November 24, 2017

இரண்டு குற்றவாளிகள்


வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் வந்த போது ரகுவின் செல்போன் திரை பளிச்சிட்டு நேரம் இரவு பத்து மணியைக் காட்டிவிட்டு மீண்டும் அணைந்து கொண்டது. அத்தனை நேரமாகியும் அவர்களின் சண்டை நீண்டு கொண்டேயிருந்தமையால் வாட்ஸ் ஆப்பில் வந்த மெசேஜைக் கண்டுகொள்ளக் கூட ரகுவிற்கு ஆர்வம் இருக்கவில்லை. அவர்களின் வாய்த்தர்க்கம் வழமையான நிகழ்வுதான் என்ற போதும் அவ்வளவு நேரம் அது நீடித்ததில்லை.

பரணி பேசுகின்ற ஒவ்வொரு பேச்சுக்கும் ரகு எதிர்ப் பேச்சு பேசிக்கொண்டேயிருந்தான்.

“பரணி! என்னப் பத்தி எதுவும் பேசாதேண்ணு உனக்குப் பல தடவை சொல்லிட்டேன்.”

“பேசுகிறவனைக் குறை சொல்லாதே. மற்றவங்க குறை சொல்லாத மாதிரி நீ நடந்து கொள்ளு.”

“நான் எப்படி நடந்துக்கணுங்கிறத நீ எனக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்ல. உனக்கு இங்க இருக்கப் பிடிக்கல்லண்ணா நீ வீட்ட விட்டுப் போகலாம்.”

“நான் எதுக்கு வீட்ட விட்டுப் போகணும்? நானும் வாடகை கொடுத்துத் தான் இந்த வீட்டுல இருக்கேன்.“

ரகுவும், பரணியும் இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது நாங்கள் நால்வரும் பல்கலைக்கழகம் தெரிவாகி மொறட்டுவைக்கு வந்து ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கிய காலம் முதலே வழமையாக நடக்கின்ற நிகழ்வுதான் என்பதால் என்னைப் போலவே அமுதனும் அவர்களின் சண்டையை லட்சியம் செய்யாமல் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்து கொண்டிருந்தான். வழமையாக எட்டு மணியோடு முடிவடைகின்ற அவர்களின் சண்டை பத்து மணியைக் கடந்தும் ஓயாமல் நீண்டு கொண்டிருந்தது. கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன அவர்களின் சண்டை கீதம் அன்றைக்கும் என் நித்திரைக்கு இடையூறாக இருக்கவில்லை.

நான் கண்ணயர்ந்து விட்ட ஒரு சில நிமிடங்களிலேயே திடீரென்று இடி விழுந்தது போல் ஓர் பயங்கரமான சத்தம், யாரோ எங்கள் வீட்டுச் சுவரில் ஓங்கி அடித்தது போல் ஓர் அதிர்வு, நித்திரை கலைந்து நான் பதறி எழுந்து கொண்டேன். அந்த அதிர்வும் சத்தமும் என்னைப் போலவே என் அறையில் இருந்த அமுதனையும் அதிர்ச்சியடையச் செய்திருக்க வேண்டும். அவன் பதற்றத்தோடு “என்ன சத்தம்?” என்று கேள்வி கேட்பது போல் என் முகத்தைப் பார்த்தான். என் மனதிலும் அதே கேள்வியே தொக்கி நிற்க, சண்டையிட்டுக் கொண்டிருந்த ரகுவினதும் பரணியினதும் சத்தம் அப்போது அடங்கியிருந்ததை உணர முடிந்தது. என்னை ஏதோ ஒரு பயமும் பதற்றமும் பற்றிக் கொண்டது. என் நா வரண்டது. என் இதயப் படபடப்பு என் காதிற்கே கேட்டது. ஏதோ ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதென்று என் உள் மனம் பதறத் தொடங்கியது. நான் துள்ளியெழுந்து ரகுவும் பரணியும் சண்டையிட்டுக் கொண்டிருந்த அறையை நோக்கி ஓடினேன்.

