April 12, 2020

மொஸாட்














ஓர் இரகசியம் உடைக்கப்படுகின்ற போது, அதனால் ஒன்றில் அவ் இரகசியத்திற்குச் சொந்தமானவருக்கு அச்சம் ஏற்படலாம் அல்லது அதை அறிந்து கொள்பவர்களுக்கு அச்சம் ஏற்படலாம். இது இரண்டாம் வகையைச் சார்ந்தது.  அந்த இரகசியங்கள் வெறுமனே ஓரிருவரை மாத்திரம் கிலிகொள்ளச் செய்யவில்லை. முழு உலகையும் பீதியில் உறைய வைத்தது. இப்படியும் நடக்கக் கூடுமா என்று சாமான்ய மக்களையும், இவற்றைச் செய்தது அவர்கள் தானா என்று பல சாணக்கிய அரசுகளையும் விழி பிதுங்க வைத்தது. அவர்களின் வேட்டைத் தந்திரங்கள் ஒவ்வொன்றும் நெற்றியடியாகவேயிருந்தது. எதிரிகள் கதிகலங்கினார்கள். நட்பாடியவர்கள் கூட நடுங்கி நின்றார்கள். அவர்கள் குற்றங்களாலேயேதான் தங்களைச் செதுக்கிக் கொண்டார்கள். அவர்களின் அதிகார எல்லை வானளாவியது. அவர்களின் சாகச வெறி என்றும் தணியாதது. கொலை, கொடூர சித்திரவதை, நாடு விட்டு நாடு ஆட்கடத்தல், கொள்ளை என்று அவர்கள் எதையும் செய்யத் தயங்காதவர்கள். இவற்றை விட மோசமானவற்றைக்கூட சர்வசாதாரணமாகச் செய்தவர்கள். இன்னும் செய்துகொண்டிருப்பவர்கள். அவர்களின் இரகசியங்கள் வெளிக் கசிந்த போது அவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால், உலகம் உறைந்து போனது. அமெரிக்கா உட்பட பல வல்லரசுகள் வாய் பிழந்து நின்றன. ஆனால், அவர்கள் எங்கும் தாமதிக்கவில்லை. அடுத்த இலக்கை நோக்கி இன்றும் போய்க்கொண்டேதானிருக்கிறார்கள்.


நூல் விமர்சனம் – `மொஸாட்`

பல ஆங்கில மற்றும் தமிழ் நூல்களின் ஆதாரங்களினூடே என்.சொக்கன் அவர்களினால் குமுதம் இதழில் வெளிவந்த தொடரின் விரிவாக்கப்பட்ட நூல் வடிவமே மொஸாட். உலகின் பலமான உளவுத் துறையாகக் கருதப்படும் இஸ்ரேலிய நாட்டின் மொஸாட் அமைப்புத் தொடர்பான பல திகிலூட்டும் இரகசியங்களின் பதிவே இந்நூல். எந்தவொரு நாட்டின் உளவுத் துறைக்கும் இல்லாத அதிகாரம் மொஸாட்டிற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்க வேண்டுமாயின், அவர்கள் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். எங்கும் எவரையும் கொலை செய்யலாம், நாடுவிட்டு நாடு ஆட்கடத்தலாம், பணத்தை வாரியிறைக்கலாம், ஒட்டுக் கேட்கலாம், இவ்வளவு ஏன் எதிரியின் பலவீனம் பெண்தான் என்றால், அதைக்கூட ஏற்பாடு செய்து கொடுத்து தங்களுக்கு வேண்டிய வேலையை முடிக்கலாம். இவ்வளவும் இஸ்ரேலிய அரசின் பூரண ஆசிர்வாதத்துடனேயே செய்யலாம். அந்நாட்டுப் பிரதமரைத் தவிர அவர்களை வேறு எவரும் கேள்வி கேட்க முடியாது. இவ்வளவு ஏன், அவர்கள் தங்கள் பணி நிமித்தம் எவ்வளவு பெரிய பாதகச் செயலைச் செய்திருந்தாலும், அது தண்டனைப் பட்டியலில் சேர்க்கப்படாது. அவர்களை அந்த நாட்டின் எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. மொஸாட் இஸ்ரேலிய நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை உளவு பார்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட உளவுத் துறை. ஆனால், உலகின் பிற நாடுகளின் பார்வையில் அது மிகக் குரூரமான அரக்கன்.

