November 27, 2017

இருப்பது ஒரு தோட்டா மட்டும்


தெளிவாக எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. பல கிலோ மீற்றர்கள் தூரத்திற்குக் கரும்புகையும் புழுதிக் காற்றுமே சூழ்ந்திருக்கிறது. அவர்களின் தடை செய்யப்பட்ட குண்டுகள் எங்கள் தாய் மண்ணை நாசம் செய்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது.  அரை மணித்தியாலத்திற்கு முன்னர் இருக்வேண்டிய இடத்திலிருந்த என் இடது முழங்காலின் கீழ்ப்பகுதி இப்போது அந்த இடத்தில் இல்லாததனால் இரத்தம் பீறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் காலை இழந்த வலியைக் காட்டிலும், எம் மண்ணை இழந்து கொண்டிருக்கும் வலியைத்தான் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாமலிருக்கிறது.

என் சீருடையின் இரத்தக் கறைகள் நிச்சயமாக என்னுடையவகையாக மட்டும் இருக்க முடியாது. அவற்றில் எதிரியின் இரத்தத்திற்கு அதிக பங்கு இருப்பதை என்னால் நிச்சயித்துக் கூற முடியும். அமைதிப் பூங்காவாயிருந்த இந்த மண்ணில் நாசகாரம் செய்ய வந்தவர்களைத் தடுக்க நானும் என் ஏழு சகாக்களும் சுமார் இரண்டரை மணித்தியாலங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் ஏழ்வரில் எஞ்சியிருந்த கடைசி நண்பனும் வீர சுவர்க்கம் அடைந்தான். தாய் மண்ணுக்காகத் தன்னுயிரைத் தருவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற ஒரு போராளிக்கு வேறு பெருமை ஏது இருக்க முடியும்.

கரும்புகை சற்று விலகி என் கண்களின் வீச்சுக்கு வழி விடுகிறது. ஆம், இப்போது என்னால் நான் மறைந்திருக்கும் பங்கரிலிருந்து கொண்டே அந்த நாசகாரர்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. எங்கள் துவக்குகளால் பதம்பார்க்கப்பட்டவர்கள் போக, மிகுதியாகக் குறைந்த பட்சம் அவர்களில் இருபது பேராவது இங்கிருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதிப்படக் கூற முடியும். அவர்கள் பிணந்தின்னிக் கழுகுகள் போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரதேசம் தற்போது அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்தென்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்பதை, அவர்களின் கூச்சல்களிலும் வெற்றிக் கோசங்களிலுமிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் மிகவும் அமைதியான கிராமமான இந்த இடத்தில் இருந்த பதின்மூன்று குடும்பங்களில், இந்த நிமிடம் ஒருவர் கூட உயிருடனிருக்க மாட்டார்கள் என்பதில் எனக்குத் துளியளவும் சந்தேகமில்லை. காரணம், அவர்களின் கொடூரமான ஆயுதங்களுக்கு அப்பாவிகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது. இப்படியொரு நிலை வந்துவிடக் கூடாதென்று தான் நாங்கள் எட்டுப் பேரும் இரண்டரை மணித்தியாலங்களாகப் போராடினோம். ஆனால் இப்போது நான் மட்டும் தான் எஞ்சியிருக்கிறேன்.

எனது மரணமும் இங்கு நிச்சயிக்கப்பட்டு விட்டது. இன்னும் சில நிமிடங்களில் அது நிகழப்போகிறதென்பதில் எனக்குச் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், அதற்கு முன்பதாக அவர்களில் சிறு இழப்பையாவது ஏற்படுத்தி விட்டால் தான், என் வீர மரணத்திற்காக நான் பெருமையடைய முடியும். அதற்காகத்தான் என் உயிரை இறுக்கப் பிடித்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் எனக்கான வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருக்கிறது. காரணம், என் துவக்கிலிருப்பது ஒரு தோட்டா மட்டும் தான்.

