April 3, 2020

மண்ட பத்திரம்!














கொரோனா அல்லது கொவிட் 19 இன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிற நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு சட்டத்தினையும் பல்வேறு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளையும் கடுமையாக பின்பற்றி வருகின்றன. இந் நிலையில் வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருக்க வேண்டிய இந்த நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த சமூக ஊடகப் பயன்பாட்டினுடைய அதிகரிப்பு என்பது சாதாரண நிலையை விட பத்து மடங்குகள் கூடுதலானது என்று கூறப்படுகிறது.

டிஜிட்டல் உலகின் இயக்கிகளாக இருக்கின்ற இந்த சமூக ஊடகங்களானவை பௌதீக ரீதியாக தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்ற மக்களை சமூக ரீதியாக தொடர்ந்தும் இணைத்தே வைத்திருப்பது எமக்கு மிகப் பெரிய ஆறுதல். இன்றைய இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மிக முக்கியமான பொழுது போக்கு அம்சமாய் ஆகியிருக்கிற சமூக ஊடகங்கள்தான், செய்திப் பரிமாற்றத்தின் மிக முக்கிய அம்சமாகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும், சில கவலையீனங்களால் மறைமுகமாகவும் படிப்படியாகவும் அவை உளவியல் ரீதியிலான சில கேடுகளையும் தோற்றுவிக்கக்கூடிய அபாயநிலை உருவாகியிருக்கிறது.

ஆமாம்! சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற அளவுக்கதிகமான கொவிட் 19 தொடர்பான தகவல்களும், பாதிப்பு மற்றும் மரணங்கள் குறித்தான செய்திகளும் தனிநபர் உள நலனில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இது வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் மற்றும் மன அழுத்தம் என்பற்றின் மூலமாக பல்வேறு உளவியல் கேடுகளையும் அதன் மூலமாக உடல்நலக் குறைவுகளையும் தோற்றுவிக்கக் கூடும் என கருதப்படுகிறது. சாதாரணமாக, சமூக ஊடகப் பயனாளிகளில் பலரும் சமூக ஊடகத்தினை இன்றைய சூழ்நிலையில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகப் பயன்படுத்தினாலும், பயனாளிகளில் ஒரு சாரார் அதனை வைரஸ் தொற்றுத் தொடர்பான செய்திப் பகிர்வு ஊடகமாகவும், அவ்வாறான செய்திகளை அறிந்து கொள்வதற்கான தளமாகவுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு நிலை காரணமாக பயனாளிகள் தங்களுக்கும், தங்களைச் சார்ந்த பிற சமூக ஊடகப் பயனாளிகளுக்கும் தங்களை அறியாமலேயே உளவியல் கேடிளைத்துக் கொண்டிருப்பதாக உளவியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன் காரணத்தினால்தான் உலக சுகாதார அமைப்பு (WHO) கொவிட் 19 தொடர்பான மன நலம் மற்றும் உளவியல் ரீதியான பரிசீலனையில் பின்வரும் மூன்று பிரதான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது.    
  • உங்களுக்கு கவலை அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளைப் பார்ப்பதனையோ, படிப்பதனையோ அல்லது கேட்பதனையோ தவிருங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள்.
  • நம்பத் தகுந்த தகவல் வளங்களிலிருந்து மாத்திரம் கொவிட் 19 தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
  • ஒரு நாளுக்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் மட்டும் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் கொவிட் 19 தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று முக்கிய அம்சங்கள் உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப்படுகின்ற அதேவேளை, முன்னணி மனநல மற்றும் உளவியல் நிபுணர்களால் மேலும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன,
  • வைரஸ் பற்றிய தகவல்களிலிருந்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் போதுமான தகவல்களை முன்பே அறிந்து வைத்திருக்கிறோம்.
  • இறப்பு எண்ணிகையினைக் கணக்கிட வேண்டாம். அவற்றில் ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள்.
  • இணையத்தில் நோய்த் தொற்றின் பாதிப்புத் தொடர்பான மேலதிக தகவல்களைத் தேடாதீர். அது உங்கள் மன நிலையை மேலும் மோசமடையச் செய்யலாம்.
  • பாதிப்புக்கள் தொடர்பான செய்திகளை பிறருக்கு அனுப்பவோ, பகிரவோ செய்யாதீர். படிப்பவர் மன வலிமையற்றவராக இருக்கலாம்.
  • முடிந்தவரையில் எதிர் மறை செய்திகளிடமிருந்து விலகி, உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள்.
  • எப்பொழுதும் உங்களில் நேர்மறை எண்ணங்களையே பேணுங்கள். அது உங்கள் நோயெதிர்ப்புத் திறனை பாதுகாக்கும். எதிர்மறை எண்ணங்கள் மனச் சோர்வுக்கு வழிசமைத்து, உங்கள் நோயெதிர்ப்புத் திறனை பலவீனப்படுத்தும்.
நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியமடைந்து சென்று கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்திற்கு அப்பால் நோய்ப் பரவல் தடுக்கப்பட்டு உலகம் வழமைக்குத் திரும்பும் என்பது அறிந்ததுவே. அவ்வாறு நிகழ்கிற போது, நாமும் இந்தக் கொடிய தொற்றுக்கு அகப்படாமல் தப்பிப் பிழைத்து உயிருடன் இருக்கிற வாய்ப்புக் கிடைக்குமேயானால், நாம் ஒரு மன நோயாளியாக இல்லாமல் இருப்பதும் அவசியமானதல்லவா.

ஆனபடியினால், மண்ட பத்திரம்!

No comments:

Post a Comment