யூதர்களுக்கென்று தனியான நாடு எதுவும் இல்லாத நிலையில், அந்தக் கனவை மெய்ப்பிக்க யூதர்களால் பாலஸ்த்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட நாடே இன்றைய இஸ்ரேல். ஆரம்பத்தில் அகதிகளாக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறுபட்ட அரசியல் சூழ்நிலைகளால் பாலஸ்த்தீனத்திற்குக் குடி பெயர்ந்த யூதர்கள் மெல்ல மெல்லத் தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள். ஆரம்பத்தில் பாலஸ்த்தீனியர்களுக்கும், யூதர்களுக்கும் நல்லுறவு காணப்பட்டாலும், யூதர்களின் அதீதமான இடப் பெயர்வு தங்கள் மண்ணில் தங்களையே அகதிகளாக்கிவிடுமோ என்று பாலஸ்த்தினியர்களை அஞ்சச் செய்தது. இதனால் ஆங்காங்கே யூதர்கள் மீது தாக்குதல்ச் சம்பவங்களும், அதற்கு யூதர்களினால் பதில்த் தாக்குதல்களும் அரங்கேறின. இது தங்களுக்கே உரித்தான நாடு என்று பாலஸ்த்தீனியர்கள் வெகுண்டெழுந்தாலும், அப்போது பாலஸ்த்தீனத்தை தன் காலனித்துவ நாடாக வைத்திருந்த பிரிட்டிஸானது யூதர்களின் பக்கமே நின்றது. ஆகையினால், ஆட்சியாளர்களின் தாராளமான ஆசிர்வாதத்தோடு பல நாடுகளிலுமிருந்து யூதர்கள் அங்கு மெல்ல மெல்லக் குடிபெயர்ந்தார்கள்.

இவ்வாறு பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டமைக்கப்பட்ட இஸ்ரேலுக்கு, அனைத்துத் திசைகளிலுமிருந்தும் ஆபத்துக்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. அது நேரடியாக பாலஸ்த்தீனம் மட்டுமல்லாமல், அதன் நட்பு நாடுகளால் கூட மிகப் பெரும் மறைமுக ஆபத்தை எதிர் நோக்கியிருந்தது. 1948 ஆம் ஆண்டு பிரிட்டிஸிடம் இருந்து விடுதலை பெறுகின்ற போது, அதுவரை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருந்த யூதர் ஆக்கிரமிப்பு நிலப்பரப்பு, இஸ்ரேல் என்ற தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவரை காலமும் பிரிட்டிஸின் பாதுகாப்பிலிருந்த அவ் யூதர்கள், அதன் பின்னர் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குள்ளானார்கள். ஆனால், அச்சமயம் அவர்களிடம் போதுமான ஆயுத பலம் இருக்கவில்லை. அந்தச் சூழலை வெகு சாமர்த்தியமாகக் கையாள எண்ணிய அவர்கள், ஒரு பலமான உளவுத்துறையின் தேவையை உணர்ந்து கொண்டார்கள். ஒரு பலமான உளவுத்துறை இருக்குமாகயிருந்தால், எதிரியின் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு முகங்கொடுக்கவோ அல்லது அதனை முறியடிக்கவோ முடியும் என்பதை அவர்கள் தெளிவாக இனங்கண்டுகொண்டார்கள்.

எனவே, அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த மொஸாட். ஆரம்பத்தில் பல தவறுகளையும், சொதப்பல்களையும் அவர்கள் தாராளமாகவே செய்திருந்தாலும், எந்நேரமும் ஆபத்துச் சூழ்ந்த பல கடினமான சூழ்நிலைகளைக் கையாள்கிற அனுபவம் தொடர்ந்து கிட்டியமையால், அவர்கள் மிகச் சிறப்பான உளவு அமைப்பாய் ஆனார்கள். ஆரம்பத்தில் தங்களின் தற்பாதுகாப்புக்கென உருவாக்கிய அமைப்பு பின்னர் இஸ்ரேலினை பிராந்தியத்தில் ஒரு வல்லாதிக்கம் மிக்க சக்தியாக உருவாக்க உழைக்கத் தொடங்கியது. எதிரியின் நாட்டுக்குள்ளேயே புகுந்து அந்நாட்டு அரசு கூட அறிந்திராத இராணுவ இரகசியங்களைக்கூட வெகு லாவகமாகத் திருடினார்கள். தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஆணி வேர் வரை துப்புத்துலக்கி அவர்களின் நாட்டிற்கே சென்று கொன்றழித்துவிட்டு, எவருக்கும் சந்தேகமே இல்லாத வகையில் நாடு வந்து சேர்ந்தார்கள்.

