய் இருவருக்கும் வேறு வேறு. காங்கோச்சடையர் வேடமலைக் காடுகளை அண்டியிருக்கும் சிங்கநாடு என்ற அகன்று விரிந்த ஊரில் மிக முக்கியமானவர். அந்த ஊரில் பாதி நிலம் அவரின் பேரில்தான் இருப்பதாக சிங்கநாட்டு மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். ஊரையே தன் அந்தஸ்த்தின் பாதத்திற்குக் கீழ் வைத்திருந்த காங்கோச்சடையர் இறந்த பின்னர், அவரின் முதல் மனைவியின் மகன் இரண்யனுக்கும், இரண்டாம் மனைவியின் மகன் இருவேளனுக்குமிடையே சொத்துத் தொடர்பில் முரண்பாடு முற்றிவிட்டது.

காங்கோச்சடையர் இறக்கும்போது இருவருக்கும் சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுத்திருந்தாலும், தான் வாழ்ந்த வீட்டை மட்டும் யார்பேரிலும் எழுதாமல் இருவருக்கும் பொதுச் சொத்தாக விட்டுச் சென்றுவிட்டார். இப்போது அந்த வீடு யாருக்குச் சொந்தம் என்பதில்தான் இரண்யனுக்கும் இருவேளனுக்கும் பகை முற்றியிருந்தது. தன் தாய் வாழ்ந்த வீடு என்ற படியால் அது தனக்குத்தான் உரிமையானது என்பது இரண்யனின் வாதம். தானும் தன் தாயும் அங்கு வாழ்ந்ததில்லை என்றபோதும், இருவருக்கும் பொதுவான சொத்தை இரண்யன் சுருட்டிக்கொள்ளப் பார்ப்பதால், அதில் தான் முந்திக்கொள்ள வேண்டும் என்பது இருவேளனின் தந்திரம். ஆக, இது தீராப் பிரச்சனையாக தினம் தினம் வளர்ந்துகொண்டேயிருந்தது.

பெரும் தலைவலியாக மாறிப்போயிருந்த இந்தச் சிக்கலுக்கு இரண்யனிடத்தில் தீர்வு எதுவும் இருக்கவில்லை. இறுதியாக கருமுனியிடமே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்தான். கருமுனி என்பவர் சிங்கநாட்டிலும் அதை அண்டிய ஊர்களிலும் மிகப் பிரபலமான சாமியார். அவரை சாமியார் என்று சொல்வதைக் காட்டிலும், முனி என்றுதான் அதிகம் பேர் அழைத்தார்கள். அந்த ஊர்களிலுள்ள மக்கள் கருமுனிக்கு மிகப்பெரும் ஞான சக்தி இருப்பதாக நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு இரண்யன் மட்டும் விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப்போனால், இரண்யனுக்கு கருமுனிதான் குரு, ஆலோசகர் எல்லாமே. என்ன முக்கியமான காரியமாக இருந்தாலும், என்ன குழப்பமான சூழ்நிலையாக இருந்தாலும் அவன் உடனே கருமுனியிடம் ஓடிப் போய்விடுவான். அதன் பின் அவர் சொல்வதுதான் அவனுக்கு வேத வாக்கு.

பெருங்குழப்பத்தோடு கருமுனியின் குடிசை ஆசிரமத்தை அவன் சென்றடைந்த போது, அவர் அவனுக்காகவே காத்திருப்பது போல சிறு புன்னகையோடு ஆசிரமத்தின் மையத்தில் சம்மாளம் கோலி அமர்ந்திருந்தார். அவரின் புன்னகையை புரிந்துகொள்ள முயன்ற அவன், தான் வரப்போகும் தகவலை யாராவது முன்பே இவருக்குச் சொல்லியிருப்பார்களோ என்று சிந்தித்தான். இல்லை இல்லை, இது அவரின் தீர்க்கதரிசனமாகக்கூட இருக்கலாமல்லவா என்று, அவன் தன்னைத் தானே சமாதானமும் செய்துகொண்டான். அவருக்கு முன்னால் பவ்வியமாக அமர்ந்துகொண்டு தன் பிரச்சனையைக் கூறிவிட்டு அவரின் பதிலுக்காகக் காத்திருந்தான். முழுவதையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு சிறு புன்னகையோடு கண்களை மூடிய கருமுனி, சில நிமிடங்கள் கழித்து கம்பீரமான குரலில் கண்களைத் திறக்காமலேயே பேசத் தொடங்கினார்.

