April 5, 2020

இந்நூற்றாண்டின் மிக முக்கிய சுயசரிதை













“அவன் ஒரு உயரமான தொப்பி அணிந்திருந்தான். வாயையும் மூக்கையும் குளிர்ஜூரம் வந்தவன்போல் கைக்குட்டையால் மறைத்திருந்ததால் காண்பதற்கு ஒரு கல்லூரி மாணவனைப்போல் தோற்றமளித்தான். எங்களை நோக்கிச் சாய்ந்தபடி `இங்கு யார் மலாலா?` என்று கேட்டான். யாரும் எந்தப் பதிலும் கூறவில்லை. ஆனாலும் பல பெண்கள் என்னை நோக்கினர். அப்போதுதான் தன் கறுப்புத் துப்பாக்கியை உயர்த்தினான். பின்பு அது கோல்ட் 45 வகையைச் சேர்ந்தது என்று தெரிந்து கொண்டேன். பெண்கள் அலறினார்கள். அவள் கையை நான் இறுகப் பற்றிக் கொண்டதாக மோனிபா கூறினாள். அவன் அடுத்தடுத்து மூன்று முறை சுட்டதாக தோழிகள் கூறினார்கள். முதலாவது என் இடது கண் அருகே பாய்ந்து இடது தோளிற்கு சென்றது. இடது காதிலிருந்து ரத்தம் வழிய மோனிபாவின் மேல் மயங்கிச் சாய்ந்துவிட்டேன். அதனால் அடுத்தடுத்த குண்டுகள் அருகில் இருந்தவர்களின் மேல் பாய்ந்தது.

சுடும்போது அவனுடைய கை நடுங்கிக்கொண்டிருந்தது என்று தோழிகள் பின்னர் கூறினர். மருத்துவமனையை அடைவதற்குள் என் நீண்ட முடியும், மோனிபாவின் மடியும் ஒரே இரத்தமாக இருந்தது.
யார் மலாலா? நான் தான் மலாலா. இதுதான் என் கதை.“

இப்படி ஆரம்பிக்கிறது அந்தச் சுயசரிதை.

நூல் விமர்சனம் - `நான் மலாலா`

பாகிஸ்தானில் அபிவிருத்தியில் மிகப் பின்தங்கிய இடங்களில் ஒன்றான ஸ்வார்ட் பள்ளத்தாக்கில், ஆண் குழந்தை பிறந்தால் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டாடியும், பெண் குழந்தையாக இருந்தால் திரைக்குப் பின்னே ஒளித்தும் வைக்கின்ற ஒரு பிற்போக்கு சமூகத்தில் பெண்ணாகப் பிறக்கிறாள் மலாலா. தான் பிறந்த சமூகம் மிகப் பிற்போக்கானது என்றாலும், தன் பாசமான தந்தையின் அபரிமிதமான அன்பினால் ஒரு பிற்போக்கு சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கின்ற உரிமைகளை தானும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதாக இந்நூலில் பதிவுசெய்திருக்கிறாள் மலாலா.

ஆனாலும் அந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்வது அவளுக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களை குடும்பத்தின் மிக மோசமான வறுமையில் கழித்த அவளுக்கு, மிகுதிக் காலகட்டங்களை தீவிரவாதத்திற்கு நடுவே கழிக்க வேண்டியிருந்தது. ஸ்வார்ட் பள்ளத்தாக்கில் தலிபான் தீவிரவாத சக்திகளின் கைகள் ஓங்கிய போது, அவள் பத்து வயது சிறுமியாக இருந்தாள். மிகவும் பிற்போக்குவாத தீவிரவாத அமைப்பான தலிபான்கள் தங்களை மதச் சீர்திருத்தவாதிகளாக காட்டிக்கொண்டு, மதக் கலாச்சாரச் சீராக்கல் என்ற பெயரில் பல கட்டுப்பாடுகளை அப்பகுதி மக்களுக்கு விதித்தனர். மேற்கத்தேய கலாச்சாரக் கவர்சித் தடுப்பு என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதுகூட தடை செய்யப்பட்டது. வீடுகளிலிருந்த தொலைக்காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு கிராமத்தின் மத்தியில் அனைவரின் முன்னிலையிலும் எரியூட்டப்பட்டது. கடும்போக்குவாத இஸ்லாமிய சட்டங்கள் தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் மீது திணிக்கப்பட்டது. அதிகாரத்திலிருந்த பாகிஸ்தான் அரசின் சட்டதிட்டங்கள் எல்லாம், தலிபான்கள் முன் செல்லாக்காசாகவே இருந்தன. கடுமையான ஒடுக்குமுறை மற்றும் உரிமை பறிப்புகளுக்கு எதிராக குரலெழுப்பியவர்கள் பாரபட்சமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு, சடலங்கள் ஊர் மத்தியில் மக்களின் பார்வைக்காக வீசப்பட்டன.

