December 8, 2017

பொது மைய ஈர்ப்பு


தமிழை நமது தாய் மொழியாகப் பெற நாங்கள் பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இருக்காதா பின்னே? அது உலகத்துலேயே மூத்த மொழியாச்சே. பல்லாயிரம் ஆண்டு பழைய மொழி, பாரதி கண்ட பாட்டு மொழி, வள்ளுவன் தந்த வள்ளல் மொழி, கம்பன் கரும்புச் சுவையூட்டிய மொழி, முது மொழி, பெரு மொழி, செம்மொழி இப்படி எப்படியெல்லாமோ தமிழைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனா, நாங்க இப்போ பேசப்போறது அதைப் பற்றியெல்லாம் இல்லைங்க. எத்தனை காலத்துக்குத்தான் இப்படி அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருக்க முடியும்? கொஞ்சம் புதுசாத்தான் யோசிப்போமே.

ஆமா, நான் சொல்லப்போறது கொஞ்சம் புதுசு தான். புதுசுன்னு நான் சொல்லுறது, நான் சொல்லவாற விசயத்தை இல்லைங்க. சமீப காலமா ஆரவாரம் இல்லாம அமைதியா அது நடந்துக்கிட்டுதான் இருக்கு. அப்படியான ஒரு விசயத்தைக் கொஞ்சம் வெளிப்படையா புதுசா ஒரு கோணத்துல இருந்து பார்த்துப் பேசலாமேன்னு நான் நினைக்கிறேன். இந்த முயற்சியைத்தான் புதுசுன்னு சொல்லுறேன். “அப்படி என்னடா சொல்லிடப் போறான் தமிழைப் பற்றிப் புதுசா, நேற்றுப் பேஞ்ச மழைக்கு முழைச்ச காளான் பய இவன்” அப்படீன்னு நீங்க நினைக்கிறது எனக்குப் புரியுது. நீங்க நினைக்கிறது சரிதான். நேற்று முழைச்ச பயலா இருக்கிறதனாலதான், இந்த விசயத்தைப் புரிஞ்சிக்க முடியுதோ என்னமோ. சரி. இனியும் விசயத்தைச் சொல்லாம சுத்தி வளைச்சுக்கிட்டிருந்தா, சரிதான் போடா நீயும் உன் கருத்தும் அப்படீன்னு விட்டுட்டுப் போயிடுவீங்கன்னு தெரியுது. அதனால நேராவே விசயத்துக்கு வாறேன்.

இத்தால் பொது மக்களுக்கு நான் சொல்லவாறது என்னன்னா, பேச்சுத் தமிழ் பொது மைய ஈர்ப்பு அப்படீங்கிற ஒரு விசயத்தைத்தான். பயப்படாதீங்க, என்னடா இது கேள்விப்படாத பெயரா இருக்குதேன்னு. இது நான் வச்ச பெயரு. அப்பறோம் எப்படி நீங்க கேள்விப்பட்டிருக்க முடியும். கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம்தான். மன்னிச்சிருங்க. பேச்சுத் தமிழ் பொது மைய ஈர்ப்பு அப்படீங்கிற பெயரால நான் எதைச் சொல்ல வாறேன்னா, ஒவ்வொரு இடத்துக்கும் பிரதேசத்துக்கும் வேறுபட்டு இருக்கிற நம்ம பேச்சுவழக்குத் தமிழ் மெல்ல மெல்ல ஒரு பொதுப் பாணிக்கு வந்துகொண்டிருக்கு அப்படீங்கிற மறுக்க முடியாத உண்மையைத்தான். அதாவது ஒவ்வொரு மாநிலத்துக்கும், மாவட்டத்துக்கும் மட்டுமில்ல ஒவ்வொரு ஊருக்கும் தனிப்பட்ட வட்டார வழக்குப் பேச்சுப் பாணி இருக்குது. இதை மண் வாசனைச் சொற்கள் அப்படீன்னு கூட சொல்லிக்க முடியும். ஒவ்வொரு ஊருக்கு ஊர் மாறுபட்டுக் கிடக்கிற இந்தப் பேச்சுவழக்குத் தமிழ் சமீப காலமா அவற்றோடைய தனித் தன்மைகளை இழந்து கொஞ்சம் கொஞ்சமா ஒரு பொதுவான பேச்சு மொழிவழக்காக உருவாகிக்கொண்டிருக்கு.

