December 31, 2017

நடுநிசிப் பயணம் – II


கடந்த வாரத் தொடர்ச்சி……

அந்தக் கடையை அடைவதற்குக் குறைந்த பட்சம் பத்து அடிகள் தூரம் இருக்கின்ற போது, பலமாக வீசிக் கொண்டிருந்த காற்று அந்தக் கடையின் கூரைத் தகரத்தில் ஒன்றைக் கழற்றி வீசியெறிந்தது. கூரையிலிருந்து கழன்று காற்றில் பறந்த அந்தத் தகரம், நாங்கள் ஆரம்பத்தில் நின்று கொண்டு இளைப்பாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த இடத்தில் விழுந்து, தரையில் குத்தித் தெறித்து மீண்டும் கீழே பறந்து சென்றது. எங்களுக்கு அதைப் பார்த்ததும் ஒரு கணம் உயிர் போய் உயிர் வந்தது. நாங்கள் அங்கு நின்று இளைப்பாறியிருந்தால், எங்களில் எத்தனை பேருக்குத் தலை உடம்பில் இருந்திருக்கும் என்பதை இப்போதும் என்னால் உறுதியாகக் கூற முடியாமலிருக்கிறது.

அந்த நம்ப முடியாக் காட்சியைக் கண்களால் பார்த்த எங்களுக்கு, நாங்கள் எந்தளவு ஆபத்தான பயணத்தில் இருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்தது. அந்தக் கொடூர விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய எங்களுக்கு, கடவுளுக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு சிந்தனை ஏது இருக்க முடியும். கடவுள்தான் எங்களைக் காப்பாற்றினார் என்பதை மாறி மாறி வாய்விட்டும் சொல்லிக் கொண்டோம். இப்படி ஆபத்து நெருங்க நெருங்க நாங்களும் விரைவாக மலையை ஏறியாக வேண்டிய தேவைக்கு உள்ளானோம். அந்தத் தகரம் போல அடிக்கடி தகரங்கள் பறக்கின்ற சத்தத்தை மலையேறுகின்ற போது பல சந்தர்ப்பங்களில் எங்களால் கேட்க முடிந்தது. அப்படிச் சத்தம் கேட்கிற போதெல்லாம் தலையைக் குனிந்துகொண்டு வேகமாக ஓடவேண்டியிருந்தது. அந்த நேரத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு சிந்தனை எதுவுமிருக்கவில்லை. இதில் ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவென்றால், அதுவரைக்கும் மலைப் படிகளை ஏற முடியாமல் திணறிக்கொண்டிருந்த அந்த நண்பன் அந்த விபத்தைக் கண்களால் கண்ட பின்னர், அவனையே அறியாது களைப்பை மறந்துவிட்டு எங்களோடு சேர்ந்து வேகமாக ஓடி மலையேறத் தொடங்கியதுதான். உயிர்ப் பயம் அவனுக்கு இனம்புரியாத சக்தியைக் கொடுத்திருந்தது.

அந்த இடத்திலிருந்து ஏறத் தொடங்கி கிட்டத்தட்ட அரை மணித்தியாலங்களின் பின்னர், எங்கள் அனைவருக்குமே கடுமையாக மூச்சுவாங்கவும், களைக்கத் தொடங்கியும் விட்டது. அப்போது தான் நாங்கள் வேகமாக ஓடி வந்திருக்கிறோம் என்ற உண்மை புரிந்தது. ஆகையினால், எங்கள் எல்லோருக்குமே சிறு ஓய்வு தேவையாய் இருந்தது. அந்த மலைப் பாதையில் இருந்த ஒரு தேனீர்க் கடையில் ஒதுங்கினோம். அங்கு எங்களைப் போல சில யாத்திரிகள் தேனீர் அருந்திக்கொண்டும், தாங்க இயலாத களைப்பிற்கு ஓய்வெடுத்துக்கொண்டுமிருந்தனர். நாங்களும் தேனீரை வாங்கி அருந்திக்கொண்டே, அந்த உயிர் நடுங்கும் குளிரிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் என் கால் பாதத்தைப் பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. என் வலது காலின் பாதத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஆனால் எனக்கு அந்த இடத்தில் வலி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நிச்சயமாக அது அட்டை கடித்ததனால் ஏற்பட்ட காயம் தான் என்பது புரிந்தது. உடனே மற்றக் காலையும் சோதனையிட்டுப் பார்த்த போதுதான் அங்கும் இரண்டு இடங்களில் இரத்தம் கசிந்துகொண்டிருப்பது புரிந்தது. அட்டை இரத்தத்தை உறிஞ்சிவிட்டு அதுவாகவே கழன்று விழுந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிந்தது. அது ஆபத்தில்லை என்று தெரிந்திருந்தாலும், இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது என்று எண்ணும் போது அது ஒரு வகை அசௌகரியமாகவேயிருந்தது. என்னைப் போல இன்னுமொரு நண்பனுக்கும் காலில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.

