December 24, 2017

நடுநிசிப் பயணம்


இந்தக் கட்டுரை எந்தவொரு கற்பனையோ கட்டுக்கதையோ கலப்பில்லாத முற்று முழுதாய் நிகழ்ந்த ஓர் மறக்க முடியாப் பயணத்தின் பிரதிபலிப்பு. கால ஓட்டத்தில் ஏதேனுமொரு சம்பவங்கள் மறந்து இங்கு எழுதப்படாது விடுபட்டிருக்கலாமே தவிர, நடக்காத எந்தவொன்றும் இங்கு மிகைப்படுத்தி எழுதப்படவில்லை.

தேதி - 15.05.2016

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் ஆறு பேரும் அந்தப் பயணத்திற்காக எங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தோம். இலேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அந்த அழகிய தூறல்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் அடைமழையாக மாறி எங்களுக்கு உயிர் பயம் காட்டப் போகின்றது என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஓர் இனிமையான பயணத்தைத் தொடங்குவதற்கான ஆர்வம் எங்கள் ஆறு பேருக்குள்ளும் பொங்கிக் கொண்டிருந்தது. ஆயினும், அது ஓர் சாகசப் பயணமாக மாறி எங்களை மரண வாசல்வரை கூட்டிச் செல்லப்போவதை அந்த நொடி நாங்கள் யாரும் ஊகித்திருக்கவில்லை. நாங்கள் நல்லதண்ணி என்னும் இடத்தில் பயணத்தைத் தொடங்குவதற்காக நின்று கொண்டிருந்தோம்.

அது சிவனொளிபாத மலைக்கான பயணம். சிவனொளிபாத மலை இலங்கைத் தீவின் சப்ரகமுவ, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கூம்பு வடிவிலான அழகிய மலையாகும். அதன் உச்சியில் உள்ள 1.8 மீட்டர் அளவான பாதச்சுவடு போன்ற அமைப்பு இந்துக்களினால் சிவனின் பாதச் சுவடாகவும், பௌத்தர்களால் கௌதம புத்தரின் பாதச் சுவடாகவும் பூஜிக்கப்படுகிறது.

நண்பர்கள் எங்கள் ஆறு பேருக்குமே அதுதான் சிவனொளிபாத மலைக்கான முதல் பயணம். அதற்கு முன்னர் நாங்கள் யாரும் அங்கு சென்றிருக்கவில்லை. ஆகையினால், அனைவருமே அதிகம் எதிர்பார்ப்பிலிருந்தோம். சாதாரணமாக அந்த மலையை ஏறி முடிப்பதற்கு மூன்று தொடக்கம் மூன்றரை மணித்தியாலங்கள் வரை ஆகலாம். நிதானமாக ஏறுபவர்களுக்கு ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலும் ஆகக் கூடும். சிவனொளிபாத மலையின் சிறப்பு அதன் உச்சியில் இருக்கும் அந்தப் பாதச் சுவடு மட்டுமல்ல. அந்த மலை உச்சியிலிருந்து அதிகாலை வேளையில் சூரிய உதயத்தைப் பார்க்கின்ற பாக்கியமும்தான். அது பார்ப்பதற்கு ரம்மியமான காட்சியாக இருக்கும். அவ்வாறு அங்கிருந்து சூரியோதயத்தைப் பார்க்க வேண்டுமாயின் நள்ளிரவில்தான் மலை ஏறத் தொடங்க வேண்டும். அப்போதுதான் அதிகாலை வேளையில் மலை உச்சியை அடைவதற்கும் சூரியோதயத்தைப் பார்ப்பதற்கும் சரியாக இருக்கும். அன்று எங்களது திட்டமும் அதுவாகத்தான் இருந்தது.

அந்த மலையடிவாரத்திலுள்ள கிராமமான நல்லதண்ணி என்னுமிடத்தில் உள்ள ஒரு கடையில் எங்களது இரவு உணவை உண்டுவிட்டு, மலையடிவாரத்தை அடைவதற்கான பாதையிலிருந்த கடையில் மழையிலிருந்து தப்பிக்கொள்ள பொலீத்தினாலான ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டோம். அந்த மழைத் தூறல்கள் எங்களுக்கு சூரியோதயத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பறித்து விடுமோ என்ற கவலை அப்போது எங்களிடம் இருந்தது.