“இரண்யா! நீ யாசகம் கேட்டு வந்திருப்பது வெறும் வீட்டையல்ல, ராஜயோகத்தை.”

“புரியல்லையே சாமி.”

“ம்… உனக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லைதான். சொல்கிறேன் கேள். உனக்கு மிகப் பெரும் ராஜயோகம் காத்திருக்கிறது. உனக்கு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது. ஆனால், இத்தனையும் நடக்கவேண்டுமாகயிருந்தால், உன் அப்பன் வாழ்ந்த வீடு உன்னுடையதாக இருக்கவேண்டும். அது உனக்கு உடமையானால் மாத்திரம்தான், உனக்கு ராஜயோகமும், போகமும் தேடி வரும். ஆக அந்த வீடு தான் ராஜயோகத்துக்கான சாவி.”

“அது நடக்கணும்னா, நான் என்ன பண்ணணும் சாமி?”

“நீ ராஜாவாகவேண்டுமாகயிருந்தால், நீ இன்னுமொரு ராஜாவைப் பலியெடுக்க வேண்டும்.”

“ராஜாவையா? யாரை சாமி?”

“ராஜவாகன்.”

“ராஜவாகனையா?” என்று இரண்யன் வாய் பிழந்தான்.

ராஜவாகன் என்று கருமுனி சொன்னது வேடமலைக் காடுகளில் மட்டுமே வாழும் ஒரு அரிய வகைக் கழுகுகளைத்தான். அவற்றின் இறக்கைகள் இருபுறமும் விரிந்த நிலையில் ஆறு அடிகள் இருக்கும், அவற்றின் உயரம் மூன்று அடிகளுக்குக் குறையாமல் இருக்கும். சிங்கநாட்டை அண்டிய பகுதிகளில் ராஜவாகன்கள் என்பது கழுகு இனப் பறவைகளுக்கே ராஜாவாக மக்களால் கருதப்பட்டது. இதைவிட சிறப்பம்சம் என்னவென்றால், வேடமலைக் காடுகளில் வாழ்ந்து பெரும்பாலும் அழிந்துபோன, நீறிகள் என்ற வேட்டுவ இன மக்கள், ராஜவாகன்களைத் தங்களின் கடவுள்களாக வணங்கினார்கள். ராஜவாகன்கள் பார்ப்பதற்கே கம்பீரமாகவும், பார்ப்பவரை பயங்கொள்ளச் செய்யும் தோரணையும் கொண்ட இராட்சசப் பறவைகள். அதன் பெயரை கருமுனி சொன்னதும், இரண்யனுக்கு பெரும் வியப்பாகவும் பதற்றமாகவும்தான் இருந்தது.

கருமுனி தொடர்ந்தார்;

“ஆம்! ராஜவாகனேதான். அதன் ராஜலக்கினத்தால் மட்டுமே உன்னை ராஜாவாக்க முடியும். ஒரு ராஜவாகனைப் பலியெடுத்து அதன் தலையை உன் அப்பன் வாழ்ந்த வீட்டின் முற்றத்தில் புதைத்து வை. அந்த வீடு சீக்கிரத்தில் உன்னை வந்து சேரும்.”

“ஆகட்டும் சாமி.”

