November 24, 2017

பகலில் ஓர் பால் நிலவு



பால் நிலவு கண்டேன் - அது
பகலில் வரக் கண்டேன்
பாதையோரப் புற்கள் - அவள்
பாதம் வேண்டக் கண்டன்

கோயில் வந்த அவளை - மனதில்
கோலம் போட்டுக் கொண்டேன்
கோவைப் பழத்தில் இதழை - நான்
கோடி முறை வியந்து நின்றேன்

காதில் சிமிக்கிகள் ஆடும் - என்
சிமிட்டாக் கண் அதைத் தேடும்
காலில் முள் தைத்த போதும் - அது
காளான் பஞ்சாய் மாறும்

அவள் பின்னே நடக்கும் போது - எனக்கு
வெயிலிலும் கம்பளி வேண்டும்
அவள் சற்றே திரும்பும் நொடியில் - என்
இதயச் சந்தம் ஓங்கும்

அவளது காற்றில் கரையும் பேச்சை  - எந்தன்
கண்கள் மட்டும் காணும்
அதை விலை கொடுத்து வாங்க - அந்த
இந்திரன் படையும் ஏங்கும்

காற்றில் உதிரும் இலைகள் - எமக்காய்
அர்ச்சதை என்றே தோன்றும்
காதல் தந்த அழகின் - திருப்
பெயரேனும் அறிய வேண்டும்

No comments:

Post a Comment