December 6, 2017

ஏர் புடிச்சவன் பொழப்பு



நான் பெத்த மகளே
நாற்று வயலே
நாளாகி ஆளாகி
நிக்கிறவளே

மாரிப் போகத்தில்
விதைச்சவளே
மாரி அம்மனப் போல்
வந்தவளே

காணி உழவு செஞ்சு
களையெல்லாம் நான் புடுங்கி
கூனிக் குறுகியொரு
கடன் வாங்கி விதை வாங்கி

நல்ல நாள் பார்த்து வந்து
நான் தனியா விதை எறிஞ்சி
மெல்ல நான் விட்ட தண்ணி
மேட்டு மண்ணும் பாய வச்சி

எறிஞ்ச விதையெல்லாம்
முளையாக முளைக்கயில
எரிஞ்ச என் உசிரில்
அனல் கொஞ்சம் அணைஞ்சதடி

தெரிஞ்ச இடமெல்லாம்
தெய்வமா நீ தெரிய
சரிஞ்ச என் பொழப்பு
சரி பாதி நிமிர்ந்ததடி

---------------------------

மழை வேண்டி மாசமொண்ணா
நான் செஞ்ச பூசைக்கெல்லாம்
மகராசி நீ தான்டி
கடன் தீர்க்க வேணுமடி

படி தாண்டி என் பொண்ணு
பக்கத்தூர் வாக்கப்பட
படியாத ஏழைக்கு நீ
படியளக்க வேணுமடி

படுக்கையிலே படுத்திருக்கும்
பாவி மக என் மனுசி
பசி தீர்க்க அடகு வச்ச
தாலிக் கொடி மீட்கணும்டி

உடுக்கையிலே கோடாங்கி
அடிச்சழைச்ச சாமி வந்து
கொடுக்கயிலே தவற விட்ட
வரமெல்லாம் கொடுக்கணும்டி

காத்தடிக்கும் வேளையிலே
நெல்லு மணி ஆடயிலே
அதில் ஒண்ணும் சிதறாம
பார்த்துக்கடி பார்த்துக்கடி

ஒரு நெல்லு விழுந்தாலும்
உன் அப்பன் என் கடனு
ஒரு ஜென்மம் கழிஞ்சாலும்
அழியாது கேட்டுக்கடி

அப்பன் அறுக்கும் வரை
காத்திருடி ராசாத்தி
ஆனைகளை காளைகளை
விரட்டிருடி ராசாத்தி

நல்ல இடம் வாக்கப்பட
பொறுத்திருடி ராசாத்தி
நல்ல விலை கிடைக்குமுண்ணு
நம்புறேன்டி ராசாத்தி

----------------------------

பேய்க் காத்து வீசுதம்மா
பெரு மழையும் பெய்யுதம்மா
பெருக்கெடுத்து வந்த வெள்ளம்
வயலோட சேருதம்மா

மூணு மாசமாவே
நான் நட்டு வளத்தவள
மூணே நிமிசத்துல
மூழ்கடிச்சுப் போகுதம்மா

பொட்டப் புள்ள நாலு பெத்து
கடன்காறன் ஆனவன
கரை சேர்க்கப் பெத்ததுவும்
கடனாகிப் போனதம்மா

கெட்ட மழை வந்து
குடி கெடுத்துப் போனதம்மா
பட்டதெல்லாம் போதும்
அலறிக் கொட்டை இருக்குதம்மா

No comments:

Post a Comment