April 9, 2020

நீங்காத் தொற்று














நாடு வழமைக்குத் திரும்பியிருந்தது. நாடு மட்டுமல்ல உலகமும் தான். ஆனால் முன்பை விட அனைத்தும் கொஞ்சம் அமைதியாக இருப்பதாகவே தோன்றியது. கொவிட் 19 என்ற கோரத் தாண்டவம் உலகை இப்போதுதான் அதன் கோரப்பிடியிலிருந்து மெல்ல மெல்ல விடுவித்துக் கொண்டிருந்தது. உலக வல்லரசுகளின் ஆணவங்கள் பிணங்களை கணக்கிட்டுக் கொண்டிருந்தன. உலக மயமாக்கலில் பெரிய பங்களிப்பைச் செய்திடாத சின்னஞ் சிறிய நாடுகள் மாத்திரம் ஆங்காங்கே தப்பிப் பிழைத்திருந்தன. ஆனாலும், அவற்றின் பொருளாதாரம் நோய்த் தொற்றினால் இறந்த பிணங்களைக் காட்டிலும் அதிகமாகத் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தன.

நீலன் காலை ஏழு மணிக்கே தயாராகி வாரச் சந்தையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். வழக்கமான நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தைக்குச் செல்வது அவனுக்கு பாவற்காய் உண்பதுபோல ஒன்று. வாரத்தின் ஒரே ஒரு விடுமுறை நாளை சந்தையின் இரைச்சலில் தொலைத்து விடுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. ஆனால், இப்போது நிலமை தலைகீழாக மாறியிருந்தது. வெளியில் செல்வதையும், சுதந்திரமாக நடமாடுவதையும் அதிகம் விரும்புபவனாக மாறியிருந்தான். கொடிய கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரண வாசலிலிருந்து உயிர் பிழைத்து, முழுமையாகக் குணமானவனுக்கு சுதந்திர நடமாட்டத்தின் அருமை அப்போது தான் புரிந்திருந்தது. மூன்று மாதங்களாக சிகிச்சைக்காகவும் தனிமைப்படுத்தலுக்காகவும் நான்கு சுவருக்குள் அடைந்தே கிடந்தவனின் மனப்போராட்டம் இப்போது தான் ஆசுவாசப்பட்டிருந்தது.

ஆனாலும் அந்தச் சுதந்திரம் அவனுக்கு முழுமையானதாகத் தோன்றவில்லை. நேற்று பள்ளி சென்றிருந்த அவனின் ஒரேயொரு செல்ல மகள் அன்பினா அழுது கொண்டே வீடு திரும்பினாள். ஏன் என்று கேட்டதற்கு, நோய்த் தொற்றுக்குள்ளானவனின் மகள் என்பதால் தன் வகுப்பில் அனைவரும் தன்னிடம் பேச மறுப்பதாகச் சொன்னாள். தன் வகுப்பாசிரியர்கூட தூரமாக நின்று தன்னிடம் பேசும்படி கூறியதாகச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அது அவர்களின் ஒரு வித பயம்தான் என்றாலும், ஒரு பத்து வயதுப் பிஞ்சுக் குழந்தையிடம் இதைவிட வேறு எதனை மனதில் நஞ்சாக ஊட்டிவிட முடியும் இந்த சமூகத்தினால் என்று ஆதங்கப்பட்டான். இவை நாளடைவில் சரியாகிவிடும் என்று எண்ணியவன், அவளை சமாதானம் செய்ய வேறு வழியின்றி ஒரு வாரம் வீட்டில் விடுமுறையில் இருக்கும்படி கூறியிருந்தான்.

