November 23, 2017

தந்தைக்காக



தவம் ஏதும் செய்ய வில்லை - நான்
தவம் தந்த பிள்ளையில்லை
தாமாக வந்த தவம் - என்
தந்தையாகுமென எண்ணவில்லை

வடம் பிடித்து இழுத்த கைகள் - தெய்வம்
சுமந்த தேரை நகர்த்தி வரும்
தந்தை கரம் பிடித்து நான் நடக்க - அந்த
தெய்வம் சேர்ந்தே கூட வரும்

ஓவியங்கள் நீர் வரைந்தீர் - வர்ணம்
வானவில்லில் வாங்கி வந்தீர்
ஓவியம் போல் எனை வரைய - அன்பின்
காவியமாய் மாறிவிட்டீர்

என் பாதம் வாங்கி நின்றீர் - அதை
உம் நெஞ்சில் நீர் பதித்தீர்
உம் நெஞ்சில் பதித்த பாதம் - அன்பின்
வேர் ஊன்ற வழி வகுத்தீர்

தந்தையாக தாங்கி நின்றீர் - உடனே
தாயன்பும் நீர் கொடுத்தீர்
தந்தை என்பதை நான் மறந்து - பொழுதில்
தோழன் எனவும் நினைக்க வைத்தீர்

தோள் மீது எனை அமர்த்தி - உமக்கே
துலங்காத் தூரம் காட்டுவித்தீர்
அறிவின் வாள் எனக்களித்து - வாழ்வின்
போர் வென்று ஜெயிக்க வைத்தீர்

நீர் காட்டும் பாதையிலே - வாழ்வை
நான் அமைக்க மறுத்து விட்டீர்
நான் வேண்டும் பாதையினை - சுயமே
நான் வரைய வாய்ப்பளித்தீர்

தந்தை என்ற உயிர்ச் சொல்லில் - அடங்கும்
இலக்கணங்கள் தகர்த்து விட்டீர்
தந்தை வேண்டும் உன்போல் என்ற - ஓர்
தலைவிதியை எழுதிவிட்டீர்

No comments:

Post a Comment