இவ்வாறு பல நெருக்கடிகளுக்குள்ளும், தீவிரவாத அச்சுறுத்தல்களுக்குள்ளும் மலாலா நன்கு கல்வி கற்கின்ற மாணவியாகவே இருந்தாள். ஏனெலில், கல்வி கற்பது மாத்திரமே தனக்கு எப்போதும் பிடித்த ஒன்று என நூலின் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறாள் அவள். கொடிய வறுமையும், உலக வல்லரசு அமெரிக்காவுக்கே சவாலாகவும் இருந்த தலிபான் தீவிரவாத சக்தியும் பெரும் தடையாக இருந்த போதும் மலாலா கல்வியில் மிக ஆர்வமானவளாக இருந்தாள். அவள் பெரும்பாலும் வகுப்பில் முதல் நிலை மாணவியாக இருந்தாள். கல்வி மாத்திரமன்றி அவள் மிகச் சிறந்த பேச்சாளராகவும் தன்னை மெல்ல மெல்ல நிரூபித்துக் கொண்டிருந்தாள். மிகப் பெரும் அச்சுறுத்தல்களுக்கு நாளாந்தம் முகங்கொடுத்தாலும், தலிபான்களின் அந்த குறிப்பிட்ட அறிவிப்பு வரை மலாலாவின் ஒரு சிறுமிக்குண்டான வாழ்வுக்கு  பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை. ஆம், தான் எது நடக்கக் கூடாது என்று பிரார்த்தனைகள் செய்தேனோ, அது இறுதியில் நடந்தேவிட்டது என்று தன் சுயசரிதையில் பதிவிடுகிறாள் மலாலா. பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லக் கூடாது என்பதே அந்த அறிவிப்பு. பெண்கள் கல்வி கற்பது மதத்திற்கு விரோதமானது என்று பிரச்சாரம் செய்தனர் தலிபான்கள். அவர்கள் வெறும் பிரச்சாரத்துடன் நின்றுவிடவில்லை. உத்தரவை மீறி தொடர்ந்து நடாத்திச் செல்லப்பட்ட பெண்கள் பள்ளிக்கூடங்கள் தலிபான்களால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன.



ஆனால், மலாலா துவண்டுவிடவில்லை. அடக்குமுறைக்கு அடிபணியவில்லை. கல்வி கற்பது ஆண்களைப் போல, பெண்களுக்கும் சம உரிமையுடையது என்று உரக்க முழங்க ஆரம்பித்தாள். உலகின் கொடூரமான தலிபான் தீவிரவாத அமைப்பிற்கு எதிராய் எதிர்க்குரல் எழுப்பத் தொடங்கினாள். அமைதி நடைபயணங்கள் மேடைப் பேச்சுக்கள் என்று அமைதியான முறையில் தனக்கும் பிற பெண்களுக்குமான கல்வி உரிமைக்காக குரல் கொடுக்கத் தொடங்கினாள். அவளின் இந்த செயற்பாடுகளினால் நாட்டிற்குள் மெல்ல மெல்ல அனைவராலும் அறியப்படுபவளாய் ஆகிக்கொண்டிருந்தாள். உள்நாட்டு ஊடகங்கள் உட்பட பி.பி.சி செய்திச் சேவை வரை அமைதிவழி உரிமைப் போராட்டத்திற்காக செவ்வி காணப்பட்டாள். ஆனால் இந்த துணிச்சலான காரியத்தைச் செய்துகொண்டிருந்தபோது அவளுக்கு வயது பன்னிரெண்டு மட்டுமே. தன் இந்த அமைதிவழி உரிமைப் போராட்டத்திற்கு பின் இருந்து ஊக்கமளித்தவர் தன் தந்தையே என்று பதிவு செய்கிறாள் மலாலா.