இதைத்தான் பேச்சுத் தமிழ் பொது மைய ஈர்ப்பு அப்படீங்கிற பெயரால நான் குறிப்பிட விரும்புறேன். அதாவது இடத்துக்கு இடம், ஆட்களுக்கு ஆட்கள் மாறுபட்டுக் கிடக்கிற பல வேறு வகையான பேச்சுத் தமிழ், ஒரு பொது மையத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்குது. ஒரு மையத்தை அடைகிற அந்த பல வேறுபட்ட பேச்சுத் தமிழ் ஒரு பொதுவான இயல்பை ஏற்றுக் கொள்கிறது. சுத்தி வளைக்காம சுருக்கமாச் சொல்லணும்னா, தமிழினுடைய எழுத்திலக்கணம் எந்த இடத்திலேயும் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் ஓரே மாதிரி இருக்கிறது மாதிரியே, பேச்சு வழக்கும் மெல்ல மெல்ல ஒரே பாணிக்கு வந்துகொண்டிருக்கு.

ஒவ்வொரு ஊரிலேயும் வழக்கில் இருக்கிற பேச்சுத் தமிழ், வட்டார வழக்குச் சொற்கள் என்பவற்றினுடைய பயன்பாட்டுக்கும் வீரியத்திற்கும் ஏற்றாற் போல இந்த பொது மைய ஈர்ப்பினுடைய வேகம் மாறுபட்டாலும், நிச்சயமா எல்லா இடங்களிலேயும் இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கு. நான் சொல்லுறதை ஏற்றுக்கொள்ளாம யாராவது வந்து எங்கிட்ட கம்பு சுத்துனீங்கன்னா, உங்க அறியாமையை எண்ணி நான் பரிதாபப்பட மட்டும் தான் முடியும். அப்படி இல்லைங்கிறதுக்கு உங்களால ஏதாவது ஒரு ஊரையோ அல்லது ஒரு மக்கள் வகுப்பினரையோ உதாரணமாகக் காட்ட முடியும்னு நினைச்சீங்கன்னா, அந்த ஊர் அல்லது மக்கள் போதியளவு வெளியுலக இணைப்பு இல்லாதவங்களாகத் தான் இருக்க முடியும். குறிப்பாச் சொல்லணும்னா, தமிழ் சினிமாப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவங்களாகத்தான் இருக்க முடியும். ஆமாங்க. இந்தப் பேச்சுத் தமிழ் பொது மைய ஈர்ப்பு அப்படீங்கிற அமைதிப் புரட்சிக்கு பெரிய பங்களிப்பை தமிழ் சினிமாதாங்க வழங்கிக்கிட்டிருக்கு. இந்தத் தமிழ் சினிமாவினுடைய தாக்கம் தான் நேரடியாவே இதை நிகழ்த்திக்கிட்டிருக்கு.

