April 17, 2020

ஒரு கொலையும் பெரும் நிம்மதியும்














வன் வெறித்தனமாக தான் படுத்திருந்த காங்கிரீட் தரையின் மீது மூன்று முறை தன் கையை மடித்து ஓங்கி இடித்தான். அவனுக்கு வலி தெரியவில்லை. அவனின் கண்கள் ஒரு வேட்டைப் புலியின் கண்களைப்போல, அறையின் மேல் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அவனின் தாகம் அடங்க வழி தெரியவில்லை. அறை முழுவதும் நிறைந்து கிடந்த சிகரெட் பஞ்சுகள் காற்றில் அங்குமிங்கும் உருண்டு அவனை இன்னும் வெறிகொள்ள வைத்தது. நேற்றுவரை அவனுக்குப் பதற்றமும் நடுக்கமுமாய் இருந்தது. ஆனால், இன்று காட்டுமிராண்டித்தனமான கோவம் பீறிட்டுக்கொண்டிருந்தது. நாள் பொழுது மறந்து அவன் அந்த அறைக்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தான். அவன் ஒரு எழுத்தாளன் என்பதைக்கூட மறந்து, இப்போது ஒரு மனநோயாளிபோலவும், சில நேரங்களில் வெறிபிடித்த இராட்சச விலங்குபோலவும் அந்த அறையிலேயே உறுமத்தொடங்கினான். அவனின் வெறி, ஏக்கம், கோபம் எல்லாமே ஒரு துண்டு சிகரெட்டுக்காகத்தான்.

அவனின் பெயர் ரட்சகன். சொந்தப் பெயரல்ல, தானாகச் சூட்டிக்கொண்ட புனைப்பெயர்தான். அவன் ஒரு இலக்கியவாதியும் புகழ்பெற்ற எழுத்தாளனும் கூட. மூன்று மாதங்களுக்கு முன் வெளிவந்த அவனது முதலாவது நாவலான `இரத்தம் பருகும் கத்தி` வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அவனுக்குத் தன் முதல் நாவல் மூலமே புகழின் உச்ச இன்பம் தாராளமாய்க் கிடைத்தது. அது ஒரு கொலைகாரனின் கத்தியை மையமாகக் கொண்ட நாவல். மிக விறுவிறுப்போடு நகர்ந்து செல்லும் அந்தக் கதை நெடுங்கிலும் இரத்த வாடை நிறைந்திருக்கும். அவனுக்கு அப்படியான மிக விறுவிறுப்பான கதைகளை எழுதுவதிலும் படிப்பதிலும் அலாதி இன்பம். ஆனால், அவன் எதை எழுதுவதாகயிருந்தாலும், படிப்பதாகயிருந்தாலும், அவனால் தனியாக அவற்றைச் செய்துவிட முடியாது. உலகின் அநேக எழுத்தாளர்களைப் போல அவனுக்கும் சிகரெட் என்ற அந்தத் துணை அவசியமாகவிருந்தது.

ஆம், சிகரெட்டே தான்! அவனுக்கு ஒரு நாள் ஆரம்பிப்பதும் முடிவதும் அந்த சிகரெட் புகையோடுதான். `இரத்தம் பருகும் கத்தி` நாவலை எழுதி முடிக்கும் போது கிட்டத்தட்ட அவன் நானூறுக்கு மேற்பட்ட சிகரெட்டுக்களை ஊதித் தள்ளியிருந்தான். எழுதிக் கொண்டிருக்கும் போது கதையில் எங்கேனும் தொய்வு வருகிறது என்று எண்ணினால், உடனே ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துப் பற்ற வைத்துவிட்டு, இரண்டு விரல்களுக்கிடையில் அதை இடுக்கிக்கொண்டு, கண்களைப் பாதி மூடியவாறு, கதையை எண்ணிக்கொண்டு, நீளமாக ஒரு தடவை ஆத்மார்த்தமாக புகையை உள்ளிழுப்பான். அடுத்த சில நிமிடங்களில் அவன் கண்கள் பளிச்சென்று ஒளிரத் தொடங்கும். அதன் பின்னர் கை வேகமாகக் காகிதங்களின் மீது இயங்கத்தொடங்கும். அவனின் கற்பனைக் காட்டாறு, அந்தச் சிகரெட் இழுவையில் கரைபுரண்டோடும் சுகத்தையும், இரகசியத்தையும் அவன் நன்கு அறிந்திருந்தான். அதனால் அவன் ஒரு சிகரெட் பிரியன் என்ற நிலையைக் கடந்து, சிகரெட் பித்தன் என்ற நிலையை அடைந்திருந்தான்.

