November 23, 2017

மரங்களின் படுகொலை



பல யுத்தம் கண்ட பூமியிதில் - பலர்
இரத்தம் சிந்திய போர் முனையில்
படுகொலையென்ற வார்த்தைக்கு - ஏன்
மரங்களின் அழிப்பு விதிவிலக்கு?

எத்தனை மரங்கள் அழித்திருப்போம் - அட
எத்தனை கிளைகள் சிதைத்திருப்போம்
வலிகள் சொல்லத் தெரிந்திருந்தால் - அதன்
உரத்த அழுகுரல் கேட்டிருப்போம்

வாழ்க்கை என்பது தமக்கு மட்டும் - என
வகுத்து வைத்த மனித குலம்
வார்த்தை பேசத் தெரிந்திருப்பின் - மரம்
வாய்த்த வரமென ஏற்றிருக்கும்

நகரம் தோன்ற விருட்ஷங்களை - இயந்திர
அசுரன் கொண்டு நாம் மடித்தோம்
நகரம் எங்கு நாம் படைத்தோம் - வெப்ப
நரகம் தானே வடிவமைத்தோம்

விண் சிந்தும் துளி நீரேனும் - மரம்
கடைந்த அமுதமென மறந்துவிட்டோம்
வன் துருவப் பனியை நீராக்கி - மரத்தின்
அழிவால் கடல் வளர்த்துவிட்டோம்

காக்கும் ஓசோன் படையரங்கில் - பல
கதவுகளை நாம் திறந்துவிட்டோம்
நுழையும் வேண்டா ஒளிக்கீற்றால் - பாசக்
கயிற்றுடன் எமனை வரவேற்றோம்

வாழும் வரை நாம் வாழ்ந்து விட்டு - உயிர்
சுகமாய்ப் போக்க நினைக்கின்றோம்
ஆயுள் முடிந்து நாம் செல்லுமிடம் - மரித்த
மரங்களும் இருக்கும் மறக்கின்றோம்

இத்தனை வரிகள் படித்த பின்னே - உன்
மனது வலிகள் ஏற்றிருந்தால்
இன்றே விதைக்கு நீருற்று - நீ
நாளைய விருட்ஷம் உருவாக்கு

1 comment:

  1. மிக அழகான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete