December 2, 2017

ஒரு போலீஸ்


இரு ஓரங்களும் மரங்கள் நிறைந்த அந்தக் கும்மிருட்டுச் சாலையில் எதிரே நின்று கையை அசைத்து வண்டியை நிறுத்தச் சொல்பவர் கான்ஸ்டபிள் மணி தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டு ஜீப்பை நிறுத்தினார் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்.

கான்ஸ்டபிள் மணி, “சார், இன்ஸ்பெக்டருக்கு நான் சொன்ன பங்களா பக்கத்துல தான் இருக்கு. ஜீப்பை இங்கேயே நிறுத்திட்டு நாங்க நடந்து போறது தான் சரி. இல்லேண்ணா அக்கியூஸ்ட் உசாராகிடுவானுங்க.”

“மணி, இன்ஃபார்மேஷன் கரெக்ட்டு தானே?”

“ஆமா சார். என் ரெண்டு கண்ணால பார்த்தேன் சார். அது அவனுங்க தான். போன மாசம் அவிசாவளையில நடந்த கொலைக் கேஸ்ல நாங்க தேடிக்கிட்டிருக்கிற அதே மூணு பேரு தான் சார்.”

“குட். இண்ணைக்கு அவனுங்கள மொத்தமாப் புடிச்சாகணும். இன்ஸ்பெக்டர் தான் என்னை ஸ்பார்ட்டுக்கு உடனே போகும்படி அனுப்பி வச்சாரு. அவரும் டீமும் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்திடுவாங்க. ஆனா, அதுவரைக்கும் நாங்க காத்துக்கிட்டிருக்க முடியாது. அவனுங்க தப்பிக்கிறதுக்குள்ள நாம அவனுங்களப் புடிச்சாகணும்.”

“ஆனா சார்! அவனுங்ககிட்ட துப்பாக்கி இருக்கு. ஒருத்தரை சுட்டுக் கொண்ணுட்டானுங்க”

“என்னய்யா சொல்றே! சுட்டுட்டானுங்களா? யாரை? எப்போ?”

“நீங்க வர்றதுக்கு முப்பது நிமிஷத்துக்கு முன்னாடி தான் சார். அவனுங்க ஒரு பொண்ண கடத்திக்கிட்டு வந்திருக்குறானுங்க. அதைப் பார்த்து தடுக்கப் போனவரைத்தான் சுட்டுட்டானுங்க”

“டெட் பாடி எங்கே?”

“அதையும் உள்ளே கொண்டு போயிட்டானுங்க சார்”

பேசிக் கொண்டே அந்தப் பழைய பங்களாவிற்கு அருகில் வந்து சேர்ந்தனர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸும், கான்ஸ்டபிள் மணியும். அது ஊரின் ஒதுக்குப்புறத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மிகவும் பழமையான பங்களா. பக்கத்தில் எந்த வீடுகளோ, ஆள் நடமாட்டமோ இல்லாமல் அந்த நள்ளிரவு வேளையில் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. பங்களாவிற்குள் எந்தவித வெளிச்சமோ, ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியோ இல்லாத போதும், அதன் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற ஸ்கார்பியோவை குறை நிலவின் மங்கலான வெளிச்சத்தில் அவர்கள் இருவராலும் மதில் சுவரின் மேலாகப் பார்க்க முடிந்தது.

“மணி, நாம இப்பவே ரொம்ப லேட் பண்ணிட்டோம். இனியும் லேட் பண்ண முடியாது. ஏதாவது ஏடாகூடமா நடக்கிறதுக்கு முன்னாடி நாம அந்தப் பொண்ணக் காப்பாத்தியாகணும். அது மட்டுமில்லாம அவனுங்கள உசிரோடவோ, பொணமாவோ புடிச்சாகணும்.”

“சார்! ஷூட்டிங் ஆர்டர் இல்லாம எப்படி?”

“ஷூட்டிங் ஆர்டர் எல்லாம் எடுத்தாச்சு. இப்போ அவனுங்களப் புடிச்சாகணும். இல்லேண்ணா முடிச்சாகணும்.”