தற்சமயம் என் வசமிருக்கும் அந்த ஒரு தோட்டாவைக் கொண்டு அவர்களில் ஒருவரைத்தான் என்னால் பதம் பார்க்க முடியும். அப்படிச் செய்து விட்டால் நிராயுதபாணியான என்னை மீதமுள்ளவர்கள் இலகுவில் பிடித்து விடுவார்கள். என் கழுத்திலிருந்த சயனைட்டுக் குப்பியும் எம் இனத்திலிருக்கும் காட்டிக் கொடுக்கும் துரோகிகளைப் போல எங்கோ அறுந்து விழுந்து துரோகம் இழைத்து விட்டது. ஆகையினால் அப்படி மாட்டிக் கொண்டால், அவர்கள் என்னை ஒரே தடவையில் கொன்று விடப்போவதில்லை. உயிருடன் பிடிபடும் பட்சத்தில் அவர்களுக்கென்றே  பிரத்தியேகமான மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு  நான் உள்ளாக்கப்படுவேன் என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறேன். 

ஆனாலும் நான் அதற்காகக் கலங்கவில்லை. அவர்களிடம் உயிருடன் மாட்டிக் கொண்டு அவர்களின் வெற்றியை ஒருபடி மேலே எடுத்துச் செல்ல நான் தயாராக இல்லை. ஆகையினாலே இருக்கும் ஒரு தோட்டாவை என்னை நோக்கிப் பாய விடலாமா என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். தற்கொலை இழிவானதுதான். ஆனால் அவர்களின் சித்திரவதையை அனுபவித்து, அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதைக் காட்டிலும் அது மேலானதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.  இருந்தும் வீர மரணம் அடைய விரும்பும் எனக்கு இந்த முடிவு கோழைத் தனமாகவே தோன்றுகிறது.

அவர்களில் ஒருவனையேனும் எமலோகம் அனுப்பி வைப்பதா? அல்லது என்னை நானே கொன்று இந்தத் துர்ப்பாக்கியத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதா? என்று எனக்குக் குழப்பமாகவேயிருக்கிறது. இந்த இரண்டு தெரிவுகளில் ஒன்றை மட்டுமே என்னால் தேர்ந்தெடுக்க முடியும். ஆனாலும் இப்போது எந்தவொரு முடிவையும் என்னால் உறுதியாக எடுக்க முடியவில்லை. நான் மிகவும் குழப்பத்திலிருக்கிறேன். ஒரு நொடி அந்தக் கொடியவர்களில் ஒருவனைப் பதம் பார்த்து விடு என்று என் மனம் கூறுகிறது. மறு நொடி தோட்டாவை உன் மீது பாய்ச்சி விடுதலையைப் பெற்றுக் கொள் என்று என் மனம் வேறு விதமாய்ப் பிதற்றுகிறது. பல யுத்த களங்களில் பல இக்கட்டான நிலையைக் கடந்த எனக்கு, இந்த நிலையில் தெளிவான முடிவொன்றை எடுக்க முடியாமலிருக்கிறது. காரணம், இருப்பது ஒரு தோட்டா மட்டும்.

என்னிடம் இருக்கிற அந்த இறுதித் தோட்டாவை நான் மிகவும் சரியான திசையில் பாய்ச்ச வேண்டிய கடப்பாட்டிலிருக்கிறேன். அதை மிகவும் பயனுள்ளதாக்கிக் கொள்ளவே நான் விரும்புகிறேன். எனவே தான் தெளிவான முடிவொன்றை எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன். எதிரியில் ஒருவனை நோக்கி அல்லது என்னை நோக்கி என்ற இந்த இரண்டில் ஒரு தீர்வைத் தான் எடுக்கப் போகிறேன் என்பதில் எனக்குத் துளியளவும் சந்தேகமில்லை. ஆனால், அவற்றில் எதைத் தெரிவு செய்வதென்பதை என்னால் தீர்மானம் செய்துவிட முடியாமலிருக்கிறது.

“சரி.. இது தான் சரியான முடிவு”
நான் என் நெற்றிப் பொட்டுக்குக் குறி வைத்து துவக்கை அழுத்திப் பிடிக்கிறேன். இன்னும் இரண்டு வினாடிகளில் என் கதை முடிந்து விடப் போகிறது.

“சீச்சி… என்னவொரு கோழைத்தனம். மாவீரர்கள் வீர மரணமடைந்த மண்ணில் இப்படியொரு கோழைச் சாவு நிகழ்வதா? நிச்சயமாகக் கூடாது.”

