December 20, 2017

கடவுள் இருக்குமிடம்


நான் கிட்டத்தட்ட என் இலக்கை நெருங்கியிருக்கிறேன். என் பதின்மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பலன் கிட்டும் காலம் மிக அருகில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. நான் உருவாக்கிய டிடெக்டரிலிருந்து பச்சை நிற இன்டிகேட்டர் பல்பு இரண்டு முறை எரிந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அது அங்கிருந்து எனக்கு வந்த சிக்னல்தான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நிச்சயம் அது நிகழப்போகிறது என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதனால், என்னால் அதிகாலை இரண்டு மணியாகியும் தூங்க முடியவில்லை. எந்த நேரமும் எனக்கு அங்கிருந்து தகவல் வரக்கூடும் என்பதால், கடவுள் இருக்குமிடத்தை அறிவதற்கான என் ஆராய்ச்சியை இன்னும் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்களுக்கும், கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று தங்களுக்குரிய மதங்களில் கூறப்பட்டவற்றை மட்டும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும், எனது இந்த ஆராய்ச்சி பைத்தியகாரத் தனமாக இருக்கக்கூடும். ஆனால் என் ஆராய்ச்சி அந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் தகர்த்தெறியப் போகிறது என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை.  நான் ஆன்மீகத்தோடு விஞ்ஞானத்தையும் பிரயோகித்து இந்த அரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் உருவாக்கிய கண்டுபிடிப்புக்களைப் போலவே இந்த ஆராய்ச்சியும் எனக்கு வெற்றியளிக்கப்போகிறது. பதின்மூன்று வருடங்களாக எனது விருப்பு வெறுப்புக்களை மறந்து, என்னை முற்றிலும் அர்ப்பணித்து என் பல நாள் தூக்கத்தைத் தொலைத்துச் செய்யும் இந்த ஆராய்ச்சி நிச்சயம் விரைவில் கடவுள் இருக்குமிடத்தை எனக்கு கண்டுபிடித்துத் தரப்போகிறது. எனக்கு கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு விரைவில் அழைப்பு வரப்போகிறது.

ஆம், மீண்டும் அந்த டிடெக்டரில் பச்சை பல்பு எரிகிறது. கடந்த முறை போல் விட்டு விட்டு எரியாமல், இப்போது தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கிறது. இது நிச்சம் கடவுளிடமிருந்து வரும் சிக்னல்தான். கடவுள் சக்தியின் மின் காந்த அலைதான் இந்த பல்பு எரிவதற்கான காரணம். ஆஹா! இப்போது பல்பு இன்னும் பிரகாசமாக எரிகிறது. அந்தக் கடவுள் சக்தியின் அலைகள் எனக்கு மிக அருகில் வந்துகொண்டிருக்க வேண்டும். அதனால்தான் பல்பு இப்படி பிரகாசிக்கிறது. நிச்சயம் கடவுள் சக்தியிடமிருந்து எனக்கு ஏதோவொரு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. என்னால் என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பல்பு இன்னும் பிரகாசமாகிறது!

சக்தி இன்னும் என்னை நெருங்கி வந்துவிட்டது போலும்!

பல்பு இன்னும் இன்னும் பிரகாசமாகிறது!

ஆஹா! என் ஆராய்ச்சி கைகூடப் போகிறது!

பல்பு இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. அந்தப் பல்பின் பச்சை நிற வெளிச்சம் இப்போது என் ஆராய்ச்சி அறை முழுக்க நிறைந்திருக்கிறது. எனக்கு ஆர்வம் பலமடங்காகப் பெருகிக்கொண்டிருக்கிறது. என் பல வருட உழைப்புக்குப் பலன் கிட்டப்போகிறது.

ஐயோ! என்ன இது?

ஏன் அறை முழுக்க இருளாகிவிட்டது?

எரிந்துகொண்டிருந்த பச்சை நிற இன்டிகேட்டர் பல்புக்கு என்னவாகிவிட்டது? என் அறையில் எரிந்து கொண்டிருந்த சுவர் லாம்பு கூட அணைந்துவிட்டதே! நான் ஏமாந்து விட்டேனா? என் ஆராய்ச்சியெல்லாம் பாழாகிவிட்டதா? ஐயோ கடவுளே! ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? என் உழைப்பெல்லாம் நாசமாகிவிட்டது. என் பலவருடக் கனவு பாதியிலேயே கைகூடாமல் போய்விட்டது.

என்ன இது திடீரென்று ஓர் வெளிச்சம் எனக்குப் பின்னால்? நான் ஆர்வமாகப் பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அங்கே ஓர் ஜோதிப் பிளம்பு போல் ஒன்று பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. அதன் ஒளி என் கண்களைக் கூசச் செய்யுமளவிற்குப் பிரகாசமாகவிருக்கிறது. என்னால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் கடவுளா? கடவுள் இப்படித்தான் இருப்பாரா?