பத்து நிமிடமளவில் அந்தக் கடையில் இளைப்பாறிவிட்டு, மீண்டும் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். அந்த அடைமழை புகை மண்டலம் போல் பாதையை மறைத்து விட்டிருந்தது. மிகவும் அவதானமாக ஒவ்வொரு படியாக ஏறவேண்டியிருந்தது. அப்போது பாதை நெடுங்கிலும் மலையேறும் யாத்திரிகள் பலரை எங்களால் பார்க்க முடிந்தது. அவர்களில் பலர் வயோதிபர்களாக இருந்ததுதான் எங்களுக்கு வியப்பிலும் வியப்பாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் சிங்களவர்களாகவேதான் இருந்தார்கள். அந்த மழையிலும், குளிரிலும் அப்படியொரு ஆபத்தான மலையை அந்த வயோதிபர்கள் ஏறிக்கொண்டிருப்பது வார்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், அவர்களில் ஒரு பரஸ்பர இணக்கப்பாட்டை அங்கு பார்க்க முடிந்தது. மலையேறிக் கொண்டிருக்கும் வயோதிபர்களுக்கு மலையேறும் பலர் பரஸ்பரம் உதவி செய்வதும், கடினமான படிகளில் ஏறும்போது அவர்களைத் தூக்கி விட்டு ஏற்றிவிடுவதுமாகவிருந்தனர். ஆனால், அப்படியானவர்களில் பலர் அந்த வயோதிபர்களுக்கு முன் பின் தெரியாதவர்கள்தான். உதவி செய்ய வேண்டும் என்கிற ஓரே நோக்கத்துக்காக அவர்கள் அதைச் செய்து கொண்டிருந்தனர்.

அந்த மோசமான அடை மழையோடும், பேய்க் காற்றோடும், கண்களைக் கட்டிவிட்ட இருளோடும், பேரிரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்த பாய்ந்தோடும் பள்ளத்தாக்கு அருவிகளின் உயிரை மிரட்டும் சத்தத்தோடும் எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. சிறிது தூரம் சென்ற பின்னர் எங்களுக்காகத் தான் காத்திருப்பது போல ஒரு ஆபத்து மலைப் படி ஓரத்தில் நின்றிருந்தது. பாதையின் ஓரத்தில் ஒரு நீண்டு வளர்ந்திருந்த மரம் பாதைக்குக் குறுக்காகச் சரிந்து விழுவதற்குத் தயாராகவிருந்தது. அடிக்கின்ற பேய்க் காற்றில் அது அசைந்து அசைந்து எங்களைத் திரும்பிப் போகச் சொல்லிப் பாசாங்கு செய்வது போல் நின்று கொண்டிருந்தது. வருகிற வழி முழுக்கப் பல ஆபத்துக்களையும் விபத்துக்களையும் கடந்து வந்திருந்த எங்களுக்கு மனதில் ஒரு இனம்புரியாத தைரியமும், அந்த ஆபத்தான பயணத்தில் ஒரு அளவு கடந்த சுவாரசியமும் மனதில் குடிகொண்டுவிட்டது. ஆகையால், அந்த மரத்தையும் அதன் நிலையையும் பார்த்துச் சில நொடிகளிலேயே, என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். அந்த மரத்திற்குச் சற்று அருகில் வந்து, அது உடனே விழுவதற்கான அறிகுறி தெரிகிறதா என்று எங்கள் கண்களாலேயே எடை போட்டோம். எங்கள் கணிப்பின் பிரகாரம், நாங்கள் அதைக் கடந்து செல்லும் காட்டிலும் அது விழுந்து விடாது என்று ஊகித்துக் கொண்டோம். எனவே, அதற்கு மேல் நேரத்தை வீணாக்க விரும்பாமல், ஓரேயோட்டமாக ஓடிப் படிகளில் ஏறி அந்த மரத்திற்குக் கீழாக அதைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயம் மெல்ல மெல்ல உருமாறி சுவாரசியமாகி விட்டதாக எங்களுக்குத் தோன்றியது.