நள்ளிரவு பன்னிரெண்டு மணியாகியதும் நாங்கள் எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். முதலில் அந்த மலையடிவாரத்தை அடைவதற்கான பாதையிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று இறைவனை மனதார வணங்கிக் கொண்டோம். நாங்கள் ஆறு பேரும் அமைதியாக கடவுளை வணங்கினாலும், எங்கள் அனைவரினுடைய பிரார்த்தனையும் ஒன்றாகவேதான் இருந்தது. “கடவுளே எப்படியாவது இந்த மழையை நிறுத்திடு. நாங்க சூரியோதயம் பார்த்தே ஆகணும்”

அங்கிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். மலையடிவாரத்திலிருந்து அதன் உச்சியை அடையும் வரை ஆங்காங்கே தேனீர்க் கடைகள் இருக்கும் என்பது எங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. ஏனென்றால், அந்தக் குளிரில் உடம்பை உஷ்ணப்படுத்திக்கொள்ள தேனீரையும், மலைப் பாதைக் கடைகளில் கிடைக்கும் மலைச் சுருட்டுக்களையும் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆனால், எங்கள் ஆறு பேரில் இருவரைத் தவிர நாங்கள் நான்கு பேரும் புகைப்பிடிக்காதவர்கள் என்பதனால், எங்கள் நால்வருக்கும் அந்தத் தேனீரை விட்டால் வேறு கதி இருக்கவில்லை. நாங்கள் மெல்ல மெல்ல மலையேறத் தொடங்கினோம். எங்களுடன் சேர்ந்து மெல்ல மெல்ல மழையும் அதிகரிக்கத் தொடங்கியது.  

எங்கும் இருட்டு மட்டுமே நிறைந்திருந்தது. பெய்து கொண்டிருந்த மழையால் அந்த மலையேறும் பாதையில் இருந்த கம்பங்களில் இருந்த மின் விளக்குகள் கோளாறாகியிருக்க வேண்டும். அவை இருந்தனவே தவிர ஒன்றிரெண்டைத் தவிர வேறு எதுவும் எரிவதற்கான முயற்சியில் கூட இருப்பதாகத் தெரியவில்லை. பயணத்தைத் தொடங்கும் போது மனதிலிருந்த அந்த எதிர்பார்ப்பு, மலை ஏற ஏற கொட்டோ கொட்டென்று கொட்டத்தொடங்கிய அடை மழையாலும், மலைப் படிகள் கூடத் தெளிவாகத் தெரியாத கும்மிருட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பயமாக உருமாறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எங்களுக்குப் பாதை முற்றாகத் தெரியாத அளவுக்கு இருள் கண்ணை மறைத்துவிட்டது. படிகளின் இரு ஓரங்களிலும் பெரும் பள்ளத்தாக்குகள். இருட்டில் கால் தவறி அங்கு வைத்துவிட்டால், பல நூறு மீற்றர்கள் பள்ளத்தாக்கை சில நிமிடங்களில் அடைந்துவிட முடியும். ஆகையால், எங்கள் கைத்தொலைபேசியை எடுத்து அதன் டார்ச்சு லைட்டை ஒளிர வைத்துக் கொண்டு முன்னேறத் தொடங்கினோம். பாதையின் ஓரப் பள்ளத்தாக்குகளில் நீர் அருவிகள் வழிந்தோடுகின்ற சத்தத்தை எங்களால் தெளிவாகக் கேட்க முடிந்தது. அது எந்தப்பக்கம் இருந்து வருகிற சத்தம் என்பது கூட எங்களால் அந்த இருட்டில் ஊகிக்க முடியவில்லை. அது பயங்கரமான இரைச்சலாக மிரட்டிக்கொண்டிருந்தது.