என்னால் எதையும் தெளிவாக நிர்ணயிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லை. ஏனென்றால் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. இது உண்மை தானா என்று கூட என்னால் உறுதிப்பட நிச்சயிக்க முடியவில்லை. என் ஆச்சரியமும் வியப்பும் என்னைத் திணறடித்துக்கொண்டிருக்கிறது. அந்த ஜோதி ஒளி என்னை அதனிடம் இழுப்பது போல் ஓர் உணர்வை என்னால் உணர முடிகிறது. என்னை அறியாமலேயே என் கால்கள் அதை நோக்கி நடக்கத் தொடங்குகிறது. என் கால்களை என்னால் தடுக்க முடியவில்லை. அது காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பு போல அந்த ஜோதியை நோக்கி இழுக்கப்படுகிறது. என் இதயம் பயத்தில் பட படக்கிறது. இது கடவுள் சக்தியின் தண்டனையாக இருக்குமா? என்னை அந்த ஜோதி எரித்துவிடப்போகிறதா? ஐயோ! என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை, அப்படி ஒன்றை. அது என்னை மேலும் இழுக்கிறது.

நான் அதற்கு அருகில் வந்துவிட்டேன்.

என்னால் என்னைத் தடுக்க முடியவில்லை.

நான் இன்னும் அருகில் நெருங்கிவிட்டேன்.

என்னால் அந்த ஜோதியின் வெப்பத்தை லேசாக உணர முடிகிறது.

இன்னும் பக்கத்தில் வந்து விட்டேன்.

ஐயோ! நான் எரியப் போகிறேன்.

என்ன இது, அந்த ஜோதி பிளந்துகொள்கிறது? இது பார்ப்பதற்கு ஓர் நுழைவாயில் போல் இருக்கிறதே. அப்படியென்றால், கடவுள் இருக்குமிடத்தை அடைவதற்கான வாசல்தான் இதுவா? ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். அதன் நடுவில் ஏற்பட்ட பிளவு வழியாக ஓர் பாதைபோல் தெரிகிறதே! நான் என் ஆச்சரியத்தைக் கொஞ்சம் கூடக் குறைத்துக் கொள்ள முடியாமல், சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த ஜோதிப்பிளம்பின் வாசல் வழியாக உள்ளே நுழைகிறேன்.

ஆஹா! என்ன இது ஆச்சரியம்!

பார்ப்பதற்கு இது ஓர் மாளிகை போல் இருக்கிறது. என் ஆராய்ச்சி அறையில் இருந்து எப்படி இங்கு வந்து சேர்ந்தேன்? என்ன மாளிகை இது? இது எங்கிருக்கிறது. தலையைச் சுழற்றி சுற்றும் முற்றும் பார்க்கிறேன். என் கண்ணில் படுகிற அத்தனையும் எனக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இந்த மாளிகைச் சுவர்கள் கற்களாலோ சீமெந்தினாலோ கட்டப்பட்டது போல் இல்லையே. இதன் சுவர்கள் தண்ணீரால் செய்யப்பட்டது போல் மினுமினுத்துக் கொண்டிருக்கிறதே. இது எப்படிச் சாத்தியம்? மாளிகையில் தொங்கவிடப்பட்டிருக்கும் அலங்காரங்கள் கண் சிமிட்டுகின்றனவா? ஆம் அவை என்னைப் பார்க்கின்றன. இது தான் கடவுள் இருக்குமிடமா!

“மானுடா! கடவுள் நகரம் உன்னை வரவேற்கிறது. எதற்காக நீ இங்கு வர முயன்றுகொண்டிருந்தாய்?”

ஓர் கம்பீரக் குரல் கர்வமாக என் காதில் கேட்கிறது. நான் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய அங்குமிங்கும் பார்க்கிறேன். அதற்குள் மறுபடியும்

“மானுடா, நீ யாரைத் தேடுகிறாய்?”

“உங்களைத்தான் தேடுறேன் கடவுளே. நீங்க என் கண்ணுக்குத் தெரியவே மாட்டேங்கிறீங்களே!”

“ஹா… ஹா… ஹா…. அப்பனே! நான் கடவுளல்ல”

“நீங்க கடவுள் இல்லையா? அப்படீன்னா, நீங்க யாரு?”

“நான் சாதாரணமானவன். நான் கடவுளின் சேவகன்”

“நான் உங்களை என் கண்ணால பார்க்கணும் கடவுளின் சேவகரே.”

நான் சொல்லி முடிப்பதற்குள் ஓர் அழகிய இளைஞன் என் கண் முன் நிற்கிறான். அவன் என்னைப் பார்த்து ஒரு குறும்புப் புன்னகை செய்து கொண்டிருக்கிறான். அவன் பார்ப்பதற்கு ஒரு சாதாரண மனிதன் போலவேயிருக்கிறான்.

“நீங்க தான் கடவுளின் சேவகரா?”

“ஆம் மானுடா. அதில் உனக்கென்ன சந்தேகம்?”