நாங்கள் கடந்து வந்த அபாயங்களால் முற்றிலும் சுவாரசியமாகிப்போன அந்தப் பயணம், எங்களைப் பயத்தை விலக்கி ஆர்வத்தோடு மலையை ஏறச் செய்தது. இன்னும் ஏதாவது ஆபத்துக்கள் வருமா, அதை எப்படிச் சுவாரசியமாகக் கடந்து செல்வது என்று அரட்டையடித்துக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தோம். இதற்கிடையில் ஆங்காங்கே நண்பர்களில் இரண்டு பேர், மலைப் பாதைக் கடைகளில் மலைச் சுருட்டுக்கள் வாங்கி புகை விட்டபடியே வந்துகொண்டிருந்தார்கள். அது மழையில் நனைவதும் எரிவதுமாக புகைந்து கொண்டிருந்தது. மலைச் சுருட்டுக்கள் அண்ணளவாக ஐந்து அங்குலம் நீளம் வரையில் இருக்கும். அதை சாதாரணமாக அங்குள்ள அனைத்து மலைப் பாதைக் கடைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். அது அங்கு குளிரிலிருந்து உடம்பை பாதுகாத்துக் கொள்வதற்கான மருந்தாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர, போதைப் பொருளாக இல்லை.

நாங்கள் தொடர்ந்து நடந்துகொண்டும், ஏறிக்கொண்டும் இருந்தோம். அந்தப் பாதையில் ஒரு வளைவான இடத்தைக் கடந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு தேனீர்க் கடை ஒன்றில் பலர் களைப்பிற்கு ஒதுங்கியிருப்பதைப் பார்க முடிந்தது. மலை ஏறிக்கொண்டிருப்பவர்களும், அங்கிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர்களும் அவர்களில் இருப்பார்கள் என்பது எங்கள் ஊகம். நாங்கள் அந்தக் கடையைப் பார்த்த வாறே அதைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்தக் கடைக்குள் இருந்தவர்களில் ஒரு வயதான பெண் ஒருத்தர் ஏதோ சொல்லி எங்களை அழைத்தார். அவர் எங்களைத்தான் அழைக்கிறார் என்பதை இரண்டு முறை உறுதிப்படுத்திக் கொண்டு அந்தக் கடையருகில் சென்றோம். அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த வயதான சிங்களப் பெண், நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இன்னுமொரு வயதான பாட்டியைக் காட்டி அவரை மேலே மலைக்குக் கூட்டிச் செல்ல உதவுமாறு எங்களைக் கேட்டார். அந்தப் பாட்டிக்கு குறைந்தது அறுபது வயது இருக்கும் என்பதை அவரது தள்ளாடும் தோற்றத்திலும், குளிருக்கு நடுங்கிய அவரது நிலையிலுமிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. அவரின் நிலையை ஒரு முறை பார்த்து விட்டு, எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்ல இணங்கி விட்டோம்.

(வாசகர்கள் மன்னிக்கவும். பிறருக்கு உதவி செய்தவற்றை விளம்பரம் செய்வதாக இனிவரும் பகுதிகளில் நான் குறிப்பிடுவதாக எண்ணிவிட வேண்டாம். இனிவரும் பகுதிதான் அந்தப் பயணத்தை முழுமைப்படுத்திய சம்பவங்களையும் அனுபவங்களையும் எங்களுக்கு அளித்தது என்பதாலும், அந்தப் பயணத்தில் அவர்களுடனான பகுதி தவிர்க முடியாதது என்பதாலும் நடந்தவற்றை நடந்தவாறே எழுத முனைகிறேன். தற்பெருமை கூறுவதாகத் தோன்றின் மன்னிக்கவும்)