மொஸாட்டின் பல அயோக்கியத் தனங்களும், சாகசங்களும் வெளிவந்திருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்க அவர்களின் சாகசங்களிலொன்று மிக்-21 என்ற விமானக் கடத்தல்தான். உலகின் எந்த நாடும் துணிந்திராத செயல் அது. உலக வல்லரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா கூட தோற்று நின்ற செயல் அது. அந்தக் கடத்தலின் பின்னர் தான் இஸ்ரேல் மீதான உலக நாடுகளின் பார்வையே மாறியது. கத்துக்குட்டி என்று நம்பியிருந்த சிறு நாட்டின் பலத்தைக் கண்டு உலகம் வாய் பிதுங்கிய முக்கிய சம்பவம் அது. மற்ற நாடுகள் மட்டுமல்ல, இஸ்ரேலின் இராணுவ பலத்தின் வளர்ச்சியில் மிகப் பெரும் பங்காளியாய் இருந்த, அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்குக் கூட அதன் பின்னர் தான் இஸ்ரேல் தங்களுக்கு நிகராக வளர்ந்து நிற்பது புரிந்தது.

amazon.in

மிக்-21 என்பது ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஓர் அதிநவீன போர் விமானம். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான பனிப்போர் நிலவிக்கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் இவ்வாறு அதிநவீன விமானம் ஒன்றை ரஷ்யா உருவாக்கியது அமெரிக்காவுக்கு சற்று பீதியைக் கிழப்பியது. ரஷ்யா அந்த விமானத்தை அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்தது. இதனால், அந்த விமானத்தின் அதி நவீன தொழில்நுட்பங்களும், உத்திகளும் எதுவென்று தெரியாமையினால், போர் முழ்கின்ற போது அந்த விமானத்தை எப்படிக் கையாழ்வது என்பது பெரும் புதிராகவேயிருந்தது. எனவே, மிக்-21 வகை ஏதேனுமொரு விமானத்தைக் கடத்தி வந்து அதன் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள அமெரிக்கா பலவாறு முயற்சி செய்தும் அது கைகூடவில்லை. ஆனால், மொஸாட்டின் உதவியுடன் இஸ்ரேல் அதனை லாவகமாக செய்து முடித்தது. இஸ்ரேலின் எதிரி நாடுகளும் அந்த விமானத்தை வைத்திருந்தமையே, இஸ்ரேல் அந்த விமானத்தின் மீது காதல் கொள்ளக் காரணம். இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதனால், ரஷ்யா அந்த விமானத்தை இஸ்ரேலுக்கு விற்பனை செய்யாது. எனவே, எப்படியாவது எதிரி ஒருவனிடமிருந்து ஒரு விமானத்தைக் கடத்தி வந்து, அதை அக்கு அக்காகப் பிரித்துப் பார்த்துவிட வேண்டும் என்று இஸ்ரேல் துடிக்கத் தொடங்கியது. நேராக பணி மொஸாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