அறைக்குள் நுழைந்ததும் நான் கண்ட காட்சியில் என் இதயத் துடிப்பு ஒரு நொடி நின்று விட்டு மறு நொடியில் படபடவென அடிக்கத் தொடங்கியது. அங்கே தலையில் கையை வைத்தபடி நின்று கொண்டிருந்தான் ரகு. அவன் நின்று கொண்டிருந்தானே தவிர, தன் நிலையை மறந்தவன் போல ஓர் மூலையைப் பார்த்துக் கொண்டு என்ன செய்வதென்று அறியாது அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான். அவனது பார்வை சென்று கொண்டிருந்த திசையில் ரகுவினால் சுவரில் மோதப்பட்டு தரையில் விழுந்து கிடந்தான் பரணி. அவனது கண்கள் மூடியிருந்தது. மூக்கிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனது கைகள் இரண்டும் பக்கவாதக்காரர்களின் கைகளைப் போல் இழுத்துச் சுருண்டு கொண்டிருந்தது. மூச்சு விட முடியாமல் முனகல்ச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல உயிர் பிரிந்து கொண்டிருப்பது போலிருந்தது.

என் கால்களும் கைகளும் நடுநடுங்க அலறிக் கொண்டே பரணியை நோக்கி ஓடினேன்.

“பரணி! பரணி! எழுந்திருடா!”
“பரணி…”
“பரணி! கண்ண முழிச்சுப் பாருடா”

அவன் கண்களைத் திறக்கவில்லை. என் குரல் அவனுக்குக் கேட்பதாகத் தோன்றவில்லை. அழுகையோடு புலம்பலும் சேர்ந்து கொண்டது எனக்கு. எவ்வளவு சத்தம் போட்டுக் கத்தியும் எத்தனை முறை அவன் கன்னத்தில் தட்டியும் அவன் எழுந்து கொள்வதாகத் தெரியவில்லை. அவன் சுயநினைவற்றுக்  கிடந்தான். அவன் மூச்சு மிகவும் சிரமப்பட்டு உள்ளே போயும் வெளியே வந்து கொண்டுமிருந்தது.

அமுதன் தண்ணீர் எடுத்து வர ஓடினான். அதற்குள் என் கண்களிலிருந்து வந்து கொண்டிருந்த கண்ணீர் பரணியின் முகத்தை நனைத்துக் கொண்டிருந்தது. நான் பரணியின் தலையைத் தூக்கி என் மடியில் வைக்க, அவனின் தலையைத் தாங்கிப் பிடித்த என் கை இரத்த வெள்ளமாகிப் போனபோது அவனது தலையிலும் காயம் பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருப்பது  புரிந்தது. எங்களைப் பீதி இன்னும் இன்னும் பீடிக்கத் தொடங்கியது.

அமுதன் புலம்பிக் கொண்டே பரணியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்துத் தெளித்து அவனை எழுப்ப முயன்றான். ஆனால், எந்தப் பயனுமில்லை. அவனுக்கு நினைவு திரும்பவில்லை. இத்தனைக்குள்ளும் அதிர்ச்சியிலிருந்து விலகாதவனாய் அருகில் கூட வராமல் சற்றுத் தள்ளி சிலை போல் நின்றிருந்தான் ரகு. அவனைக் கோபித்துக் கொள்வதை விட பரணியின் உயிரைப் பற்றிய பயமே என்னையும் அமுதனையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. தாமதிக்காமல் அவனை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போக எண்ணி அவனைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியில் ஓடி வந்து ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். ரகுவும் அதிர்ச்சி மாறாமல் மிகவும் அமைதியாக ஏறிக்கொண்டான். ஆட்டோ ஹாஸ்பிட்டலை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. எங்களுக்கு அந்த வேகமும் போதாது போலிருந்தது. எனக்கு அழுகை நின்று போயிருந்தது. ஆனால் பதற்றமும் பயமும் கூடிக்கொண்டேயிருந்தது.

