November 23, 2017

சபிக்கப்பட்ட மேகங்கள்



சிலுவைகளில் அறையப்பட்டவர்களின்
சிந்தும் இரத்தமாய்
சிரங்குகளில் சீழ் கொண்டு வழியும்
சிவப்பொழிந்த இரத்தமாய்
நகரம் எனும் நரக மேடை பொழியும் சபிக்கப்பட்ட மேகங்களே

நாற்று நட்டவன் உமக்கெனக் காத்திருக்க
நகரில் கால்வாய் நிரப்பிட வந்தீரோ
உழுதவன் உம்மைத் தொழுதிருக்க
நகரமழை என ஈனப் பிறவி கொண்டீரோ

வயலும் தாண்டி வனப்பும் தாண்டி
வளையும் நெளியும் வரம்பும் தாண்டி
புல்லும் தாண்டி பூவும் தாண்டி
புஞ்செய் முழுதும் புயல்போல் தாண்டி

தார்மேல் விழுந்து தாறுமாறென அறுந்து
ஊர்மேல் ஊர்ந்து அழுகிய ஊனினைப் புசிக்கும்
நகரத்து மழையே
விதை விதைத்தவன் விழிகளில் நீர் விதைத்து - நகரில்
விலைமாது தேடி வந்தாயோ
ஏர்மகனைத் தீயில் எரியவிட்டு - நகரின்
எச்சில் துடைத்திட வந்தாயோ

உனையே உலகாய் உனையே உயர்வாய்
உனையே உயிராய் உழுதவன் உய்திட
அவனுயிர் கொய்தாய் அழிவை எய்தாய்
அதுதான் முறையோ அழிவே மழையோ

நகரில் பொழிந்தாய் நகர்வற்றழிந்தாய்
நாற்றம் அணிந்தாய் நஞ்சோடிணைந்தாய்
கால்வாய் நுழைந்தாய் கடைசியில் கடலை அடைந்தாய்
கண்கெட்ட மழையே உன்னால் கந்தாயம் இல்லையே

மீண்டும் விண்ணேறு முகிலாய் உடன் மாறு
வயல்களில் நீ தூறு புனிதச் சேறாய் உருமாறு
உழவன் கால் பட்டு உந்தன் பிறப்பின் பயன் தேறு
மீண்டும் முகிலாகி அங்கே மழையாகு....

No comments:

Post a Comment