பயத்தை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளாமல் நாங்கள் ஏறிக்கொண்டேயிருந்தோம். ஒரு கட்டத்தை அடையும் போது இலேசாக வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று மெல்ல மெல்ல வலுவடையத் தொடங்கிவிட்டது. அடைமழை, கண்ணை மறைக்கும் இருட்டு, இவற்றுக்கு அடுத்ததாய் கடும் காற்றும் சேர்ந்து விட்டது, எங்களுக்குப் பீதியை ஏற்படுத்துவதற்கு. இத்தனைக்குள்ளும் இன்னும் ஒரு விடயம் எங்களை தயக்கமடையச் செய்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்த மலையிலிருந்து பல யாத்திரிகள் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் எங்களைப் போல் மேலே ஏறிக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அந்த ஒரு விடயம் மட்டுமே எங்களைப் பயமுறுத்தப் போதுமானதாகவிருந்தது. ஆனாலும், நாங்கள் எங்கள் முயற்சியைக் கைவிட எந்த நிமிடத்திலும் யோசிக்கவில்லை. தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருந்தோம்.

சிறிது தூரம் சென்ற பின்னர், மேலேயிருந்து வருபவர் ஒருவர் எங்களைப் பார்த்து சிங்களத்தில் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தார். எங்கள் அருகில் வந்ததும் நாங்கள் தமிழ்தான் என்பதை எங்கள் நெற்றியில் பாதி அழிந்தும் மீதி அழியாமலும் மீதமிருந்த மலையடிவாரப் பிள்ளையார் கோவிலின் குங்குமத்தின் மூலம் அறிந்து கொண்டு “தம்பி! மேல போவாதீங்க. கரண்டு கம்பம் பாதையில விழுந்து கெடக்கு. மேல நீங்க போவ முடியாது” என்று சொல்லி விட்டு சிறிதும் நிற்காமல் தொடர்ந்து கீழே இறங்கிச் சென்று கொண்டேயிருந்தார். எங்களுக்கு எங்கள் எதிர்பார்ப்பு ஆசை அத்தனையையும் தீயில் போட்டு எரித்தது போலிருந்தது. இப்படிப் பாதி மலை கூட ஏறாமல் திரும்பிப் போகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்றிருந்தது.

என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டு சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தோம். ஏனென்றால், எங்கள் முயற்சியைப் பாதியிலேயே தூக்கியெறிந்துவிட்டுத் திரும்பிப் போக நாங்கள் தயாராக இல்லை. அதற்காக தெரிந்தே ஆபத்தில் மாட்டிக் கொள்ளவும் நாங்கள் முட்டாளாய் இருக்கவில்லை. சில நிமிடங்களிலேயே மேலேயிருந்து ஒரு சிங்களக் குடும்பம் இறங்கி வந்துகொண்டிருப்பதை எங்களால் பார்க்க முடிந்தது. ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறு பெண்பிள்ளை அடங்கலாக அவர்கள் ஐந்து பேர் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் அருகில் வந்ததும் அவர்களிடம் நான், “யன்ன புளுவான் த?” என்றேன். “ஒவ் ஒவ் புளுவான்” என்று பதில் வந்தது. அதற்கு மேல் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. தொடர்ந்து ஏறத் தொடங்கினோம்.

நாங்கள் அந்த இடத்தைச் சில நிமிடங்களில் அடைந்தோம். அங்கு பாதைக்குக் குறுக்காக ஒரு மின் கம்பம் சாய்ந்து கொண்டு முழுதாக விழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அது அந்த ஒடுங்கலான பாதைக்குக் குறுக்காகச் சரிந்து பாதையை முழுதாக மறித்திருந்தது. அங்கிருந்து வருபவர்களெல்லாம் மிக அவதானமாக தலையைக் குனிந்து கொண்டு அதற்குக் கீழாக வந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. நாங்களும் அந்த ஆபத்தான கம்பத்தை மிகவும் அவதானத்தோடு தலையைக் குனிந்து கொண்டு அதன் கீழாக மிக விரைவாகக் கடந்து முன்னேறத் தொடங்கினோம். ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பிவிட்டது போன்ற மன நிலை எங்களை இன்னும் சுறுசுறுப்பாய் ஏற வைத்தது. ஆனால், அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை, இனித்தான் நாங்கள் பல மோசமான ஆபத்துக்களைச் சந்திக்கப்போகிறோம் என்பதை.