தமிழ் சினிமா பழசுதான். நூற்றாண்டு விழாக்கண்ட தமிழ் சினிமா தான். ஆனா, ஈழத்தவர்கள் எங்களுக்கு அதனுடைய அதி உச்ச தாக்கம் சமீப காலமாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கு. ஆயுத யுத்தம் மௌனிச்சுப் போனதனால எங்களுக்கு வேறு பேசு பொருள் இல்லாமப் போச்சு. அந்த இடத்தை முழுசா இல்லேன்னாலும் பாதியளவு தமிழ் சினிமா தான் புடிச்சிருக்கு. ஒட்டுமொத்தமா இல்லேன்னாலும் கூட குறைந்த பட்சம் பல தென்னிந்தியத் தமிழ் சொற்கள் இந்தத் தமிழ் சினிமா மூலமா எங்களுடைய பேச்சு வழக்கில் சர்வ சாதாரணமாவே புழங்க ஆரம்பிச்சிருச்சு. இதை இன்னும் விளக்கமாச் சொல்லணும்னா, தென்னிந்தியத் தமிழ் மொழி உள்வாங்கல்னு சொல்லலாம். இதை தவிர்க்க முடியல்ல அப்படீங்கிறது எவ்வளவு உண்மையோ, அவ்வளவுக்கு அவ்வளவு உண்மை இதை முழுசா ஏற்றுக்கொள்ளுறதுல இருக்கிற சில சிக்கல் தான். இதை வெளிப்படையா ஏற்றுக்கொள்ள ஆரம்பிச்சிட்டா நம்மளோடைய அழகான பல நூறு வட்டார வழக்கு மண் வாசனைச் சொற்கள் மண்ணோடு மண்ணாக் காணாமப் போயிடும்.

ஆனாலும், இதைத் தடுக்கிறது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விசயம். ஏன்னா, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முதல்ல நம்ம முன்னோர்கள் தமிழை எப்படி உபயோகிச்சாங்களோ, எப்படி பேசிக்கிட்டாங்களோ அப்படியே தான் நாங்க இப்பவும் பயன்படுத்துகிறோமான்னு கேட்டா, ஒத்த வார்த்தையில சொல்லிட முடியும் அப்படி இல்லைன்னு. தமிழ் காலத்துக்குக் காலம் மாற்றத்தை உள் வாங்கிக்கொண்டுதான் வந்திருக்கு. அப்படி மாற்றத்தை உள்வாங்கி தன் நிலையை மாற்றியமைச்சுக்கிற சக்தி தமிழுக்கு இருக்கிறதனாலதான் இப்பவும் இந்த மூத்த மொழியினால உலகத்துல நிலைச்சிருக்க முடியுது. ஆகையினால சில மாற்றங்களை விரும்பியோ விரும்பாமலோ நாங்க ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கு. ஆனாலும், இதுல கவலைக்குரிய விசயம் என்னன்னா, தென்னிந்தியத் தமிழுல அதிகமா வேற்று மொழிக் கலப்பு இருக்கிறது தான். ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டுமில்லாம திராவிட மொழிக் குடும்பத்துல இருக்கிற வேறு சில மொழிகளும் தென்னிந்தியத் தமிழுக்குள்ள தாராளமாவே புழங்குது. அந்த வேற்று மொழிக் கலப்பைக் கொண்ட தமிழ் நம்ம ஈழத் தமிழோட கலக்கிறதை ஆரோக்கியமான மாற்றம்னு சொல்லிட முடியாது.

இந்த மாற்றம் இன்றைய இளம் தலைமுறையினரிடம் அதிகமாக் காணப்படுது. அவங்க தான் அதை விரைவாக உள்வாங்கிக்கிறாங்க. அதை ஒரு மொழிக் கவர்ச்சியாக எண்ணத் தோணுறதுதான் அதுக்குக் காரணம். ஆனாலும் இளைய தலைமுறையினரைக் காட்டிலும், சினிமாவுல ஒன்றிக் கிடக்கிற இன்றைய குழந்தைகள் மிக மிக வேகமா உள்வாங்கிக்கிறாங்க. இன்றைய குழந்தைகளாக இருக்கிற நாளைய இளம் தலைமுறையினரிடம் எதிர்காலத்துல இந்த மாற்றத்தை நாங்க சாதாரணமாவே பார்க்கப்போறோம் அப்படீங்கிறதுதான் உண்மை.