இவ்வாறு பல மன நெருடல்களுடன் சந்தைக்கு நடந்தே வந்து சேர்ந்த நீலனுக்கு, காண்பது அனைத்தும் வியப்பாகவிருந்தது. வழமையாக சந்தையில் சந்தித்து நட்பாடுகிற அமுதன், இவனைக் கண்டதும் கைபேசியை அவசரமாக எடுத்துக் காதில் வைத்தபடி நகர்ந்து மறைந்தான். கூட்டம் அலைமோதிய மீன் வியாபாரியிடம் இவன் சென்றதும், கூட்டம் மெல்ல மெல்ல நழுவிக்கொண்டது. மீன் வியாபாரியும் தன் வியாபாரத்தைக் கெடுக்க வந்தவனைப் போல நீலனை முறைத்துவிட்டு, அவன் கேட்பதை விரைவாகக் கொடுத்தனுப்பிவிடவேண்டும் என்பதில் கரிசனையாகவிருந்தான். யாருக்குத் தெரியும் அவன் முணுமுணுத்த வார்த்தைகள் எவ்வளவு ஆபாசமானதென்று. என்னதான் அவமானப்பட்டாலும் வீட்டில் அடுப்பெரித்தாக வேண்டுமென்பதற்காக சமையலுக்கான அனைத்தையும் வாங்கிமுடித்துவிட்டு யாரின் முகத்தையும் பார்க்கத் திராணியற்றவனாய் குனிந்த தலை நிமிராமல் வீடு வந்து சேர்ந்தான்.  

நடந்தவை எதையும் மனைவி இளமதியிடம் கூறி அவளை துன்பத்துக்குள்ளாக்க அவன் விரும்பவில்லை. ஆனால் அவள் கூறலானாள்.

“கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாயிடும்“

“எதைப் பற்றி சொல்ற?“

“சந்தையில நடந்தது பற்றி“

“உனக்கெப்படித் தெரியும்?“

“நீங்க ஹாஸ்பிட்டல்ல இருந்த இந்த மூணு மாசத்துலேயே எல்லாம் பார்த்தாச்சு. எனக்குப் பழகிப்போச்சு. அன்பி தான் பாவம். அவளோட வயசுக்கு மீறி நிறைய பார்த்துட்டாள்.”

நீலனின் கண்கள் நீர் நிறைந்து வழிந்தது. ஓர் குழந்தைபோல இளமதியின் தோளில் முகத்தைப் புதைத்து அழுதுவிட்டான்.

நாட்கள் நகர்ந்து கொண்டேதானிருந்தது. ஆனால், சமூகம் தன் பார்வையினால் அவர்கள் மீது அருவருப்பை உமிழ்வதை நிறுத்தியபாடில்லை. நோய்வாய்ப்படுதல் இத்தனை இழிவானதா என்று அவனை அவனே பல முறைகள் கேள்வி கேட்டுக்கொண்டான். அவர்களின் வீட்டுக்கதவு யாராலும் எப்போதும் தட்டப்படுவதாகயில்லை. விருந்தினர் மட்டுமல்ல, வழக்கமாக யாசகத்திற்கு வருகிறவர்கள் கூட வராமல் போனது வியப்பாகத்தான் இருந்தது. அந்தச் சமூகச் சிறையின் கூண்டுக்குள் அவர்களின் வாழ்வு நலிந்து கொண்டிருந்தது. ஓர் மோசமான நோய்த் தொற்றிலிருந்து வெளிவந்திருந்தாலும், இந்தக் கொடிய உளவியல் தொற்றிலியிருந்து வெளியேறும் வழி தெரியாமல் அவர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். நிலமை இப்படியே இருந்துவிட்டால் அன்பினாவின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிடும் என்பது அவர்கள் இருவருக்கும் தெளிவாத் தெரிந்திருந்தது. ஒரு நீண்ட நெடிய மனப் போராட்டத்தின் இறுதியில் நீலன் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தான்.

“மதி!“

“ம்.. சொல்லுங்க“

“நாம இனியும் இங்க இருக்க வேணாம். போயிடலாம். எங்கேயாவது தூரமாப் போயிடலாம்”

“ம்… நானும் அதையேதான் நினைச்சேன். ஆனா, எங்க போறது? இந்த ஊர்ல இருக்குறவங்களை தவிர வேற யாரைத் தெரியும் எங்களுக்கு?“

“தெரியாம இருக்குறது தான் நல்லது. எங்களை யாரெண்டு தெரியாத ஊருக்குப் போயிடலாம். அங்கதான் எங்களை அருவருப்போட பார்க்க யாரும் இருக்க மாட்டாங்க“

இளமதி மௌனத்தால் சம்மதித்தாள்.