“ஆனால் ஒரு நிபந்தனை. நீ ராஜவாகனை வேட்டையாடப்போவதோ, அதன் மூலம் ராஜாவாகப்போவதோ உன்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியக் கூடாது. மீறினால், அனைத்தும் கைமீறிப் போகலாம்.”

“ஆகட்டும் சாமி.”

கருமுனி இப்படி தெய்வ வாக்குச் சொன்னதும், இரண்யனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த நாளே தன் குலதெய்வத்தை வணங்கிவிட்டு, தன் வேட்டைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கிழம்பிவிட்டான். அவன் துப்பாக்கியோடு காட்டுக்கு வேட்டைக்குச் செல்வது வழமையான ஒன்றுதான் என்றபடியால், அவனுக்கு அதிக சிரமங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், ராஜவாகனை வேட்டையாடுவது மற்ற மிருகங்களை வேட்டையாடுவதனைப்போல அவ்வளவு எளிதல்ல. அதன் கூர்மையான கண்கள் காட்டை எந்நேரமும் அளந்துகொண்டேதானிருக்கும். அதன் கண்களில் படாது, அதற்கே குறி வைத்தாக வேண்டும். ராஜவாகன்கள் வானத்தில் வட்டமிடுவதை மட்டும்தான் அவன் பல முறை பார்த்திருக்கிறான். வானத்தில் வட்டமிடும் போது நிச்சயமாக அதைச் சுட முடியாது. எனவே அது எங்காவது ஓய்வெடுக்கும் போது தான் சுட வேண்டும். ஆனால், அவை எங்கு ஓய்வெடுக்கும் என்ற விபரம் இரண்யனுக்குத் தெரியாது. அந்தத் தகவல்கள் தெரிந்திருக்கக்கூடியவன் உவக்கி ஒருவன் மட்டும் தான். ஆகையினால், அவன் உவக்கியின் குடிசையை அடைந்தான்.

உவக்கி எலும்பும் தோலுமான ஒரு பரிதாபகரமான தோற்றம் கொண்டவன். வயது நாப்பதுக்கு சற்றுக் குறைவாக இருக்கலாம். கிராமத்திற்கும் காட்டிற்குமான எல்லையில் சிறு குடிசையமைத்து தன்னந்தனியாக தன் சீவியத்தைக் கடத்திக்கொண்டிருந்தான். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவனான அவன், நீறிகள் இனத்தைச் சேர்ந்தவன். நீறிகள் என்பவர்கள் வேடமலைக் காடுகளில் விலங்குகளை வேட்டையாடியும், அவற்றைக் காட்டை அண்டிய கிராமங்களுக்குக் கொண்டு சென்று பண்டமாற்றுச் செய்தும் வந்த மிகச் சிறிய வேட்டுவ இனக்கூட்டம். மிகவும் தொன்மையான பழங்குடியினரான அவர்கள், ராஜவாகன்களை தங்களின் கடவுளாக வழிபட்டார்கள். ஒரு நாள் பொழுதுசாயும் வேளையில், வேடமலைக் காட்டில் நீறிகள் வசித்த பகுதியைச் சூழ திடீரென்று தீ பரவியது. அந்தத் தீயில் உவக்கியைத் தவிர நீறிகள் இனம் வேரோடு எரிந்து அழிந்து போனது. அந்த சம்பவம் நிகழ்ந்த வேளை, பதின்ம வயதுச் சிறுவனாகயிருந்த உவக்கி, காட்டுத் தேன் விற்க கிராமத்திற்குள் வந்திருந்தான். அவன் காடு திரும்புவதற்கு முன் அவனின் இனமே எரிந்து அழிந்து போனது. அதிஷ்டவசமாக அவன் ஒருவன் மாத்திரம் உயிர் பிழைத்தான். ஆனால், அது துரதிஷ்டவசமானதும் தான்.