இரண்டு பக்கமும் நாங்கள் இருவர் அந்தப் பாட்டியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து ஏறத் தொடங்கினோம். எங்களுடனேயே மற்ற வயதான பெண்ணும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் சிங்களவர்கள் தான் என்றதும், நாங்கள் தமிழில் கதைப்பது அவர்களுக்குப் புரியாது என்பதனால் எங்களுக்குள் பேசிக் கொண்டோம், ஏன் இவர்கள் இந்த தள்ளாடும் வயதில் அதுவும் இந்த மழை நேரத்தில் இப்படி மலையேற வருகிறார்கள் என்று. உண்மையில் அவர்களை எங்களால் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. சாதாரணமானவர்களுக்கே அந்த மலைப் பயணம் அசாத்தியமானதாக இருக்கும் போது, இப்படி உறுதியாக ஓரிடத்தில் நிற்கக்கூட முடியாத வயதில் அவர்களுக்கு மலையேறும் ஆசை தேவைதானா என்று அடிக்கடி யோசித்துக்கொண்டும், எங்களுக்குள் சொல்லிக் கொண்டுமிருந்தோம். ஆனால், அவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் உதாசீனப்படுத்த எண்ணாது, பாதுகாப்பாக அழைத்துச் சென்றுகொண்டிருந்தோம்.

அந்தப் பாட்டி மழையில் நனைந்ததனால், குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார். அதனால், அவரால் அதிகம் பேச முடியவில்லை. ஆகையினால், மற்ற வயதான பெண்ணே அடிக்கடி எங்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் புரிந்தது, அவர்களுக்கும் அதுதான் அந்த மலைக்கான முதல் பயணமென்று. ஆனால், அவர் கேட்ட கேள்விக்குத்தான் எங்களிடம் பதில் இருக்கவேயில்லை. நாங்கள் தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்தோம். அதுவரை பெய்துகொண்டிருந்த அடைமழை சற்றுக் குறைந்திருந்தமையால், வீசிக்கொண்டிருந்த காற்று ஜில்லென்று எங்கள் மீது மோதி உடம்பை குளிரில் ஆட்டங்காண வைத்துக்கொண்டிருந்தது. அதை விட அந்த அடை மழையே பறவாயில்லை போலிருந்தது. ஆனாலும் நாங்கள் ஏறிக்கொண்டிருந்தோம். ஆனால், அந்தப் பாட்டி குளிர் தாங்காமல் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு அந்தக் குளிரைத் தாங்குகின்ற சக்தி இருக்கவில்லை. ஆனாலும் அவர் ஒரு விடாப்பிடியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்களோடு ஏறிக்கொண்டேயிருந்தார். அந்தப் பாட்டியோடு வந்த மற்றப் பெண், சிங்களத்தில் ஏதோ தெய்வீகப் பாடலைப் பாடிக்கொண்டு எங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். அந்தப் பாடல் அந்தப் பாட்டியை அடிக்கடி தெம்படையச் செய்ததை எங்களால் உணர முடிந்தது. அந்தப் பாட்டி குளிரில் முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்த போதும், அந்தப் பாடலோடு இணைந்து தானும் பாடுவதற்கு அடிக்கடி முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர்களின் முதுமையால் அவர்களின் உடல்தான் அடிக்கடி களைப்படைந்ததே தவிர, அவர்கள் மனதளவில் துளியளவும் களைப்போ சலிப்போ அடையவில்லை. அவர்கள் தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருந்தார்கள்.

தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருக்க, தூறல் மழை மீண்டும் அடை மழையாக மாறி கொட்டத் தொடங்கிவிட்டது. அந்த இருளைவிட தான் எந்தவிதத்திலும் சளைத்தவனில்லை என்பதை நிரூபிக்க அந்த மழை புகை மூட்டம் போல் பாதையை மறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டது. அந்த அடை மழையால் அதுவரைக்கும் இல்லாத அளவு மலைப்படிகளில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிட்டது. இருளோடும், காற்றோடும், மழையோடும் மட்டுமல்லாமல் படிகளில் வழிந்தோடி வரும் வெள்ளத்தோடும் முட்டி மோதி எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. சாதாரணமாக இருந்த சவால்களோடு, எங்களை நம்பி வந்த இருவரைக் காக்கிற சவாலோடும் முன்னேறிக்கொண்டிருந்தோம். அப்படி ஏறிக் கொண்டிருக்கும் போதுதான் நாங்கள் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அது அந்த மலைப் பாதையிலேயே மிகவும் அபாயகரமான பகுதியாகத் தெரிந்தது. அங்கிருந்து மலைப் படிகள் செங்குத்தாக உயர்ந்து செல்வது போல் தெரிந்தது. அதுவரை கடந்து வந்த தூரங்கள் அத்தனையும், படிகளாகவும் பின்னர் சமாந்தரமாகவும் என்று மாறி மாறியே வந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த இடம் மிகவும் ஆபத்தான வகையில் மேலே உயர்ந்து சென்று கொண்டிருந்தது. பார்ப்பதற்கே பிரம்மிப்பாகவும், ஆபத்தாகவுமிருந்த அந்தப் படிகளை மிகவும் சிரமப் பட்டே ஏறவேண்டியிருந்தது. காரணம், அந்தப் பாட்டியை சிரமத்தோடு அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் எங்களைப் போல தயங்கியவர்களாகத் தெரியவில்லை. தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருந்தார்கள். ஏதோ ஒரு வைராக்கியம் அவர்களை எங்களை விடத் துணிச்சலானவர்களாக வழிநடத்திக் கொண்டிருந்தது.

அந்த ஆபத்தான செங்குத்துப் படிகள் ஓர் இடத்தில் இடப் பக்கமாகத் திரும்பி இன்னும் அதிக செங்குத்துப் படிகளாகப் போய்க் கொண்டிருந்தது. அந்தத் திருப்பம் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத அளவுக்கு ஆபத்தானதாகவும், அழகானதாகவும் தெரிந்தது. அந்தத் திருப்பத்திற்கு வலது பக்கத்தில் பல நூறு மீற்றர்கள் ஆழமான பள்ளத்தாக்கு இருப்பது அதன் வெறுமையில் விளங்கியது. பிரம்மிப்பூட்டும் அந்தப் பள்ளத்தாக்கைப் பார்ப்பதா தவிர்ப்பதா என்று அஞ்சிக்கொண்டே அந்த மூலையின் திருப்பத்தில் திரும்பி ஏறத் தொடங்கினோம். அங்குதான் எங்களுக்கு அடுத்த சுவாரசியம் காத்துக் கொண்டிருந்தது.