மொஸாட் தன் பணியை ஆரம்பத்தில் நேர் வழியில் துவக்கியது. முதலில் அந்த விமானம் வைத்திருந்த நாட்டின் தரவுகளைத் திரட்டிக்கொண்டு, அவர்களுக்கு அதிக பணம் கொடுப்பதன் மூலம் விமானத்தை விலைக்கு வாங்க முடியுமா என்று முயிற்சி செய்தது. ஆனால் அது கைகூடவில்லை. ஆகையினால், அடுத்து மொஸாட் அதற்கேயுண்டான பாணியில் வேலையை ஆரம்பித்தது. எங்கேனுமிருந்து விமானத்தைக் கடத்துவதுதான் திட்டம். ஆனால், அது அவ்வளவு இலகுவானதல்ல. எதிரியின் நாட்டிலிருந்து கடத்த வேண்டும். திட்டத்தில் இன்னுமொரு சிக்கலும் இருந்தது. அந்தப் போர் விமானத்தை எவர் வேண்டுமானாலும் செலுத்திவிட முடியாது. பிரத்தியேகமாக, அந்த விமானத்தைச் செலுத்த பயிற்சி பெற்ற விமானி ஒருவனால் மாத்திரமே முடியும். எனவே, தமது இலக்கு விமானி என்று முடிவு செய்தது மொஸாட். இரையை நோக்கித் தூண்டில்களை வீச ஆரம்பித்தது. பணத்தாசை கொண்டவர்களுக்கு பணத்தைக் காட்டியும், பெண்கள் மீது ஆசை கொண்டவர்களுக்கு அவற்றை ஏற்பாடு செய்தும், மதுப் பித்தர்களுக்கு அவற்றைக் கொடுத்தும் அவர்களை தங்களின் வழிக்குக் கொண்டுவருவதே மொஸாட்டின் தூண்டில்களின் பணி. ஆனால், அதை மிக இரகசியமாக சந்தேகம் வந்துவிடாதபடி செய்ய வேண்டும். சிறிய சந்தேகம் வந்தால்கூட எதிரி விழித்துக்கொள்வான்.  பல தோல்விகளுக்குப் பின்னர் அவர்கள் வீசிய தூண்டிலுக்கு ஈராக்கில் ஒரு மீன் சிக்கியது. ஈராக்கின் மிக்-21 விமானமொன்றின் மாலுமி ஒருவன் ஒரு மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கப்பட்டான்.

இனிக் காரியங்கள் மெல்ல மெல்ல நடந்தேறின. மொஸாட் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி, அவர்கள் கூறிய விமானப் பாதை வழி விமானம் இஸ்ரேலினை வந்தடைந்தது. ஈராக் சுதாகரிக்கும் முன் காரியம் நடந்து முடிந்தது. ஈராக் விமானத்தைத் திரும்ப ஒப்படைக்கும்படி கடுந்தொனியில் மிரட்டியது. ரஷ்யா கோபாவேசத்துடன் சத்தமிட்து. ஆனால், இஸ்ரேல் எதையும் கண்டுகொள்ளவில்லை. கடத்திவந்த விமானத்தை சிறு ஆணி கூட மிச்சமில்லாமல் ஆராய்ந்து அதன் முழுமையான தொழில்நுட்ப வித்தைகளையும் கற்றுக்கொண்டது. இதை அறிந்துகொண்ட நட்பு நாடான அமெரிக்கா விமானத்தை தங்களிடம் தரும்படி கோரியது. ஆனால் இஸ்ரேல் கேட்டவுடன் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. விமானத்தை நாங்கள் தந்தால், நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று தன்னையே வளர்த்துவிட்ட அமெரிக்காவிடம் பேரம் பேசியது. அப்போதுதான் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் இஸ்ரேல் எந்தளவு சூரனாக வளர்ந்து நிற்கிறது என்ற உண்மை புலப்படலாயிற்று. அதன் பின்னரும் இஸ்ரேலின் பலம் பல மடங்குகளாக இன்னும் ஓங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதை மொஸாட் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது.

இதுபோன்ற மொஸாட்டின் முக்கிய பல இரகசியத் திட்டங்களையும் அது நிறைவேறிய செயல் வடிவங்களையும் சுவாரசியத்தோடு `மொஸாட்` என்ற இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். இதில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஆதாரபூர்வமாகக் கசிந்தவைகளும், இஸ்ரேல் தங்கள் வாயால் ஆம் நாம்தான் செய்தோம் என்று ஏற்றுக்கொண்டவைகளும் மாத்திரமே. இவை தவிர இன்னும் எத்தனையோ இரகசியங்களும் அயோக்கியத்தனங்களும் வெளிவராமல் இருக்கலாம் என்பதே நிதர்சனம். இந்நூல் அதிக விபரிப்புக்கள் இல்லாமல் மிக எளிய மொழி நடையிலேயே எழுதப்பட்டிருப்பதால், நூல் ஆர்வலர்கள் மாத்திரமன்றி சாதாரணமானவர்களும் விரும்பிப் படிக்கக்கூடியதாய் இருக்கிறது. உலக அரசியலில் ஆர்வம் கொண்வர்களுக்கும், விறுவிறுப்பான துப்பறியும் கதையார்வம் கொண்டவர்களுக்கும் இந்நூல் சிறந்த பரிந்துரை.

முற்றும்.


No comments:

Post a Comment