நான் துவக்கு முனையை எதிரியை நோக்கிக் குறி வைக்கிறேன். ஆனால் அவர்கள் மிகவும் தொலைவிலுள்ளார்கள். எனது கையிலும் பலமாக அடிபட்டிருப்பதனால் என்னால் என் இலக்கை நோக்கிச் சரியாகச் சுட முடியுமா என்பதில் சந்தேகமாகவே இருக்கிறது. குறி தவறிவிட்டால் இறுதித் தோட்டாவும் வீணாகிவிடும் . எனவே, அவர்களில் ஒருவன் சற்று அருகில் வரும் வரை காத்திருந்தாக வேண்டும். ஏனென்றால் இருப்பது ஒரு தோட்டா மட்டும்.

“இல்லை, என்னால் அது வரை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.”
மீண்டும் துவக்கை என்னை நோக்கித் திருப்புகிறேன்.

“கூடாது…. கூடாது…. அவர்களின் எண்ணிக்கையில் ஒருவனையாவது நான் சாவதற்குள் குறைத்துவிட வேண்டும்.”

இப்படி மாறி மாறி என் இலக்கை நிர்ணயித்துக் கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். என்னால் நிச்சயமாக இவற்றில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஏனென்றால், இரண்டுமே எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது.

சில விநாடிகளுக்குக் கண்ணை மூடிப் பிரார்த்திக்கிறேன்.
“ஆண்டவா! எனக்கு மரணம் இப்போது நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அதை நான் அறிந்து விட்டேன். ஆனால் அதற்காக நான் கலங்கவில்லை. என் தூய போராட்டத்தின் இறுதி நொடியையும், இறுதித் தோட்டாவையும் அரத்தமுள்ளதாகவே பயன்படுத்த விரும்புகிறேன். இப்போது என் இலக்கு யாரை நோக்கி இருக்க வேண்டும்? எதிரியை நோக்கியா? அல்லது என்னை நோக்கியா? ஏதாவது ஒன்றைத்தான் என்னால் செய்ய முடியும். காரணம், இருப்பது ஒரு தோட்டா மட்டும். எனக்கு நீ தான் சரியான விடிவை………”

ஆ! என் இலக்கு தீர்மானிக்கப்பட்டு விட்டது. யாரோ அலறும் சத்தம் கேட்கிறது. கண்ணை முழித்துப் பார்க்கிறேன். அந்தக் காமுக வெறியாட்டக்காரர்களில் ஒருவன் ஒரு குடிசையிலிருந்து ஒரு இளம் பெண் பிள்ளையை பிடரியில் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறான். அவள் பார்ப்பதற்கு என் பதினெட்டு வயதுத் தங்கையைப் போலவே இருக்கிறாள். ஆம் நிச்சயமாக அவளும் எனக்குத் தங்கை தான். நான் என் தங்கையை அந்தக் காமுகர்களிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும். அவள் மானபங்கப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாவதை எப்படி ஒரு அண்ணனால் அனுமதிக்க முடியும். ஆனால், காலை இழந்த என்னால் இங்கிருந்து ஒரு அடி கூட நகர முடியாது. நான் இங்கிருந்தே என் தங்கையைக் காப்பாற்றியாக வேண்டும்.

என் துவக்கை எடுக்கிறேன்.

லோட் செய்து விட்டேன்.

அவர்கள் இருக்கும் திசையை நோக்கித் திருப்புகிறேன்.

நான் என் தங்கையின் மானத்தைக் காப்பாற்றியாக வேண்டும். அவர்களின் கொடூரச் சித்திரவதைகளிலிருந்து அவளை மீட்டாக வேண்டும். ஆனால் இருப்பது ஒரு தோட்டா மட்டும் தான்.

என் துவக்கை என் தங்கையின் தலைக்குக் குறி வைக்கிறேன்….

முற்றிற்று.  

6 comments:

  1. எதிர்பார்க்காத முடிவு.....
    பல உணர்வுகளை வெளிகொணர்கிறது....
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இறுதி முடிவு மிக அருமை. கதைக்கு அர்த்தம் வழங்கும் அவ் வரிகள்.

    ReplyDelete
  3. தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

    ReplyDelete