அடைமழையால் பெருக்கெடுத்து படிகளில் ஓடிக்கொண்டிருந்த வெள்ளம், அந்த இடத்தில் படிகள் மிகவும் செங்குத்தாக இருந்தமையால் மிக வேகமாக மேலிருந்து கீழே ஓடி வந்துகொண்டிருந்தது. மேலிருந்து வழிந்தோடி வந்துகொண்டிருந்த மழை வெள்ளம் எங்கள் கால்களில் மோதித் தெறித்து எங்கள் முகத்தில் மோதுகிற அளவுக்கு பலமுள்ளதாக இருந்தது. மழைத் துளிகள் மட்டுமல்லாமல் அப்போது அந்த வெள்ள நீரும் எங்கள் முகத்தில் மோதியடிக்கத் தொடங்கிவிட்டது. அதுவரை தூரம் ஏறியது போல் அந்தப் படிகளில் விரைவாக ஏறிவிட முடியவில்லை. சிறிது உயரத்திற்கு ஏறுவதும், பின்னர் நின்று ஆசுவாசப்படுவதுமாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். அந்த ஆபத்தான படிகளில் கிட்டத்தட்ட அந்தப் பாட்டியைத் தூக்கிவிட்டுத் தூக்கிவிட்டுத்தான் ஒவ்வொரு படிகளிலும் ஏற வைக்க முடிந்தது. அப்படிக் கொஞ்சம் சொஞ்சமாக அந்த ஆபத்தான படிகளில் வழிந்தோடிவந்த நீரில் முட்டி மோதிக் கொண்டே ஓரளவு சமாந்தரமான இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கு மலைக்கோயில் இன்னும் நூறு மீற்றர்கள் தூரத்தில் இருப்பதாக ஒரு பலகை தொங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் எங்கள் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சாக வெளிவந்தது. அந்த இடத்திலிருந்த ஒரு தேனீர்க் கடையில் சிறிது நேரம் களைப்பாறி விட்டுச் செல்லலாம் என அந்தப் பாட்டியை கைத்தாங்கலாகவே அழைத்துக் கொண்டு ஒரு நாற்காலியில் உட்கார வைத்தோம். அவர் முழுதாய் உட்கார்ந்தும், உட்காராமலும் எங்களைப் பார்த்துக் கையெடுத்து வணங்கினார்.. அவரின் கண்களில் நீர் பெருகிக் கிடந்தது. அவர் எங்களை வணங்கியது நன்றியுணர்விற்காகத்தான் என்ற போதும், அதைச் சற்றும் எதிர்பார்த்திராத எங்களுக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது. ஒரு புல்லரிப்பைச் சில நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாக என்னால் உணர முடிந்தது. அந்தப் பெண் தன் கைப்பையிலிருந்து ஒரு பிஸ்கட் பக்கட்டை எடுத்து எங்களிடம் நீட்டினார். நாங்கள் அன்பாக அதை மறுக்க முயற்சி செய்தோம். ஆனால், அவர்களின் மகிழ்ச்சிக்காக அதை ஏற்றுக்கொண்டோம். ஆனாலும், அவர்கள் இருவரும் சிறு துண்டைக்கூட உண்ணவில்லை. அவர்கள் ஒரு பிரார்த்தனையோடு வந்திருப்பதாகவும், மலைக் கோவிலுக்குப் போய் அந்தப் பிரார்தனையை நிறைவேற்றி விட்டுத்தான் தங்களால் உண்ண முடியும் என்றும் கூறினார்கள்.

இன்னும் பயணிக்க வேண்டியது வெறும் நூறு மீற்றர்கள் தூரம் தான் என்று தெரிந்துவிட்டதால், அந்த இடத்தில் அதிக நேரங்கள் தாமதிக்காமல் ஆர்வத்தோடு மீண்டும் படிகளில் ஏறத் தொடங்கினோம். மெல்ல மெல்ல முன்னேறி மலையின் உச்சியை அடைந்தோம். சாதாரணமாக மூன்றரை மணித்தியாலங்களில் ஏறி அடைந்திருக்கக்கூடிய மலை உச்சியை, வழியில் ஏற்பட்ட பல தடைகளாலும் தாமதங்களாலும் ஐந்து மணித்தியாலங்களின் பின்னரே அடைந்தோம். அங்கே சிறிய கோவில் ஒன்று மலையின் மையத்திலிருப்பது தெரிந்தது. அது பௌத்த மதக் கட்டடக் கலை அமைப்பிலேயே இருந்தது. அதற்குள் நுழைவதற்கு முன்னர் வெளியில் பாதணிகளைக் கழற்ற வேண்டியிருந்தது. பாதணிகளைக் கழற்றியதும் எங்களால் சில நொடிகள் கூட ஓர் இடத்தில் நிற்க முடியவில்லை. அந்தளவுக்குக் குளிர் உள்ளங் கால்களைத் தைக்கத் தொடங்கிவிட்டது. பங்குனி மாத வெயிலில் மணல் பரப்பில் நடப்பதைக் காட்டிலும், அந்தக் குளிர் மோசமான வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் அந்தச் சிறிய கோயிலுக்குள் நுழைந்தோம். அங்கே திரைச் சீலை ஒன்றினால் மூடப்பட்ட அறையை அதற்கு முன் நின்ற ஒரு பிக்குவிடம் சில நாணயத்தாள்களை நீட்டிவிட்டு, திரையை விலக்கிப் பார்த்தோம். அங்கே ஒரு பெரிய பாதச்சுவடு போன்ற அமைப்பு தெளிவாகத் தெரிந்தது. அதற்கு மேலே சில மெல்லிய துணிகள் விரிக்கப்பட்டிருந்தது. அதுதான் சிவனின் பாதமா என்று கண்களை அகல விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பாட்டி தாங்கள் கொண்டுவந்திருந்த ஒரு பட்டுப் போன்ற துணியை எடுத்து எங்கள் கைகளில் கொடுத்து அந்தப் பாதத்தின் மேல் விரிக்கச் சொன்னார். அவர் எங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகத்தான் அப்படியொரு வாய்ப்பை எங்களுக்களிக்கிறார் என்று தெரிந்து கொண்டு, அன்பாக அதற்கு மறுப்புத் தெரிவித்தோம். ஆனால், அவரின் அன்பு அந்த வேண்டுகோளை தட்டிக்கழிக்க முடியாமல் செய்யவே, அவர்களோடிணைந்து அந்தத் துணியை அந்தப் பாதத்தின் மீது விரித்து அந்தப் பாதத்தைத் தொட்டு வணங்கினோம்.