ஆனால், இப்போது நிலைமை மிக மோசமாகவிருந்தது. அவன் சிகரெட் புகைத்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. கொரோனா என்ற வைரஸ் மரணத்தொற்று ஊர் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது. அரசு நாடு முழுவதையும் வீடுகளுக்குள் முடக்கியிருந்தது. கடைகள் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. தெருவில் நடக்கும் கால்கள் போலீஸின் இரும்புத் தடிகளுக்குப் பதில் கூறவேண்டியிருந்தது. அது பத்தொன்பதாம் நாள், பொழுதுசாயும் வேளை. அவனுக்கு சிகரெட் கிடைப்பதற்கு எந்த வழிகளும் இல்லாதிருந்தது. முதல் இரண்டு நாட்களை தன்னிடமிருந்த பாதிப் பெட்டி சிகரெட்டுக்களுடன் கழித்தான். அடுத்த இரண்டு நாட்களை அறையில் குவிந்து கிடந்த மிகுதித் துண்டுச் சிகரெட்டுக்களைப் பொறுக்கியெடுத்து, அதை புகைக்க முயன்று கழித்தான். அதுவும் தீர்ந்த பிற்பாடு, அவனுக்கு நாதியற்றுப் போனது. சிகரெட் இல்லாமல் முதலில் சோர்ந்து போனான், பின் சத்தமில்லாமல் அழுதுகொண்டான், பின்னர் நெஞ்சு படபடப்பதைக் கண்டு இறந்துவிடப்போகிறோம் என்று மகிழ்ந்தான். அவனுக்கு சிகரெட் இல்லாத ஒரு சபிக்கப்பட்ட உலகத்தை விட இறந்துவிடுதல் ஆறுதலானதாகத் தோன்றியது. இப்போது, எல்லா நிலையையும் கடந்து வெறி பிடித்தவன் போல் ஆகிவிட்டான். சிகரெட்டுக்காக, தான் குடியிருக்கும் எட்டு மாடிக் குடியிருப்பின் உச்சியிலிருந்து குதிக்கக் கூடத் தயாராகவிருந்தான்.

அவன் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இரண்டாவது நாவல் இறுதி அத்தியாயங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், சிகரெட் இல்லாத காரணத்தால் அவனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. சிகரெட் கிடைக்கவில்லையென்பதைக் காட்டிலும், தன் கதை இடை நடுவில் திக்கற்று நிற்பது அவனை இன்னும் வெறிகொள்ள வைத்தது. இதுவும் ஒரு விறுவிறுப்பான நாவல் தான். பல உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கிற ராஜேஸ் என்கிற ஒருவன் பற்றிய நாவல். நாவலுக்கு இன்னும் அவன் பெயர் வைக்கவில்லை. இந்த நாவலை எழுதத் துவங்கிய ஆரம்ப நாட்களில், தாராளமாய்ச் சிகரெட் கிடைத்தது. ஆகையினால், அவனின் கற்பனைகள் எழுத்துக்களாகத் துள்ளி விளையாடின. ஆனால், அப்போதும்கூட சில இடையூறுகள் இருக்கத்தான் செய்தன.