அவர்களின் சம்பாசனை முடியும் முன்பாக அவர்களின் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இருவருக்குமே அது ஆச்சரியமானது தான். அவர்களின் வீட்டுக் கதவில் தட்டினால் சத்தம் வரும் என்பது நீண்ட நாட்களுக்குப் பின் நினைவுக்கு வந்தது போல் இருந்தது. நீலன் ஆர்வத்தோடு கதவைத் திறந்தான். வாசலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரின் சில ஆதரவாளர்களோடு நின்றுகொண்டிருந்தார். கொரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வந்த கையோடு பொதுத் தேர்தல் ஆயத்தங்களும் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருந்தன. பொன்னம்பலம் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஊரில் மிகச் செல்வாக்கானவர். அவரின் செல்வாக்கைக் காட்டிலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினால் அவருக்கு எப்போதும் மிகப் பெரும் மக்கள் ஆதரவு இருந்துகொண்டேயிருந்தது. பல்வேறு கட்சிகள் ஊரில் இருந்தாலும், அந்தவொரு கட்சி தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் பிரிதிநிதிகள் என்பதை பிரச்சாரம் செய்துகொண்டிருந்தது. அவர்களின் உளவியல் ரீதியிலான பிரச்சாரத்திற்கு மக்களிடம் பலத்த ஆதரவு என்றைக்கும் இருந்துகொண்டுதானிருந்தது.

நீலனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டதும்கூட அந்தப் பிரச்சார நோக்கில் தான். வீடு வீடாகச் சென்று அவர்கள் வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கட்சியின் பெயரால் பொன்னம்பலம் அவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதுதான் என்றாலும், அவரின் பிரச்சாரம் மிகப் பலமானதாகத்தான் இருந்தது. அவ்வாறு இல்லையெனில், இத்தனை நாளாய் தீண்டப்படாத கதவு இன்று தட்டப்பட்டிருக்காதல்லவா என்று நீலன் எண்ணிக் கொண்டான்.

“தம்பி! இந்த முறையும் தேர்தல்ல நீங்க நமக்கு ஓட்டுப் போட்டு நம்மட மக்கள்ட உரிமைகளை பெற்றுத்தாறதுக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்க்கோணும்”

என்று கூறியவாறே, பழுப்பு நிறக் காகிதத்தில் சிவப்பு எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்ட பிரச்சாரத் துண்டுப் பிரசுரத்தை நீட்டினார். நீலன் அதைப் பெற்றுக் கொண்டதும், பொன்னம்பலம் தன் தொந்தியில் கை வைத்தவாறே அடுத்த வீட்டை நோக்கி நடையைக்கட்டலானார்.  

அந்தத் துண்டுப் பிரசுரத்தில் பதினொரு தேர்தல் வாக்குறுதிகள் உணர்ச்சிகரமான வார்த்தைகளோடு அழகாக அச்சிடப்பட்டிருந்தன. அதன் கீழே பொன்னம்பலத்தின் ஐந்தாம் இலக்கத்திற்கு முன்பாகவும் அந்தக் கட்சியின் சின்னமான கட்டடத்தின் முன்பாகவும் புள்ளடியிடப்பட்டு வாக்களிக்கும் முறை விளக்கப்பட்டிருந்தது. ஆனால், அது அவசியமானதல்ல என நீலன் எண்ணிக் கொண்டான். பல ஆண்டுகளாக அதையே தெரிவு செய்து நன்கு பழக்கப்பட்ட ஓர் சமூகத்திற்கு புதிதாக கற்பிக்க வேண்டியதில்லை என்பது அவனின் ஞானம்.