அந்தக் கொடுந்தீயை நேரில் பார்த்த சிலர், நீறிகள் கடவுளாக வணங்கிய ராஜவாகன்கள்தான் தீப்பொறிகளை எங்கிருந்தோ சுமந்துவந்து, நீறிகளின் குடியிருப்புக்களைச் சூழ வீசி, தீ மூட்டியதாகக் கூறினார்கள். ராஜவாகன்களை ஏதோ காரணத்தால் நீறிகள் வஞ்சித்துவிட்டதாகவும், அதற்குப்  பழிவாங்க, அவை நீறி இனத்தையே கொன்றொழித்ததாகவும் ஊர்களில் மக்கள் பேசிக் கொண்டார்கள். இதில் எது உண்மை, எது கட்டுக்கதை என்று தெளிவில்லாவிட்டாலும், ராஜவாகன்கள் வஞ்சம் தீர்க்கும் கொடிய இராட்சசப் பறவைகள் என்ற எண்ணம் மட்டும் பலர் மத்தியில் இருக்கத்தான் செய்தது. பொதுவான மக்கள் மத்தியிலேயே இப்படியொரு அச்சம் இருக்கும் போது, உவக்கியின் நிலையோ இன்னும் கவலைக்கிடமானது. தனது மூதாதையர்களையே வேரோடு கொன்றழித்த ராஜவாகன்கள், நீறி இனத்தில் தான் ஒருவன் மட்டும் உயிர் தப்பியதை அறிந்துவிட்டால் அவை தன்னையும் விட்டுவைக்காது என்று அஞ்சிக்கொண்டே வாழ்வைக் கடத்திக்கொண்டிருந்தான். பெரும்பாலும் அவன் ராஜவாகன்களின் கண்களில்படுவதைத் தவிர்த்தே வந்தான். தன் மூதாதையர்கள் போல, காடுதான் தனக்கும் வாழ்வாதாரம் என்றிருந்தபோதும், காட்டில் எங்காவது ராஜவாகன்களைக் காண நேர்ந்தாலோ, அவை வானத்தில் வட்டமிடுவதைக் கண்டாலோ பதறியடித்து ஓடிச் சென்று மறைவுகளில் ஒளிந்துகொள்வான். அவை அந்த இடத்தைவிட்டு அகல்கிற வரை, அவன் அவ்விடத்தை விட்டு அசைய மாட்டான்.  இதனால் ராஜவாகன்கள் காட்டில் எங்கு தங்கும், எங்கு ஓய்வெடுக்கும் எங்கிருந்து முழுக்காட்டையும் நோட்டமிடும் என்ற விபரங்கள் முழுக்க அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனபடியினால்தான், இரண்யன் உவக்கியின் குடிசையைத் தேடிச் சென்றான்.

“டே... உவக்கி, உன்னையத்தான் தேடி வந்தேன்.”

“வாருங்கோ ஐயாவே! வாருங்கோ!”

“டே உவக்கி, எனக்கு உங்கிட்ட ஒரு சேதி தெரிஞ்சிக்கணுமே.”

“கேளுங்கோ ஐயாவே, எனக்குத் தெரிஞ்ச சேதியின்னா, மறைக்காமச் சொல்லிப்புடுவேன்.”

“ராஜவாகன் காட்டுக்குள்ள எங்க இளைப்பாறும்னு உனக்குத் தெரியுமில்லே. அது எங்கேன்னு எனக்குச் சொல்லு.”

இரண்யன் ராஜவாகன் என்று சொன்னதுதான் தாமதம், உவக்கிக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டத் தொடங்கிவிட்டது.

“டே! ஏன் இப்படிப் பயப்படுறே.”

“ஐயோ எனக்கு அந்தப் பேரைக் கேட்டாலே நெஞ்சு வெடிச்சுப் போகும் ஐயாவே. எதுக்காகக் கேக்குறீயன்னும் புரியல்லையே ஐயாவே?”