அந்த இடையூறுகளுக்குக் காரணமானவள் யாமினி. தான் கணவனுக்கு இணங்காத பெண் என்பதை அவள் அடிக்கடி தன் செயல்களால் நிரூபித்துக்கொள்வாள். அவளின் நடத்தை மீது, அவன் எப்போதும் சந்தேக அலையை உருவாக்கிக்கொண்டேயிருந்தான். அவனுக்கு அவளைப் பிடிக்காவிட்டாலும், வேறு வழியில்லாததால் அவளை சகித்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அவளால் இடைஞ்சல்கள் எதுவும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால், அந்த எண்ணம் பல நாட்கள் தொடர்ந்து நீடிக்கவில்லை. சிகரெட் இல்லை என்ற காரணத்தால், எப்போது தன் நாளாந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் தடுமாறத் தொடங்கினானோ, அப்போதே யாமினியால் அவனின் நிம்மதி குலையத் தொடங்கிவிட்டது. இப்போது அவன் யாமினி பற்றி அதிகமாக சிந்திக்கத் தொடங்கியிருந்தான். அவளின் நடத்தையும், குணங்களும் அவள் ஒரு மோசமான பெண்தான் என்பதை தெளிவாக விளக்கியது. அந்த எண்ணம் அவனைப் பலவாறு தொந்தரவு செய்தது. பல நேரங்களில் அவன் அவள் பற்றிய எண்ணங்களை அடக்க முயன்றான். ஆனால், அடக்க முயல்கிற போதுதான், அதன் தொந்தரவு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இப்படி ஒருத்தி இல்லாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்குமோ என்று அடிக்கடி எண்ணிக்கொண்டான். சில நேரங்களில் இவளைக் கொலை செய்துவிடலாமா என்று கூட எண்ணினான்.

யாமினிக்குப் பல ஆண் நண்பர்கள் இருந்தாலும், உண்மையில் அவள் நடத்தையில் குளறுபடியுள்ளவள்தானா என்பது இதுவரை அவன்கூட உறுதி செய்யாத ஒன்றுதான். எது எப்படியிருந்தாலும், இப்போது அவள் பற்றிய நச்சரிக்கும் எண்ணங்கள் அவனுக்கு பெருந்தொல்லையாக மாறியிருந்தது. சிகரெட் கிடைக்காததனால், இன்று வெறி பிடித்தவன் போல ஆகியிருந்த அவனுக்கு, அவளின் மீது காட்டுமிராண்டித்தனமான கோபம் வந்தது. அவளை என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கிக்கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கே நன்கு தெரிந்திருந்தது, சிகரெட் இல்லாமல் தன்னால் அதற்குக் கூட ஒரு முடிவு கண்டுவிட முடியாது என்று.  ஆகமொத்தத்தில், சிகரெட்தான் அவனின் மொத்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்று புரிந்து கொண்டான். சிகரெட் மட்டும் கிடைத்துவிட்டால், யாமினிப் பிசாசுக்கு மட்டுமல்ல, தன் மொத்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணினான். ஆகவே, துணிந்து முடிவெடுத்தான்.

இன்று போலீஸிடம் அடிவாங்கினாலும் பரவாயில்லை என்று எண்ணியபடி, எங்காவது தேடி சிகரெட் வாங்கிவிட வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறினான். அப்போதுதான் மெல்லிய இருள் படியத் தொடங்கியிருந்தது. சூரியக் கரங்களின் நகக்கீறல் பட்டு கீழ்வானம் சற்றுச் சிவந்திருந்தது. ஆள் நடமாட்டமற்ற அந்த மாநகரில், மனம் போன திக்குகளில் நடக்கத் தொடங்கினான். கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. பிரதான கடைத் தெருக்களை விட்டுவிட்டு, குறுக்குத் தெருக்களில் நடக்கத் தொடங்கினான், ஏதேனும் சிறிய பெட்டிக் கடையாவது கண்ணில் படாதா என்று. அவன் நினைத்தது போல ஒரு சிறிய கடை கண்களில் பட்டது. ஆனால், அதுவும் பூட்டப்பட்டுத்தான் இருந்தது. இருந்தபோதும், அது தனிக்கடையாக இல்லாமல், ஒரு வீட்டோடு சேர்ந்த கடையாக இருந்தமை கொஞ்சம் நம்பிக்கையைத் தந்தது. ஆர்வத்தோடு வீட்டுக் கதவைத் தட்டினான். கிழவி ஒருத்தி ஜன்னலைத் திறந்து

“யாரு?“

“அம்மா, கடை திறக்கலையா?“

“கடை திறக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறது தெரியாதா? என்ன வேணும்?“

“அம்மா, சிகரெட் பெட்டி ரெண்டு தாங்க. இல்ல.. இல்ல… இருக்கிறது மொத்தத்தையும் தாங்க. எத்தனை இருக்குன்னு பாருங்க.”