“உங்களைப் பார்த்தா ஒரு சாதாரண மனுசன் போலதானே இருக்கிறீங்க. கடவுளோட சேவகன் ஒரு சாதாரண மனுசனா இருக்க முடியுமா?”

“நீ ஒரு சாதாரண மானுடன் என்பதால், நானும் உன் கண்களுக்கு சாதாரண மானுடனாகவே தெரிகிறேன். அல்லாமல், நீ ஒரு மீனாக இங்கு வந்திருந்தால் நானும் ஒரு மீனாகவும், நீ ஒரு நாயாக வந்திருந்தால் நானும் ஒரு நாயாகவும் உன் கண்களுக்குத் தெரிந்திருப்பேன். உன் மனதளவில் நீ யாராக இருக்கிறாயோ, அப்படியே அந்த உருவிலேயே நீ கடவுளைக் காண்பாய். கடவுள் அனுக்கிரகம் பெற்ற என்னையும் காண்பாய்.”

“என்ன சொன்னீங்க? நான் கடவுளைக் காண்பேனா? ஆமா, நான் இத்தனை வருஷமாகக் கஸ்டப்பட்டது அதுக்காகத்தான். இப்போ இங்கே வந்ததும் அதுக்காகத்தான். நான் கடவுளைப் பார்க்கணும். என்னை அவர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க.”

“அது இப்போது இங்கு சாத்தியமில்லை மானுடா. கடவுள் சிலகாலம் இங்கில்லை. அவர் தற்போது பூவுலகில் தான் இருக்கிறார்.”

“அப்படியா? எங்க இருக்கிறார்? சொல்லுங்க, நான் அவரைப் பார்த்தே ஆகணும்”

“அது சாத்தியமில்லை மானுடா. கடவுள் இருக்குமிடம் உனக்கு அறிவிக்கப்பட்டாலும் உன்னால் அவரைக் காண இயலாது.”

“ஏன் என்னால பார்க்க முடியாது? உலகத்திலே அவர் எங்கே இருக்கிறாருன்னு மட்டும் சொல்லுங்க. எந்த மூலையிலே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கிறேன்.”

“அது அவ்வளவு எளிதல்ல. கடவுள் இருக்குமிடத்தை யாராவது ஒரு மானுடன் அறிந்து கொண்டுவிட்டால், அவர் அங்கிருந்து அகன்றுவிடுவார். அவர் வேறு ஒரு புதிய இடத்தை அடைந்து விடுவார்.”

“அப்டீன்னா, நான் கடவுளைப் பார்க்கவே முடியாதா?”

“ஒரு வழி இருக்கிறது. கடவுள் இருக்குமிடத்தை நான் உனக்கு அறிவித்து அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் நீ அவரைச் சந்தித்தால் மட்டும் அவரை உன்னால் பார்க்க முடியும். தவறினால் ஐந்து நிமிடங்கள் கடந்த அடுத்த நொடியே அவர் அங்கிருந்து அகன்றுவிடுவார்.”

“சரி, எங்கேன்னு சொல்லுங்க. என்னால அவரைக் கண்டுபிடிக்க முடியும்.”

“சொல்கிறேன் அருகில்வா. அதை உன் காதில் மட்டும் தான் சொல்ல இயலும்.”

அவர் என் காதில் அந்த இரகசியத்தைக் கூறினார். அதற்குமேல் என்னால் ஒரு கணம் கூட அங்கிருக்க முடியவில்லை. ஒரு நொடியைக் கூட வீண் விரயமாக்காமல் நான் சென்ற வழியே மிக வேகமாகத் திரும்பி வந்து அவர் கூறிய கடவுள் இருக்குமிடத்தை நோக்கி ஓடுகிறேன்.

நான் கடவுள் இருக்குமிடத்தை நெருங்கிவிட்டேன்.

நான் கடவுளைக் காணப்போகிறேன்.

நான் அந்த இடத்தை அடைந்து விட்டேன்.

நான் அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைகிறேன்.

நான் கடவுளை அடையப்போகிறேன்.

ஐயோ! நான் ஏமாந்துவிட்டேன்.

நான் ஒரு நொடி தாமதித்துவிட்டேன். கடவுள் இங்கிருந்து சென்றுவிட்டார். என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை. நான் கடவுளை ஒரு நொடியால் தவறவிட்டுவிட்டேன். இல்லை… இல்லை… என் அறியாமையால் இத்தனை காலமாய் காணாது தவற விட்டுவிட்டேன். அவர் சென்றுவிட்டார். அவர் குடியிருந்த மனித உடம்பு மட்டும் இங்கே இருக்கிறது. இத்தனை காலமும் நான் ஏறெடுத்துக்கூடப் பார்க்காத, என் அப்பாவின் உயிர் பிரிந்த உடம்பு மட்டும் இங்கிருக்கிறது. அந்த உடலுக்குள் இருந்த கடவுள் இங்கிருந்து சென்று விட்டார்.

முற்றிற்று.











No comments:

Post a Comment