“டே பயப்படாதே. ராஜவாகன்களுக்கு நம்ம ஊர் மேல ஏதோ கோபம் இருக்குறதா பெரியவங்க பேசிக்கிறாங்க. ஆதனாலதான் பிராயச்சித்தமா அதுங்களுக்குப் புடிச்ச மாமிசங்களை வேட்டையாடி படையலொன்னு போடலாமுன்னு தீர்மானிச்சிருக்கோம். அதுகளோட கோவம் தணிஞ்சிதுன்னா நீ கூட தைரியமா நடமாடலாமில்லே.”

“உண்மைதான் ஐயாவே. அவயலோட கோபம் தணியிற வரைக்கும் எனக்கு விமோசனமே கிடையாது ஐயாவே.”

“ம்… அதனாலதான் கேக்கிறேன். எங்கேன்னு சொல்லு.”

உவக்கி சொன்ன திசையில் வெகுதூரம் காட்டில் நடந்து சென்ற இரண்யன், பளிங்குப் பாறையின் அடிவாரத்தை அடைந்தான். பளிங்குப் பாறைதான் ராஜவாகன்கள் இளைப்பாறுகிற இடம் என்பது, அங்கு கிடந்த அவற்றின் எச்சங்களினாலும், அவை உண்டு வீசிய மாமிச எலும்புத் துண்டுகளாலும் தெளிவாக நிரூபணமாகியது. இளைப்பாறுவதற்கு மட்டுமல்லாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டு காட்டை மொத்தமாக நோட்டம் விடுவதற்கும் ராஜவாகன்களுக்கு இந்தப் பாறைதான் பொருத்தமான இடமாக இருக்க முடியும் என்று அவன் எண்ணிக்கொண்டான். பாறையின் பக்கவாட்டிலிருந்த புதர்களுக்குள் தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு, ஏதேனுமொரு ராஜவாகனுக்காகக் காத்திருந்தான். ஆனால், அவன் பொறுமையை சோதிக்குமளவுக்கு வெகு நேரத்திற்குக் காத்துக் கிடக்கவேண்டியிருந்தது. பொறுமையிழந்து போய்விடலாமா என்று அவநம்பிக்கை எழுந்தபோது, பட படவென்று பலமாக இறக்கைகளை அடித்துக்கொண்டு கம்பீரமாக ஒரு ராஜவாகன் பாறையின் முனையில் வந்தமர்ந்தது. முதன் முறை இவ்வளவு அருகில் ராஜவாகனைப் பார்த்த இரண்யனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. ராஜவாகனின் சூரத் தோற்றம் அடிமனதில் சற்றுக் கிலி கொள்ள வைத்தது. ஆனாலும், அவனின் புத்தி தடுமாறவில்லை. துப்பாக்கியை தன் இலக்கிற்குக் குறிபார்க்கத் தொடங்கினான். ராஜவாகன் சற்று அயர்ந்து அதன் அலகை மலைப்பாறையில் உரசிக்கொண்டிருந்த சமயம் பார்த்து துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தினான். தோட்டாவொன்று பாய்ந்து சென்று அதன் நெஞ்சைப் பதம்பார்க்க, அது அடித் தொண்டையில் அலறியபடி சாய்ந்து விழுந்து இறந்தது. தன் வேட்டைத் திறனில் எப்போதும் கர்வம் கொண்டிருந்த இரண்யன் கம்பீரமாக நடந்து சென்று, தன் வேட்டைக் கத்தியால் அதன் தலையைக் கொய்தெடுத்துக்கொண்டு வெற்றி உறுமலுடன் வீட்டை நோக்கி நடந்தான். இதையெல்லாம் பார்த்தவாறு மற்றோர் ராஜவாகன் மேகங்களுக்குக் கீழாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