“இரு.. பாக்கிறேன்.“

“ம்..“

“சிகரெட் எதுவும் இல்ல. இந்தப் பீடிதான் இருக்கு.“

என்று கூறியவாறு ஒரு கட்டு பீடியை ஜன்னலினூடாக நீட்டினாள் அவள். அவன் அதை வாங்கி அவளின் முகத்தில் ஓங்கி எறிந்துவிட்டு

”போடி! கூறு கெட்ட கிழவி“

என்று உரக்கக் கத்திவிட்டு நடக்கத் தொடங்கினான். அவள் அதிர்ச்சி கலையாமல் நின்றிருந்தாள். இதைப் பார்த்துக்கொண்டு வீதியோரம் படுத்திருந்த பிச்சைக்காரன் ஒருவன் சத்தமிட்டான்

”டேய்”

அவன் திரும்பிப் பார்த்தான். ஆனால் பதில் கூறவில்லை. பிச்சைக்காரன் மீண்டும்

“டேய்! சிகரெட் வேணுமா?“

“இருக்கா?“

“இருக்கு. காசு குடுப்பியா?“

“குடுக்கிறேன்”

பிச்சைக்காரன் தன் அழுக்குப் பைக்குள் கை விட்டுத் துலாவி, இரண்டு சிகரெட்டுக்களை எடுத்து நீட்டினான். சற்று அழுக்குப் பட்டிருந்தாலும் அது நல்ல நிலையில் தான் இருந்தது. இரண்டையும் வாங்கிக்கொண்டு, தன் பாக்கெட்டுக்குள் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து பிச்சைக்காரனின் கைகளில் கொடுத்து “வச்சிக்க” என்றான்.

பிச்சைக்காரனுக்கு சந்தோசம் தாளவில்லை. உடனே தன் அழுக்குப் பையிலிருந்து தீப்பெட்டியை எடுத்து ரட்சகனின் வாயில் இருந்த சிகரெட்டைப் பற்ற வைத்தான். ரட்சகன் தன் கண்களை பாதி மூடிக்கொண்டு, புகையை மெல்ல உள்ளிழுத்தான். ஆகா! தான் மீண்டும் பிறந்துவிட்டது போலிருந்தது அவனுக்கு.  மெல்ல மெல்ல ஒவ்வொரு இழுவையையும் இரசித்து இரசித்து உள்ளிழுத்தான். அவனின் ஆன்மா ஆசுவாசப்பட்டதுபோலிருந்தது. புகைவிட்டவாறே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போதுதான் யாமினியின் நினைப்பு வந்தது. அவளின் நச்சரிப்புக்கு ஒரு முடிவுகட்டியாகவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, கண்களைப் பாதி மூடி புகையை மெல்ல உள்ளிழுத்தான். மூன்றாவது இழுவையில் அவன் தீர்மானித்துவிட்டான், அவளை என்ன செய்வதென்று. இனியும் பொறுத்திருக்க வேண்டாம். அவளை கொலை செய்துவிடுவதுதான் சரி. அவளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

கொலை செய்வது என்று தீர்மானித்த பின், அவனுக்கு தாமதிக்க விருப்பமில்லை. வீட்டை வந்து சேர்ந்ததும், நேராக தன் அறைக்குள் நுழைந்தவன், இரண்டாவது சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். அந்த நடத்தைகெட்ட பிசாசினைக் கொலை செய்வது என்பதே, அவனுக்குக் கிளர்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு தடவை புகையை நன்கு உள்ளிழுத்து விட்டான். அந்தப் போதை கலையும் முன்பு

”தன் மனைவி யாமினியின் மீது, சந்தேகம் வலுத்த ராஜேஸ், அவளை கத்தியால் மூன்று முறை குத்திக் கொன்றான்.” என்று தன் நாவலின் கதையை, தொடர்ந்து எழுதத் தொடங்கினான்.

இப்போதுதான் ரட்சகனுக்கு பெரும் நிம்மதியாகவிருந்தது. யாமினி என்ற கதாபாத்திரத்தை அந்த அத்தியாயத்தோடு குழிதோண்டிப் புதைத்து விட்டு, அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்காக காகிதத்தை அடுத்த பக்கம் புரட்டினான்.

முற்றும்.


No comments:

Post a Comment