பின்னர் அங்கிருந்து வெளியில் வர, அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்திருந்த உலர வைத்த தேங்காய்த் துண்டுகளை அங்கிருந்த காரியாலயம் ஒன்றில் ஒப்படைத்தார்கள். அதற்கான காரணம் எதுவென்று அப்போது எங்களுக்குப் புரியாவிட்டாலும், அவற்றையும் ஒப்படைத்த பின்னர்தான் அவர்களின் பிரார்த்தனை முழுமையடைந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பின்னர் அந்தப் பெண் எங்களுடன் சில நிமிடங்கள் பேசினார். அவர்கள் குருணாகல் மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், அந்தப் பாட்டி தனது அக்கா என்றும், தனது பத்து வயது மகன் புற்று நோய்க்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அவனுக்காகப் பிரார்த்தனை செய்யத்தான் தாங்கள் அங்கு வந்ததாகவும் கூறினார். எங்களுக்குக் கண்ணீராலேயே மீண்டும் மீண்டும் நன்றி கூறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் எங்களுக்குப் பல கேள்விகளுக்கு விடைகள் புரிந்தது. ஏன் இந்தத் தள்ளாடும் வயதில் இந்த மலையேற விரும்பினார்கள் என்று புரிந்தது. நாங்கள் கூட அஞ்சிக் கொண்டு பயணித்த ஆபத்தான பயணத்தை எப்படி அவர்களால் தைரியமாக பயணிக்க முடிந்தது என்று புரிந்தது. அந்த நள்ளிரவில் அடை மழையில் உணவின்றி மலையேறிய பிரார்த்தனையின் வலி எங்களுக்குப் புரிந்தது. அந்த அத்தனை கேள்விகளுக்கும் அவர்களின் இரு சோடிக் கண்களிலிருந்து வந்து கொண்டிருந்த கண்ணீர்த் துளிகள் பதில் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருந்தது. அது தாய்ப் பாசம் என்ற பதிலை மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் தந்து கொண்டிருந்தது.

அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, நாங்கள் அந்த மலை உச்சியைச் சுற்றிப் பார்ப்பதற்காக அவர்களிடமிருந்து அன்பைப் பரிமாறி விடைபெற்றுக் கொண்டோம். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்த பெரும் கூட்டத்தோடு கலந்துவிட்டார்கள். அதன் பின்னர் அவர்களை எங்களால் கண்டு கொள்ள முடியவில்லை. மலையிலிருந்தே இயற்கையின் அழகை இரசித்துவிட்டு கீழே மீண்டும் இறங்கத் தொடங்கினோம். கடுமையான மழையால் நாங்கள் திட்டமிட்டது போல சூரியோதயத்தைப் பார்க்கின்ற பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அது குறித்து சிறிதளவு கூட எங்களுக்குக் கவலை இருக்கவில்லை. ஏனென்றால், அந்தக் கண்ணீர் தோய்ந்த இரு சோடிக் கண்களில் நாங்கள் ஆயிரம் ஆயிரம் சூரியோதயங்களைப் பார்த்திருந்தோம். அவை ஒரு நாளும் அஸ்த்தமித்திடாத சூரியனாய் இன்றுவரை கனன்று கொண்டிருக்கிறது உள்ளத்தில்.

பயணம் முற்றுகிறது.

No comments:

Post a Comment