கருமுனி சொன்னது போல ராஜவாகனின் தலையை முற்றத்தில் புதைத்து நான்காவது நாள், இருவேளனிடமிருந்து இரண்யனுக்குச் சேதி வந்தது, அந்த வீட்டை நீயே வைத்துக்கொள் என்று. இரண்யன் மெய் சிலிர்த்துப்போனான். ராஜவாகனுக்கு இப்படியொரு சக்தியிருக்கிறதா என்று பிரம்மித்து நின்றான். ஆனால், அதன் பின்னர்தான் அவனுக்குக் கெட்ட நேரம் ஆரம்பமாகியது. வீடு கைக்கு வந்த மகிழ்ச்சியில், குடியும் கூத்துமாக பொழுதைக் கழித்த இரண்யன் குடிபோதையில் தான் ராஜவாகனை வேட்டையாடிய கதையை உளறிவிட, அந்தச் செய்தி ஊர் முழுக்கப் பரவி கிலி கொள்ள வைத்தது. ராஜவாகன்கள் மற்றப் பறவைகள் போல சாதாரணமானவையல்ல, அவை வஞ்சம் தீர்க்கக்கூடியவையென்று வெகுவாக நம்பியிருந்த ஊர் மக்களுக்கு, இரண்யன் இப்படி ராஜவாகனையே வேட்டையாடிய கதை தெரியவரவே, நீறிகளுக்கு ஏற்பட்ட நிலையே தங்களுக்கும் நிகழ்ந்துவிடப்போகிறது என்று மிரண்டுபோனார்கள். வானத்தில் ராஜவாகனைக் காண்கிறபோதெல்லாம் வீடுகளுக்குள் ஓடி ஒழிந்துகொண்டார்கள். இன்னும் சிலர் கையெடுத்து அதைக் கும்பிட்டுக் கொண்டார்கள். கிராமமே இப்படி அஞ்சிக் கொண்டிருந்தபோது, இரண்யனுக்கு மட்டும் புத்தி வேறு விதமாக வேலை செய்தது.

ராஜவாகனில் மிகப் பெரும் அதிஷ்ட சக்தி இருப்பதாக நம்பிய இரண்யன், இன்னுமொரு முறை அதைப் பரீட்சித்துப் பார்த்தால் என்ன என்று சிந்தித்தான். ஒரு முறை வெற்றியைச் சுவைத்த அவனுக்கு தயக்கம் சிறிதும் இருக்கவில்லை. தீர்மானித்தது போலவே, இன்னுமொரு ராஜவாகனை வேட்டையாடுவதற்காகத் துப்பாக்கியுடன் காட்டுக்குக் கிழம்பினான். ஆனால், வேட்டைக்குச் சென்றவன் அதன் பின்னர் வீடு திரும்பவேயில்லை. பலரும் சந்தேகித்ததுபோல, வேட்டைக்குச் சென்று மூன்றாம் நாள், அவனது பிணம் பளிங்குப் பாறைக்கு அருகில் கிடந்ததனை அவனைத் தேடிச் சென்றவர்கள் கண்டுபிடித்தார்கள். அவனின் உடலில் தலை இருக்கவில்லை. உடம்பு முழுவதும் ராஜவாகனின் அலகுகள் பதிந்த தடம் இருந்தது. அவைகள் உண்டது போக சிதைந்த மீதிப் பிணமே அவர்களுக்குக் கிடைத்தது. ராஜவாகன் வஞ்சம் தீர்த்த கதை ஊர் முழுக்கப் பரவி, மிச்சம் மீதியிருந்த நிம்மதியையும் மக்களிடையே இழக்கச் செய்தது.

