November 23, 2017

அம்மா



மூத்த பிள்ள நான் பிறக்க - உன்
உயிரில் பாதி கொடுத்தவளே
பார்க்க வந்த சொந்தத்துக்கு - என்னை
திருஷ்டி பொட்டால் மறைச்சவளே

கருவறை இருளில் கூட - ஒரு
கனவு நானும் கண்டிருந்தேன்
வெளியில் வந்து பார்த்ததுமே - நான்
கண்ட கனவை உன்னில் கண்டேன்

அழுதா பிள்ள பேசுமுண்ணு - தாதி
கிள்ளி விட்டு பார்க்கயில
பிரசவ வலியப் பொறுத்தவளே - நான்
அழுத வலியப் பொறுக்கலயே

தூக்கம் ஒன்றே உலகமுண்ணு - நான்
நாளும் பொழுதும் தூங்கயில
ஓலைப்பாயில் குளிர் ஆகாதாம் - தன்
மடியால் மெத்தை தந்தாயே

காய்ச்சல் தடிமன் எனக்கேது - தாய்
பாசக் காவல் அரணுக்குள்ள
இருந்தும் ஒருமுறை வந்ததற்கு - அதன்
மருந்தாய் உன் துயில் துறந்தாயே

சோறு ஊட்ட நிலவுக்கதை - என்
சோர்வு போக்க சிங்கக் கதை
இத்தனை கதைகள் எனக்கெதற்கு - உன்
தியாகக் கதையைச் சொல் எனக்கு

பள்ளிப் பருவம் நெருங்கயில - உன்
கண்ணில் தெளிவு நான் கண்டேன்
தெளிந்த பார்வைக்கு காரணத்தை - இன்று
பல்கலைக்கழகத்தில் புரிந்து கொண்டேன்

உன் பாசம் என்ற மந்திரத்தை - என்
வரிகளால் சொல்லப் போதாதே
இருந்தும் தாயே பொறுத்தருள்வாய் - என்
மூட நம்பிக்கையை ஏற்றுக்கொள்வாய்

No comments:

Post a Comment