இந்த மாற்றத்தை ஈழத்திலே அதிகமாகப் பார்க்கக் கூடியது எங்கேன்னா, எம்மவர்களினுடைய இன்றைய கலைப் படைப்புக்களிலேதான். நம்மவர்களினுடைய இன்றைய பாடல்கள், குறுந்திரைப்படங்கள் என்பவற்றிலே இதை அதிகமா உணர முடியுது. காரணம், தென்னிந்தியக் கலைப்படைப்புல அதிகம் மூழ்கிப் போயிருக்கிற நம்ம சமூகம், அந்த சாயலைத்தான் எம்மவர்களுடைய படைப்புக்களிலேயும் எதிர்பார்க்கிறாங்க. அதுமட்டுமல்லாம, ஈழத்திலேயே பிரதேசத்துக்குப் பிரதேசம் பேச்சு வழக்கு மாறுபட்டுக் காணப்படுறதனால ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குரிய பேச்சு வழக்கை கலைப் படைப்புக்களில் பயன்படுத்தினால், மற்ற பிரதேச பேச்சு வழக்கை உடைய மக்களை அந்த படைப்பினால் கவர முடியாமலே போயிடுது. ஆகையினாலதான் இன்றைய இளம் ஈழக் கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புக்களில் மண் வாசனை பேச்சு வழக்குச் சாயலை அதிகம் பயன்படுத்த முடியாம இருக்கிறதும், எல்லோராலேயும் புரிஞ்சிக்கக் கூடிய இந்தத் தென்னிந்தியத் தமிழை கையாளுறதும்.

இத்தனை நேரமா என் கட்டுரையைப் படிச்சுக்கிட்டிருக்கிற உங்களுக்கு ஒரு விசயம் புரிஞ்சிருக்கும். அதாவது, பேச்சுவழக்குத் தமிழுல இருக்கிற இந்தக் கட்டுரை தென்னிந்தியப் பேச்சுவழக்குச் சாயலிலே தான் இருக்கு. மண் வாடை மொழி வழக்கை விட்டு இப்படி மாற்று வழக்குக்கு குடை புடிக்கிறது சரியா தப்பான்னு விவாதப் பொருள் இருந்தாலும், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லாம நான் இந்த சாயலைத்தான் என் எழுத்துக்களிலே பிரதிபலிக்க விரும்புகிறேன். காரணம், என்னுடைய எந்த எழுத்தும் குறித்த ஒரு சமூகத்தினால் மட்டும்தான் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், அந்த சமூகத்துக்கு மட்டுமே அபிமானமானதாகவும் இருந்துவிடக் கூடாதுன்னு நான் நினைக்கிறதுதான். ஆகையினாலே, பொதுவாவே எல்லோருக்கும் தெரிஞ்ச, இந்தப் பாணியையே என் பேச்சு வழக்கு படைப்புக்களினுடைய இயல்பாக உள்வாங்கிக்கொள்ள விரும்புகிறேன். மட்டுமல்லாமல், தென்னிந்திய இலக்கியப் படைப்புக்களும், திரைப்படங்களும்தான் என் எழுத்துக்களுக்கான ஆரம்பகால ஊன்றுகோல் அப்படீங்கிறதனால என்னால அதனுடைய தாக்கத்தில் இருந்து முழுசாவே விலகிட முடியாது.

ஆகவே, என் எழுத்துக்களையும் படித்து அதற்கான அங்கீகாரத்தை வழங்கிக்கொண்டிருக்கும் வாசகப் பெருமக்களுக்கு நான் இத்தால் தெரிவிக்க விரும்புறது என்னன்னா, “உங்க கவிதைகள், எழுத்துக்கள் எல்லாம் நம்ம ஊருக்கே உரிய மண்வாசனையோடு இல்லாம ஏன் தென்னிந்தியத் தமிழினுடைய தாக்கத்தை உடையதாக இருக்கு?” அப்படீன்னு இனியும் கேக்காதீங்கேன்னுதான்.






  

No comments:

Post a Comment