முடிந்தவரை விரைவாக இடம் பெயர்ந்துவிடுவதென எண்ணியிருந்த நீலனுக்கும் இளமதிக்கும் தேர்தல் வரை அவகாசம் இருக்கவில்லை. அடுத்த வாரமே கொழும்பின் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகைக்கு குடியமர்ந்து கொண்டார்கள். அடுக்கு மாடிக் குடியிருப்பின் நெருக்கடியான வாழ்க்கைக்குப் பழக்கப்படுவது சற்று சிரமமாக இருந்தாலும், தீண்டப்படாதவர்களாக தங்களை ஆக்கியிருந்த ஒரு சமூகத்திற்கு மத்தியில் வாழ்வதைக் காட்டிலும், இது பல மடங்கு ஆறுதலாய் இருந்தது. தனக்கென்று ஒரு தொழிலைத் தேடிக் கொண்ட நீலன், அதன் பின் அன்பினாவின் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவனாய் இருந்தான். ஒரு பெற்றோராய் அவர்கள் தங்கள் குழந்தையின் கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வாழ்ந்துகொண்டிருந்தனர்.

***

ரு பரபரப்பான நகரத்தின் நெடுஞ்சாலை வாகன நெரிசலில் ஊர்ந்து நகரும் வாகனங்களைப்போல் அல்லாமல், காலம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அன்பினா இப்போது இருபத்தைந்து வயது இள மங்கையாக ஆகியிருந்தாள். ஐ.டி கம்பனி ஒன்றில் ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். தங்கள் மகளின் எதிர்காலத்தையே தங்களின் வாழ்நாளாகக் கொண்டிருந்த பெற்றோருக்கு தற்போது வேறு என்ன ஆசை இருக்க முடியும் அவளின் திருமணத்தைத் தவிர. நீலனும் இளமதியும் நிச்சயிக்கப்பட்ட அன்பினாவின் திருமணத்தை சிறப்பாக நடாத்தி முடிப்பதில் பம்பறமாகச் சுழன்றுகொண்டிருந்தனர். ஆனாலும், நீலனின் அடி மனதில் ஒரு ஏக்கம் இருந்துகொண்டேயிருந்தது, அன்பினாவின் திருமணத்திற்கு தங்கள் கிராமத்திலுள்ள உறவினர்களையும், நண்பர்களையும் அழைக்க வேண்டும் என்று. ஆனால், இளமதிக்கு அதில் பெரிய உடன்பாடு இருக்கவில்லையாதலால், நீலன் மாத்திரம் சில திருமண அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு அவர்களின் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டார்.

பதினைந்து வருடங்களுக்கு முன் தங்களை நிர்க்கதியாக்கி விட்ட கிராமத்தை கனத்த இதயத்துடன் சென்றடைந்தார் நீலன். ஒரு மனிதன் தான் பிறந்த ஊரை இத்தனை ஆண்டுகள் பிரிந்து இருப்பதை விட அவனது வாழ்வில் வேறு என்ன சாபம் இருந்துவிட முடியும் என்பதே அவரது உளக் குமிறலாய் இருந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன் இருந்த கிராமத்திற்கும், தற்போது பார்க்கும் கிராமத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை, ஒரு சில கட்டடங்களையும், மனிதர்களின் உடல் முதிர்ச்சியையும் தவிர. தன் உறவுகளையும், நண்பர்களையும் வீட்டுக்கே தேடிச் சென்று அழைப்பிதழ்களைக் கொடுத்தார். அவர்கள், நீலனைக் கண்டதில் பூரித்து நின்றனர். யாருமே, நீலனுக்கு நோய்த்தொற்று வந்ததனையோ, வெறுத்து ஒதுக்கியதனையோ நினைவு வைத்திருந்ததாகத் தெரியவில்லை என்பது அவருக்கு மிகப் பெரும் ஆறுதலாய் இருந்தது. காலம் மிகப் பெரும் மருந்து என்பது அன்று அவரிடத்தில் மெய்யாகிப் போனது. எல்லாவற்றையும் விட மக்கள் மனதளவில் நல்ல முறையில் முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் என எண்ணி புலங்காகிதமடைந்தார்.

ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அந்த ஊரைவிட்டு வெளியேறிய நாளொன்றைப் போலவே, இப்போதும் தேர்தல் காலமாக இருந்தது. பொதுத் தேர்தல் பிரச்சாரங்களில் முன்பைப் போல இப்போதும் ஊர் பரபரப்பாகவே இருந்தது. அது நீலனுக்கு தன் இளமைக்கால தேர்தல் காலங்களையும், தான் இறுதியாக ஊரைவிட்டு வெளியேறுகையிலிருந்த தேர்தல் காலத்தையும் ஏதோ சிறு வலியுடன் ஞாபகப்படுத்திச் சென்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் இறந்ததன் பின்னர், தற்போது அவரின் மகன் இளவேந்தன் அதே வழியில் அரசியல்வாதியாகிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தார் நீலன். அவரும் தந்தையின் கட்சியிலேயே இம்முறை வேட்பாளராகப் போட்டியிடுவதனால், அவருக்கும் வெற்றி நிச்சம் என்று ஊரார் பேசிக்கொள்வது நீலனின் காதுகளில் விழுந்தது. அரசியலில் அதிகம் நாட்டம் இல்லையென்றபோதும், தன் பழைய நினைவுகளை மீட்டக்கூடிய அவ்வாறான செய்திகள் மனதுக்கு உற்சாகமானதாகவே தோன்றியது அவருக்கு.

ஒருவழியாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழை வழங்கிவிட்டு மீண்டும் கொழும்பு செல்ல ஆயத்தமானபோது சில இளைஞர்கள் துண்டுப் பிரசுரம் ஒன்றை நீலனின் கைகளில் திணித்தவாறு நகர்ந்து சென்றுகொண்டிருந்தனர். ஆம் அது தேர்தல் துண்டுப் பிரசுரம் தான். எத்தனையோ தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் மரபு வழியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து பிரச்சாரங்கள் தொடர்வது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவருக்கு. யார் கண்டார், அது கூட ஒரு வெற்றி இரகசியமாக இருக்கலாமல்லவா என்று எண்ணியபடி ஆர்வத்தோடு அதில் பார்வையைச் செலுத்தினார். அவருக்கு மீண்டும் வியப்பாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பொன்னம்பலம் அவர்கள் நீலனிடம் கொடுத்தது போலவே, இதுவும் பழுப்பு நிறக் காகிதத்தில் சிவப்பு மையாலான துண்டுப்பிரசுரம். அதில் அதே பதினொரு தேர்தல் வாக்குறுதிகள் முன்பைவிட அழகான உணர்ச்சிகர வார்த்தைகளோடு கோர்க்கப்பட்டு அச்சிடப்பட்டிருந்தன. கீழே பொன்னம்பலத்திற்குப் பதிலாக அவரின் மகனின் இலக்கம் அச்சிடப்பட்டு அருகில் அதே கட்டடச் சின்னத்திற்கு எதிரில் புள்ளடியிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஆக, வேட்பாளர் பெயரையும் அவர்களின் இலக்கத்தையும் தவிர அதில் வேறு வித்தியாசங்கள் எதுவும் இல்லாதது மிகப் பெரும் வியப்பாகவிருந்தது. ஆனாலும், இளவேந்தனின் வெற்றி உறுதியானது என்று அவர் அறிந்திருந்தார்.

அவருக்கு அப்போதுதான் தெளிவாகியது,  கொரோனா நோய்த் தொற்று பதினைந்து வருடங்களுக்கு முன்பே நீங்கியிருந்தாலும், மக்களின் பல தசாப்த உளவியல் தொற்று இன்னும் நீங்கியபாடில்லை அல்லது நீங்க சிலர் அனுமதிப்பதில்லை என்று.

முற்றும்.
Follow on Facebook

No comments:

Post a Comment