April 24, 2020

‘Tom & Jerry’ பற்றி உங்களுக்குத் தெரியாத 6 உண்மைகள்

Image source: wallpaperaccess.com













எம்மில் பலரது குழந்தைப் பருவமானது `டாம்` மற்றும் `ஜெர்ரி` என்ற அற்புதமான இரு கதாபாத்திரங்களால்தான் அதிகம் சுவாரஸியமாக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. அவர்களின் சேட்டைகளும் குறும்புகளும் சிறுவர்களை மட்டுமா இரசிக்க வைத்தது? நிச்சயமாக இல்லை. பெரியவர்களைக்கூட வயது வரம்பின்றி இரசிக்க வைத்தது. இன்றும் இரசிக்கவும் சிரிக்கவும் வைத்துக்கொண்டேதான் இருக்கிறது. காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற, உலகையே மழலைகள் போல் ஆக்கிய அற்புதமான கார்ட்டூன் படைப்பான `டாம் அண்ட் ஜெர்ரி` (Tom & Jerry) பற்றி நம்மில் பலரால் அறியப்படாத அந்த 6 உண்மைகளை, ஒரு நல்ல இரசிகனாக உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் உவகையடைகிறேன். மனங்கவர்ந்த படைப்புக்களையும், கதாபாத்திரங்களையும் கொண்டாடித் தீர்ப்பதைத் தவிர எம் போன்ற இரசிகர்களுக்கு வேறு என்ன இன்பம் இருந்துவிட முடியும்.


1. உலகப்புகழ் பெற்ற `டாம் அண்ட் ஜெர்ரி` கார்ட்டூன் தொடரை உருவாக்கியவர் எம்மில் பலர் நினைப்பது போல் `ஜீன் டீச்` (Gene Deitch) என்பவர் கிடையாது!
Image source: warnerbros.com
1940 ஆம் வருடம் வில்லியம் ஹன்னா (William Hanna) மற்றும் ஜோசப் பார்பெரா (Joseph Barbera) ஆகிய இருவர் சேர்ந்து உருவாக்கிய கார்ட்டூன் படைப்பே இந்த டாம் அண்ட் ஜெர்ரி ஆகும். இவர்கள் 1940 ஆம் வருடம் முதல் 1958 வரை மொத்தமாக 114 அத்தியாயங்களை இந்த டாம் அண்ட் ஜெர்ரியில் இயக்கியிருக்கிறார்கள். இவர்கள் டாம் அண்ட் ஜெர்ரி மட்டுமல்லாமல் புகழ்பெற்ற இன்னும் பல படைப்புக்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் தங்கள் புதிய கார்ட்டூன் படைப்பிற்கு பூனை, எலி என்ற கருப்பொருளை தம் நிறுவனமான `MGM கார்ட்டூன் ஸ்டூடியோ` வில் முன்மொழிந்தபோது, அவர்களுடன் பணியாற்றிய பல சக ஊழியர்கள் அதை மிகவும் பழைய, வழமையான கருப்பொருள் என்று கூறி நிராகரித்தார்கள். ஆனால், ஹன்னா மற்றும் பார்பெரா தங்களின் கருப்பொருளிலும், தங்களின் கற்பனையிலும் நம்பிக்கை கொண்டு, தாங்கள் விரும்பிய பூனை, எலி கருப்பொருளை கார்ட்டூனாக வடிவமைத்தார்கள். அவர்கள் எண்ணியது போலவே, அது திரையரங்குகளில் தொடர்ச்சியாக திரையிடப்பட்ட போது இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றதுமட்டுமல்லாமல், சிறந்த குறுகிய கருப்பொருளுக்கான கார்ட்டூன் என்ற அடிப்படையில் அகாடமி விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அன்று முதல் அவர்களின் படைப்பின் புகழ் பட்டித்தொட்டியெங்கும் பரவத்தொடங்கிவிட்டது.

