November 24, 2017

நான் மட்டும் அறிந்த இரகசியம்


ஓலைக் கூரையின் விரிசல் வழி தெரியும்
நீல வானம் பார்த்து நான் கண் விழித்து
சேலைத் தலைப்பினால் பெற்றவளிடம்
குளித்து வந்த என் தலையைத் துவட்டி முடித்து

இன்றோ நாளையோ என இறக்கத் துடிக்கும்
என் பள்ளிச் சட்டையின் பதினோராவது கிழிசலையும்
பக்குவமாய் அவள் பிணைத்துத் தர

என்றோ ஓர் நாள் இந்த ஏழ்மை மாறும் என
எண்ணிக் கொண்டே அதை உடுத்திக் கொண்டு

போய் வருகிறேன் அம்மா எனச் சொல்லும் போதே
மூலையில் கிடக்கும் கிழிந்த புத்தகப் பையைப்
பார்க்கும் என் கண்களைக் கண்டித்துக் கொண்டே

முழங்கை மடித்து நெஞ்சோடணைத்த
புத்தகச் சுமையையும் 
மூன்று வருடங்களாய் தந்தையை இழந்த
என் தங்கையின் கனவையும் 
முறையே அங்ஙனம் அடுக்கிக் கொண்டே

முற்றத்தில் முன்னேறி
பசியோடு தெருவை அடைகையில்
சாப்பிட்டுப் போ மகனே என்ற
சாவித்திரியவளின் சாந்தக் குரல்
என் செவியில் விழும் போது
உள்ளுக்குள்ளே எண்ணிக் கொள்வேன்

காலையில் நான் உண்ணவென 
கடைசி இரவில் நீ உண்ணாது 
எனக்காக நீரூற்றி வைத்த அந்தப் பழஞ் சோற்றை
நீ உண்டு உன் பசியை ஆற்றிக்கொள் தாயே என்று...


6 comments:

  1. எனக்கு மட்டும் தெரிந்த வலிகள்
    அருமை

    ReplyDelete
  2. மிக அருமையான கவிதை

    ReplyDelete
  3. "நான் மட்டும் அறிந்த இரகசியம் " மிகவும் அருமை .
    உங்களது எழுத்துப் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே உங்கள் ஆதரவுக்கு

      Delete