November 23, 2017

பச்சைத் தங்கத் திரு நாடு



அத் தேசமெங்கும் அவைதானே
திரும்பும் திசையிலே அவைதானே
வாசம் வான்வரை அவைதானே
பச்சைத் தங்கத் திரு நாடே

பச்சை பச்சை பசும் பச்சை
இச்சை இழைத்திடும் அதன் பச்சை
மலையக மண்ணின் மாயம் என்ன
மலைகளில் தங்கம் பசும் பச்சை

தேயிலையென்ற பெயரெதற்கு
தேன்மலையென்ற பெயர் பொருத்து
வான்வரை மரங்கள் வளர்ந்திருக்கு
வான தேவதைகள் வருவதற்கு

விபத்துக்கள் அங்கு அதிகம் என்பேன்
முகில் மகள் மலையில் மோதக்கண்டேன்
மலையும் மழையும் கலவி கொண்டு
தவழும் மழலை அருவி கண்டேன்

கரைந்திட செம்மண் நீரினுடன்
வியர்வையில் குங்குமம் தேவதையின்
களைந்ததோ கன்னியின் ஆடைகளே
வளைந்திட்ட சாலையின் நளினங்களே

இதுதான் இதுதான் பசுந்தேசம்
பச்சைத் தங்கத்தின் விளைதேசம்
பருவக் கன்னி மலை மகளின்
பதுமை அழகின் புகழ் தேசம்

No comments:

Post a Comment