இதில் மற்றுமொரு சுவாரஸியமான விடயம் என்னவென்றால், 1958 ஆம் வருடத்துடன் டாம் அண்ட் ஜெர்ரியின் இயக்கம் நின்றுவிடவில்லை. ஆரம்பகர்த்தாக்களான ஹன்னா மற்றும் பார்பெரா ஆகியோருக்குப் பின்னர் 1961 ஆம் ஆண்டு ஜீன் டீச் (Gene Deitch) என்பவரால் மேலும் 13 அத்தியாயங்கள் டாம் அண்ட் ஜெர்ரியில் இயக்கப்பட்டன. ஆம் நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியானது. இந்த ஜீன் டீச் என்பவர்தான் கடந்த வாரம் (16.04.2020) தன் 95 ஆவது வயதில் காலமானவர். இணையவாசிகள் பலரும் இவர்தான் டாம் அண்ட் ஜெர்ரியின் ஆரம்பகர்த்தா என்பது போல சமூக ஊடகங்கள் முழுக்க அனுதாபங்களை தாராளமாக அள்ளி வீசியிருந்தார்கள். ஜீன் டீச் என்பவர் டாம் அண்ட் ஜெர்ரியை உருவாக்கியவரல்ல என்ற உண்மை ஒரு புறமிருக்க, இதில் துர்ப்பாக்கியமான மற்றொரு விடயம் என்னவென்றால், ஜீன் டீச் என்பவரால் இயக்கப்பட்ட அத்தியாயங்கள்தான் டாம் அண்ட் ஜெர்ரியின் அத்தியாயங்களிலேயே மோசமான அத்தியாயங்களாகக் கருதப்படுகின்றன.

ஜீன் டீச் இற்குப் பின்னர் சக் ஜோன்ஸ் (Chuck Jones) என்பவர் 1963 ஆம் வருடம் முதல் 1967 ஆம் வருடம் வரை 34 அத்தியாயங்களை இயக்கினார். அதன் பிற்பாடு, 2001 ஆம் வருடம் "தி மேன்ஷன் கேட்" என்று அழைக்கப்படும் தொலைக்காட்சிக்காக கார்ல் டோர்கே (Karl Toerge) என்பவரால் ஒரு குறும்படம் இயக்கி வெளியிடப்பட்டதுடன், டாம் அண்ட் ஜெர்ரியின் இறுதி அத்தியாயமானது 2005 ஆம் வருடம் ஜோசப் பார்பெரா மற்றும் ஸ்பைக் பிராண்ட் (Joseph Barbera and Spike Brandt) ஆகியோரால் இயக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


2. டாம் மற்றும் ஜெர்ரியின் ஆரம்பகாலப் பெயர் ஜாஸ்பர் (Jasper) மற்றும் ஜிங்க்ஸ் (Jinx) என்பதாகும்.
Image source: timesofisrael.com
டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரானது ஆரம்பத்தில் அந்தப் பெயரில் வெளியிடப்படவில்லை. ஆரம்ப அத்தியாயங்கள் `Puss Gets the Boot` என்ற பெயரிலேயே அதன் இயக்குனர்களான ஹன்னா மற்றும் பார்பெரா ஆகியோரால் வெளியிடப்பட்டது. அந்த அத்தியாயங்களில் பூனை டாம் இன் பெயர் `ஜாஸ்பர்` என்பதாகவும் எலி ஜெர்ரியின் பெயர் `ஜிங்க்ஸ்` என்பதாகவுமே பெயரிடப்பட்டிருந்தது. எனினும் அந்தக் கார்ட்டூன் தொடரின் தொடர்ந்தேர்ச்சியான வெற்றிக்குப் பின்னர், அந்த இரு கதாபாத்திரங்களினதும் பெயர்களை மாற்ற விரும்பிய அதன் இயக்குனர்களான ஹன்னா மற்றும் பார்பெரா ஆகியோர், தங்கள் நிறுவனத்திற்குள் ஒரு உள்ளக போட்டியை நடாத்தினர். அந்தப் போட்டியில் ஜான் கார் என்ற ஒருவரால் முன் மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயரே டாம் மற்றும் ஜெர்ரி (Tom & Jerry) என்பதாகும். வெற்றியாளரான அவருக்கு பரிசாக அன்றைய நாளில் ஐம்பது டாலர்கள் வழங்கப்பட்டது. கதாபாத்திரங்களுக்கு வழங்கப்பட்ட இந்த டாம் மற்றும் ஜெர்ரி என்ற பெயரே, பின்னர் கார்ட்டூன் தொடரின் பெயராகவும் மாற்றப்பட்டது.