“எஸ் சார்”

மிகவும் அமைதியாக இருவரும் மதில்மேல் ஏறி உள்ளே இறங்கினார்கள். அடர்த்தியாக வளர்ந்திருந்த புதர்களில் மறைந்திருந்தவாறே யாரும் தங்களை அவதானித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிசெய்து கொண்டு, இடைவெளியில்லாமல் வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே மறைந்தவாறே வேகமாகவும் அவதானமாகவும் பங்களாவை நோக்கி முன்னேறினார்கள். சில அடிகள் நகர்ந்ததும்

“சார்! அங்க பாருங்க.” காதுக்கருகில் ரகசியம் பேசுபவர் போல் மணி சொன்னார்.

மணியின் ஆட்காட்டி விரல் காட்டிக் கொண்டிருந்த இடத்தில் சீமெந்துத் தரையில் இரத்தக் கறைகள் நெடுங்கிலும் காணப்பட்டது.

“ஷூட் பண்ண டெட் பாடிய அந்தப் பக்கமாத்தான் இழுத்துப் போயிருக்கிறானுங்க.”

“ஆமா சார். போய் பார்க்கலாமா?”

“மணி, டெட் பாடியக் கண்டுபுடிக்கிறதனால நமக்கு எதுவும் ஆகப்போறதில்ல. முதல்ல அந்தப் பொண்ணக் காப்பாத்தியாகணும். டோன்ட் வேஸ்ட் தி டைம். கம் வித் மி.”

ஒருவாறாக சத்தம் எதுவும் இல்லாமல் பங்களாவின் கொல்லைப் புறத்திற்கு வந்து கதவைத் திறக்க முடிகிறதா என்று பார்த்தார் ராஜேஸ். ஆனால், அது பயனளிக்கவில்லை.

“சார், அங்க இருக்கு வழி.”

மணி காட்டிய திசையில் ஜன்னல் ஒன்று உடைந்திருந்தது. அதன் வழியாக முதலில் ராஜேஸும், பின்னர் மணியும் உள்ளே நுழைந்தனர். அவர்கள் நுழைந்தது பழைய தளபாடங்கள் அடுக்கப்பட்டிருந்த ஓர் அறையாக இருக்க வேண்டும். மிகவும் அவதானமாகவும், எதன் மேலும் மோதி விடாமலும் அவர்கள் நகரவேண்டியிருந்தது.

மிகவும் அமைதியாகவும், பயங்கரமான இருள் சூழ்ந்துமிருந்த அந்தப் பங்களாவின் நடுப் பகுதிக்கு வந்த பின்னர் தான் ஆட்கள் நடமாடும் சத்தத்தை ராஜேஸால் கேட்க முடிந்தது. அந்தச் சிறிய சத்தம் மாடியில் இருந்து தான் வருகிறதென்பதை முதலில் ராஜேஸ் உறுதிப்படுத்திக் கொண்டார். ஆனால், பங்களாவிற்குள் மிக மிக மங்கலான வெளிச்சமே இருந்தது. அது கண்ணாடி ஜன்னல்கள் ஊடாக பிறை நிலவிலிருந்து வந்து கொண்டிருந்த வெளிச்சமாக இருக்கக்கூடும். கிட்டத்தட்ட கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது ராஜேஸுக்கு.

கிசு கிசுக்கும் குரலில் மணி, “சார், அந்தப் பொண்ணோட சத்தத்தையே காணல்லயே. ஒரு வேளை அந்தப் பொண்ண ஏதாவது பண்ணி இருப்பானுங்களோ?”

“நானும் அதைத் தான் யோசிக்கிறேன் மணி. அப்படி இல்லேண்ணா, அவ மயக்கமா இருக்கவோ இல்ல அவ வாயை துணியால கட்டியிருக்கவோ வாய்ப்பிருக்கு.” என்று பதிலுக்குக் கிசு கிசுத்தார் ராஜேஸ்.

“ஆமா சார். அதுவும் கரெக்ட்டு தான். உடனே ஏதாவது ஆக்ஷன் எடுத்தாகணும்.”

ஒருவாறாகத் தடுமாறித் தடுமாறி மாடிப் படியைக் கண்டுபிடித்து இருவரும் மேல் தளத்தை அடைந்தார்கள். அங்கே கதவு திறந்திருந்த ஒரு விசாலமான அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. சத்தமில்லாமல் முன்னேறி இருவரும் அந்த அறையின் வெளிச் சுவரில் சாய்ந்து கொண்டு தங்களை மறைத்துக்கொண்டதும், ராஜேஸ் மிக அவதானமாக அறைக்குள் தன் கூரிய கண்களை ஓட விட்டார். அங்கே ஒரு சிறிய மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு பெண் கதிரையில் உட்கார வைத்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தாள். அவள் மயக்கத்திலிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள ராஜேஸுக்கு அதிக நேரம் ஆகவில்லை. அவளுக்குப் பக்கத்தில் ஒருவன் நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது  ஒரு கையில் பீர் போத்தலும், மறு கையில் ஒரு ரிவால்வரும் இருந்தது. மற்ற இருவரும் சற்றுத் தள்ளி தரையில் உட்கார்ந்து கொண்டு ஆளுக்கொரு பீர் போத்தலுடன் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவனிடம் தான் துப்பாக்கி இருக்கிறது என்பதை ராஜேஸ் முதலில் தன் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டார். பட்டென்று அவர் ஐந்து நொடிகள் மட்டும் கண்களை மூடித் திறந்தார். அதற்குள் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு முடித்துவிட்டார். இனிப் பேசவோ யோசிக்கவோ அவருக்கு எதுவும் இருக்கவில்லை. அடுத்த நொடி, ஏற்கனவே லோட் செய்து வைக்கப்பட்டிருந்த அவரின் ரிவால்வரிலிருந்து முதல் குண்டு துப்பாக்கி வைத்திருப்பவனை நோக்கிப் பாய்ந்தது. அடுத்தடுத்து மற்ற இருவரையும் குண்டுகள் பதம் பார்த்தது. அந்தத் திடீர் தாக்குதலுக்கு இரண்டு நிமிடத்திற்கு மேல் அவருக்குத் தேவைப்படவில்லை. மூன்றாவது நிமிடம் அவர்களின் கதை மொத்தமும் முடிந்து விட்டது. ஆபத்து எதுவுமில்லை என்பதை தன் கண்களினாலேயே உறுதிப்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணை நோக்கி விரைவாக முன்னேறும் போது ராஜேஸின் செல்போன் வைபரேட் பண்ணியது. அதை எடுத்துப் பச்சைப் பொத்தானை அழுத்தி விட்டுக் காதில் வைத்தார்.

“ராஜேஸ், நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். ஏரியா பூராவும் இப்போ நம்ம கன்ரோல்ல இருக்கு. பங்களாவச் சுத்தி போலீஸ் நிக்குது. நீங்க எங்க இருக்குறீங்க?”

“சார், நான் பங்களாவுக்குள்ள தான் இருக்கிறேன். நிலமை இப்போ என் கன்ரோல்ல வந்திருச்சி. அவனுங்க யாரும் உயிரோட இல்ல சார். என் கௌண்டர் பண்ணியாச்சி. ஒரு பொண்ண கடத்திக்கிட்டு வந்திருக்கிறானுங்க. அது மட்டுமில்லாம, ஒரு மர்டர் பண்ணி இருக்குறானுங்க சார்.”

“வெல் டன் மிஸ்டர் ராஜேஸ். தனி ஒரு ஆளா சாதிச்சிட்டீங்க. ஆனா, நீங்க தனியா உள்ள போனது ரொம்பத் தப்பு. அவனுங்க ரொம்ப மோசமானவனுங்க.”

“சார், நான் தனியா எதுவும் பண்ணல்ல. கான்ஸ்டபிள் மணியும் கூட இருக்கிறாரு. அவரு கூட இல்லேண்ணா இதெல்லாம் பண்ணியிருக்க முடியாது.”

“யோவ்! என்னய்யா உழர்றே? மணி உன் கூட இருக்குறாரா? அவனுங்க சுட்டுக் கொண்ணது மணியத்தான்யா. மணியோட டெட் பாடி இங்க வெளிய தான் இருக்கு. பார்க்கல்லையா நீ?”

முற்றிற்று


No comments:

Post a Comment