இந்தச் சம்பவங்களும் நம்பிக்கைகளும் இருவேளனைப் பிரம்மிக்க வைத்தது. தான் அந்த வீட்டை வேண்டாம் என்றதற்கு, ஒரு வேளை ராஜவாகனின் சக்திதான் காரணமாகவிருக்குமோ என்று ஐயம் கொள்ளத் தொடங்கினான். அவன் அந்த வீட்டை வேண்டாம் என்றதற்கு நேரடியான காரணம் அவனின் தாயார்தான்.  அந்த வீடு தனக்கு அதிஷ்டம் இல்லாதது என்று கருதி, அவள் அதை விட்டுவிடும்படி கூறியதனாலேயேதான், அவன் அவ்வாறு செய்தான். ஆனால், ராஜவாகனின் சக்தியால்தான் அவனின் தாயாருக்கு அப்படியொரு சிந்தனை திடீரென்று தோன்றியிருக்குமோயென்று அவனுக்குத் தோன்றியது. அது மட்டும் உண்மையாக இருந்தால், தான் ஒரு சக்கரவர்த்தி போல வாழலாம் என்று கனவுகண்டான். இரண்யனால் ஓர் ராஜவாகனை வேட்டையாட முடியுமென்றால் தன்னால் ஏன் முடியாது என்று சிந்தித்தவன், பளிங்குப் பாறைக்கு அருகே துப்பாக்கியுடன் வெறிகொண்டு காத்திருந்தான்.

சில நாளிகைகள் காத்திருப்பின் பின்னர், ஒரு மகாராஜாவுக்கான வீர தோரணையோடு காற்றைக் கிழத்துக்கொண்டு ஒரு ராஜவாகன் பாறையின் மீது வந்தமர்ந்தது.  அது அங்கு அமர்ந்திருந்தவாறே கூரிய விழிகளால் தன் பார்வையை காடுகளுக்குள் வீசி இரை தேடிக்கொண்டிருந்தது. அதன் கண்களில் கொடும் பசியும் கொலை வெறியும் மின்னிக் கொண்டிருந்தன. அதன் நீண்ட அமைதியானது எப்பேற்பட்ட இராட்சச இரையையும் ஒரே அடியில் வீழ்த்தும் மனவலிமையை அதற்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஏதேனுமொரு இரையின் சிறு அசைவுக்காக அது காத்துக்கொண்டிருந்தது. அதன் கால்கள் எப்போது வேண்டுமானாலும் பறப்பதற்குத் தயாராகவிருந்தன. அதை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்த இருவேளன், மறைந்திருந்தவாறே அரவம் இல்லாமல், துப்பாக்கியை ராஜவாகனின் கழுத்துக்குக் குறிவைத்தான். இன்னும் சில நொடிகளில் தோட்டாவைப் பாயவைக்கத் தயாராகவிருந்தான். அவனுக்கு அதன் கழுத்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவன் ட்ரிகரை அழுத்தத் தயாரானான். மறுகணம் கழுத்திலிருந்து இரத்தம் பீறிக்கொண்டு பாய்ந்தது. ஓ…வென்று கத்திக்கொண்டே இருவேளன் சுருண்டு விழுந்தான். அவனது கழுத்தில் வேலினைப் பாய்ச்சியவாறு கோரத் தோற்றத்தோடு உவக்கி நின்றிருந்தான். இருவேளனின் கழுத்திலிருந்து பீறிட்டுப் பாய்ந்த குருதி உவக்கியின் முகமெங்கும் தெறித்து, சூரசம்ஹாரம் செய்த காளியைப்போல அவன் நின்றிருந்தான். இருவேளன் சுருண்டு விழுந்து இறக்கும்வரை தன் கண்களை அகல விரித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த உவக்கி, காடே அதிரும்படி கர்ஜித்தான். பின்னர், அண்ணனைப் போலல்லாமல், இவன் அதிகம் துடிக்காமலேயே செத்துவிட்டானே என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு, ராஜவாகன்களை வஞ்சிக்க நினைப்பவர் எவராயிருந்தாலும் அவர்கள் நரவேட்டையாடப்பட வேண்டியவர்களே, அது இரண்ய இளவேளனாகயிருந்தாலென்ன, நீறிகளாகயிருந்தாலென்ன என்று எண்ணியவாறே மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தான். அவனது நெஞ்சுக்குள் பெரும் காட்டுத் தீயொன்று எரிந்துகொண்டிருந்தது.


முற்றும்.

- உங்களுக்கு இந்தச் சிறுகதை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- `நரவேட்டை` சிறுகதை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.





.