3. டாம் இன் உரிமையாளரான பெண்மணியின் முகம் ஒரேயொரு அத்தியாயத்தில் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது.
Image source: wikipedia.org
டாம் இன் உரிமையாளராகக் காட்டப்படுகிற பெண்மணியின் கால்கள் மட்டுமே தொடர் முழுக்கக் காட்டப்பட்டாலும், 1950 ஆம் வருடம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட அத்தியாயத்தில் மாத்திரம், அவரின் முகமும் முழு உருவமும் சில விநாடிகளுக்கு மாத்திரம் காட்டப்பட்டது. இந்தப் பெண்மணி ஒரு கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்போல காட்டப்பட்டதனாலும், அவரின் உச்சரிப்புகள் கறுப்பு இனத்தவர் போல இருந்ததனாலும், சிலரால் அது இனவெறி என்று விமர்சிக்கப்பட்டதனால், அது ஒரு மெல்லிய வெள்ளை இனப் பெண்மணியாக பின்னைய அத்தியாயங்களில் மாற்றியமைக்கப்பட்டது.


4. ஆரம்ப அத்தியாயங்களில் டாம் ஒரு நான்கு கால்களில் நடக்கக்கூடிய சாதாரண பூனை போல காட்டப்பட்டு, பின்னர் இரண்டு கால்களில் நடக்கும் கதாபாத்திரமாக மாற்றியமைக்கப்பட்டது.
Image source: lolwot.com
டாம் கதாபாத்திரமானது ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு உண்மையான பூனையின் தோற்றத்திலேயே வடிவமைக்கப்பட்டது. அது நான்கு கால்களில் நடக்கின்ற பூனையாகவே காட்டப்பட்டதுடன், அது தடிமனான உரோமங்களையும், பல முகச் சுருக்கங்களையும், புருவங்களையும் கொண்டிருந்தது. 1940 ஆம் வருடத்தின் இறுதிக் காலப்பகுதிகளில்தான் டாம் கதாபாத்திரத்தில் முதலில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், தொடர் நெடுங்கிலும் டாம் கதாபாத்திரத்தில் ஆங்காங்கே மாற்றங்கள் செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதில் சுவாரஸியமான விடயம் என்னவென்றால், ஜெர்ரி கதாபாத்திரமானது பெரும்பாலும் ஆரம்பத்தில் இருந்தது போலவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது.


5. டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனானது ஏழு ஆஸ்க்கார் விருதுகளை வென்றிருப்பதுடன், மேலும் ஆறு ஆஸ்க்கார் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுமிருந்தது.
Image source: wikipedia.org
திரைக்கு வந்தது முதற்கொண்டு இன்றுவரை உலக மக்களால் கொண்டாடப்படுகின்ற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரானது 1943 முதற்கொண்டு 1953 ஆம் வருடம் வரையான காலப்பகுதிகளில் வெளியான அத்தியாயங்களுக்காக ஏழு ஆஸ்க்கார் விருதுகளை அள்ளிக் குவித்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரினை 1940 முதல் 2005 ஆம் வருடம் வரை பல்வேறுபட்டவர்கள் இயக்கியிருந்தாலும், அதன் ஆரம்பகர்த்தாக்களான ஹன்னா மற்றும் பார்பெரா ஆகியவர்களால் இயக்கப்பட்ட அத்தியாயங்கள் மாத்திரமே ஆஸ்க்கார் விருதுகளை வென்றிருக்கின்றன.


6. டாம் அண்ட் ஜெர்ரிக்கு இப்போது வயது 80!
Image source: pinterest.com
ஆம்! 1940 ஆம் வருடம் உருவாக்கப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதியுடன் எண்பது வயதுகள் பூர்த்தியாகிவிட்டது. இனி நாம் அவர்களை டாம் தாத்தா, ஜெர்ரி தாத்தா என்று மரியாதையுடன் அழைப்போமாக!

- இந்தப் பதிவு உங்களைக் கவர்ந்திருந்தால், கீழேயுள்ள பட்டன்களைப் (Button) பயன்படுத்தி, Like மற்றும்`Share` செய்யுங்கள்.

- Tom & Jerry` தொடர்பான உங்களின் சுவாரசியமான அனுபவங்களை Comment மூலமாக எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.