தொடர்ச்சியான படிகளும் எப்போதாவது சமாந்தரமான நிலமுமாக எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதற்கு முன்னர் எங்களில் யாருமே அங்கு வந்திருக்கவில்லை என்பதால், இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டியிருக்கிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.  ஏறிக்கொண்டிருக்கும் போது தொலைவில் உயரத்தில் எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குதான் மலையின் உச்சி என நம்பிக்கொண்டு வராத தெம்பையெல்லாம் வரவழைத்துக் கொண்டு ஏறிக்கொண்டிருப்போம், சிறிது நேரத்தில் அந்த மின் விளக்கை அடையும் போது தலையை அண்ணார்ந்து பார்த்தால் இன்னுமொரு மின் விளக்கு இதுதான் உச்சி என்பது போல் தூரத்தில் எரிந்துகொண்டிருக்கும். இப்படி இன்னும் எவ்வளவு தூரம் ஏறியாகவேண்டுமென்று சிறிதும் தெரியாமல் ஏறிக்கொண்டேயிருந்தோம். கடுங்காற்று மழைத்துளிகளை எங்கள் முகங்களில் மோதியடித்துச் சுள் சுள் என்று வலி தந்துகொண்டிருந்தது. ஆனால், சிறிது நின்று இளைப்பாறுவதும் பின்பு ஏறுவதுமாக நாங்கள் முன்னேறிக் கொண்டேயிருந்தோம்.

சிறிது தூரம் நாங்கள் சென்றதும் அங்கு கண்ட ஒரு காட்சி பயத்தைப் பலமடங்காக ஆக்கிவிட்டது. அங்கு மலைப்பாதையின் ஓரத்திலிருந்த ஓர் தேனீர்க் கடையொன்றின் மேல் மலை மேட்டின் மண் சரிந்து அந்தக் கடை மொத்தத்தையும் மண்ணால் புதைத்து விட்டிருந்தது. தகரங்களாலான அந்தத் தற்காலிகக் கடை இருந்த இடம் தெரியாமல் சேற்று மண்ணால் மூடப்பட்டுக் கிடந்தது. அந்த விபத்திலிருந்து அதிஷ்டவசமாகத் தப்பிய கடை உரிமையாளர் அந்தக் கடையைப் பார்த்துக் கண்கலங்கித் தலையில் கை வைத்து நின்றதை அந்த அடை மழையிலும் எங்ளாலும் அங்கு நின்றவர்களாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த விபத்து நாங்கள் அந்த இடத்தை அடைவதற்கு அதிகபட்சமாக பத்து நிமிடங்களுக்குள்தான் நிகழ்ந்திருக்க முடியும். மின் கம்பம் சரிந்து கிடந்த இடத்தில் நாங்கள் கொஞ்சம் தாமதிக்காமல் வந்திருந்தால், அந்த விபத்தில் நாங்களும் சிக்கியிருப்போம் என்பது அந்த நொடியில் எங்களது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த அவலத்தைப் பார்த்துக் கொண்டே சிறிய தயக்கத்தோடு முன்னேறிக் கொண்டிருந்தோம்.

தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போதே, இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானது என்பது எங்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. இன்னும் பல ஆபத்துக்களைக் காணப்போகிறோம் என்பது அடிமனதுக்குப் புலப்படத் தொடங்கிவிட்டது. ஆனாலும், பயணத்தை இடையில் முடித்துவிட்டு வந்தவழி திரும்பிச் செல்ல எங்களுக்கு எந்த ஆர்வமும் இருக்கவில்லை. ஏனென்றால் இப்போது எங்களால் எங்களைப் போல மலையேறிக்கொண்டிருக்கும் சிலரை வழியில் பார்க்க முடிந்தது. அவர்களில் சிறு பிள்ளைகளும், பல வயதானவர்களும் கூட இருந்தனர். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாது தள்ளாடித் தள்ளாடி ஏறிக்கொண்டேயிருந்தனர். அவர்கள் சிங்களத்தில் கடவுளின் பெயரைச் சொல்லிச் சொல்லி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னேறிக்கொண்டேயிருந்தனர். அந்த வயதானவர்களை ஏதோவொரு தெய்வ நம்பிக்கை வழி நடத்திக்கொண்டேயிருந்தது. அவர்களைப் பார்த்த எங்களுக்கு புதிதாக தைரியம் புகுந்து கொண்டது. நாங்கள் தொடர்ந்து நடக்கத் தொடங்கினோம்.