இவ்வாறான செயற்பாடுகளால் பல முறை தலிபான்களால் எச்சரிக்கப்பட்ட மலாலா, ஒரு கட்டத்திற்கப்பால் தலிபான் தீவிரவாதி ஒருவனால் பள்ளிக்கூடம் சென்று திரும்பும் வழியில் சுடப்பட்டாள். தன் கல்வி உரிமைப் போராட்டத்தினால் சர்வதேசத்திற்கு ஓரளவு அறிமுகமாயிருந்த மலாலா சுடப்பட்ட செய்தி உலகம் முழுக்கப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  பலத்த காயம் மற்றும் சத்திர சிகிச்சை மூலம் மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றல் என பல மரணப் போராட்டத்திற்குள்ளான மலாலா, உலகம் முழுக்க பேசுபொருளாய் ஆகிறாள். இறுதியில், சவூதி அரசரினால் அனுப்பிவைக்கப்பட்ட சொகுசு விமானம் மூலம், அவள் பலத்த இராணுவப் பாதுகாப்புடன் ஐக்கிய இராட்சியத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகள் மூலம், ஆச்சரியமான வகையில் உயிர் பிழைத்தாள்.

அதன் பின் அவர் தன்னை முழுமையாக பெண் கல்வியுரிமைச் சமூகப் போராட்டத்தில் அர்ப்பணித்துவிட்டார். தன் அமைதியான உரிமைப் போராட்டத்திற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதன் மூலம் நோபல் பரிசு பெற்ற மிக இளம் நபராக கருதப்படுகிறார். அவர் தன் பதினாறாவது வயதில் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புவாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இன்றும் அவர் தன் பயணத்தை மலாலா ஃபண்ட் என்று தான் உருவாக்கிய சமூக அமைப்பின் மூலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பெண் கல்வி உரிமைக்காகப் போராடிய மாலாலா, ஒரு குழந்தையின் உளவியலில் இருந்து ஒரு உரிமைப் போராட்டப் பெண்ணாக மாறியது வரையான வரலாறு `நான் மலாலா` என்ற இந்தச் சுயசரிதை நூலில் நேர்த்தியோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கால கட்டத்தில் பாகிஸ்த்தானின் அரசில் பின்னணி மற்றும் தலிபான் தீவிரவாதப் போராட்டங்களின் பின்னணி ஆகியவற்றின் தகவல்கள் என்பனவும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும், மலாலா தன் பதினாறாவது வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. மலாலா மற்றும் கிறிஸ்டினா லாம்ப் ஆகியோர் இணைந்து எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த ‘I AM MALALA’ என்ற நூலை மிக நேர்த்தியான மொழிநடையோடு `நான் மலாலா` என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பத்மஜா நாராயணன்.

பெண்கள் கல்வி என்ற ஞாயமான உரிமைக்காகப் போராடி, அதற்கு வெகுமதியாக மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மலாலாவின் வரலாறு என்பது இந்த நூற்றாண்டின் மிக முக்கிய சுயசரிதை. அவரின் கல்வி உரிமைப் போராட்டத்தின் கதை அனைத்துப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்திலும் அவசியம் புகுத்தப்பட வேண்டியது. அதன் மூலம் கல்வி உரிமை தொடர்பான விழிப்புணர்வும், அதன் பெறுமதியும் எம் அடுத்த தலைமுறைக்கு சரியான வகையில் ஊட்டப்பட வேண்டும்.

No comments:

Post a Comment