நாங்கள் அனைவரும் பொலீத்தீன் உறையால் ஆன உடையை அணிந்திருந்தாலும், அந்த உடை அந்த அடை மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாததனால், நாங்கள் கிட்டத்தட்ட முழுதாக நனைந்துவிட்டிருந்தோம். அதனால், எங்களில் ஒரு நண்பனுக்கு குளிரில் உடம்பு அதிகமாக நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவனால் வேகமாக நடக்க முடியவில்லை. ஐந்தடி நடப்பதும் பின்னர் நிற்பதுமாக அவன் அவதியுறத் தொடங்கிவிட்டான். அவனுக்கு அதிகமாகக் களைப்படையத் தொடங்கிவிட்டது. அவனை இரண்டு பக்கமும் இருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு அவனுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தோம். அப்படிக் கைத்தாங்கலாக அவனைக் கூட்டிச் சென்றாலும், அவனுக்குக் களைப்புக் குறைந்தபாடில்லை. ஒரு கட்டத்தில் அவனுக்கு அதிகமாக மூச்சு வாங்கத் தொடங்கி விட்டது. அவன் இனி நகரவே முடியாது என்று அந்த இடத்திலேயே நின்று விட்டான்.

“கொஞ்ச நேரம் இங்கேயே உக்காந்து இருந்திட்டு, களைப்புக் குறைஞ்சதும் போவம்” என்று சொன்னான். நாங்களும் அப்படியே அங்கேயே கொஞ்ச நேரம் இளைப்பாறுவோமா என்று யோசித்தோம். ஆனால், அந்த இடத்தில் உட்காருவதற்கு எந்த வசதியும் இருக்கவில்லை. தரையில் மழைத் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததனால், அவனை அதில் உட்கார வைத்து இன்னும் உடம்பில் குளிர் ஏறுவதை எங்களால் அனுமதிக்க முடியவில்லை. எங்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் சற்று மேலே ஒரு தகரத்தாலான தற்காலிக தேனீர்க்கடை இருப்பது அதன் மங்கலான மின் விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. அப்போது நான் சொன்னேன் “இல்லடா, இன்னும் கொஞ்சத் தூரத்துல தான் ஒரு கடை தெரியுது. நாம அங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஏறத் தொடங்குவோம்” என்று. அதற்கு அவனும் சரி சொல்ல, அவனை இரண்டு பக்கமும் இருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு அந்த கடையை நோக்கி முன்னேறினோம். அந்தக் கடையை அடைவதற்குக் குறைந்த பட்சம் பத்து அடிகள் தூரம் இருக்கின்ற போது, பலமாக வீசிக் கொண்டிருந்த காற்று அந்தக் கடையின் கூரைத் தகரத்தில் ஒன்றைக் கழற்றி வீசியெறிந்தது. கூரையிலிருந்து கழன்று காற்றில் பறந்த அந்தத் தகரம், நாங்கள் ஆரம்பத்தில் நின்று கொண்டு இளைப்பாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த இடத்தில் விழுந்து, தரையில் குத்தித் தெறித்து மீண்டும் கீழே பறந்து சென்றது. எங்களுக்கு அதைப் பார்த்ததும் ஒரு கணம் உயிர் போய் உயிர் வந்தது. நாங்கள் அங்கு நின்று இளைப்பாறியிருந்தால், எங்களில் எத்தனை பேருக்குத் தலை உடம்பில் இருந்திருக்கும் என்பதை இப்போதும் என்னால் உறுதியாகக் கூற முடியாமலிருக்கிறது.

பயணம் அடுத்த வாரமும் தொடரும்……

No comments:

Post a Comment