ஆட்டோ ட்ரைவர் இடது பக்கக் கண்ணாடியில் எங்களைப் பார்த்துக் கொண்டே

“தம்பி! என்ன நடந்தது?”

பதில் சொல்ல எங்களுக்கு ஆர்வம் இருக்கவில்லை. அவர் மறுபடியும் கொஞ்சம் இறுக்கத்துடன்

“தம்பி! என்ன நடந்ததுண்ணு சொல்லுங்க”

இந்த முறை அவரின் கேள்வியை அலட்சியம் செய்ய முடியவில்லை. இரண்டே வரிகளில் நடந்ததைச் சொல்லி முடித்தேன். பதற்றத்தில் திக்கித் தடுமாறியதில் இரண்டு வரிகள் பேசி முடிக்க எனக்கு இரண்டு நிமிடத்திற்கு மேல் தேவைப்பட்டது.

ட்ரைவர் ஒரு தடவை பக்கக் கண்ணாடியில் எங்களையெல்லாம் பார்த்து விட்டு

“தம்பி! இது அடிதடிப் பிரச்சனை. போலீஸ் கேஸ். நீங்க ஹாஸ்பிட்டலுக்குப் போனா, போலீஸ் கம்ப்ளைண்டு கொடுத்த பிறகு தான் ட்ரீட்மென்டு செய்வாங்க. உங்க மூணு பேரையும் போலீஸ் அரஸ்ட் பண்ணிடுவாங்க”

நான் கோவமாக

“அதுக்காக இவன ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போக வேணாங்குறீங்களா?”

“நான் அப்படிச் சொல்லல்ல. ஹாஸ்பிட்டல்ல என்ன நடந்ததுண்ணு கேப்பாங்க. அவங்ககிட்டயும் எங்கிட்ட சொன்னது மாதிரி அடிதடிச் சண்டைப் பிரச்சனைண்ணு உண்மையைச் சொல்லாம வேற ஏதாவது காரணம் சொல்லுங்க. அப்போ தான் அவங்க உடனே ட்ரீட்மென்டு செய்வாங்க. நாளைக்கு அவருக்கு நினைவு வந்த பிறகு அவங்களுக்கு உண்மை தெரிஞ்சாக் கூடப் பிரச்சனையில்ல. அடிபட்டு இருக்குறவரு உங்க ஃப்ரண்டு தானே. அவர் கூடப் பேசி போலீஸ் கம்ப்ளைண்டு இல்லாமப் பண்ணிடலாம். ஆனா, இப்ப உண்மையைச் சொன்னீங்கண்ணா இரவு முழுக்க போலீஸ் விசாரணைங்கிற பேர்ல உங்கள என்னென்ன பண்ணுவாங்கண்ணு சொல்லவே முடியாது.”

“நாங்க உண்மையை மட்டும் தான் சொல்லப் போறோம். ஒரு வேளை பரணிக்கு ஏதாவது நடந்திச்சிண்ணா உண்மை வெளிய வராமப் போகாது. அப்போ பொய் சொன்னதுக்காகவும் நாங்க தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.”

அமுதன் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே

“யாகவா! உன் வாயைக் கொஞ்சம் மூடிட்டிருக்கிறியா. எனக்கு அதுதான் சரிண்ணு தோணுது. பரணிக்குத் தவறி விழுந்து அடிபட்டிருச்சிண்ணு மட்டும் சொல்லுவோம். உனக்குப் பொய் சொல்றது கஸ்ட்டமாயிருந்தா உன் வாயை மூடிக்கிட்டிரு. நான் எல்லாம் பேசுறேன்.”

பேசிக் கொண்டிருக்கும் போதே ஆட்டோ ஹாஸ்பிட்டலை அடைந்தது. மறு நிமிடம் ஹாஸ்பிட்டல் பரபரப்பானது. பரணி ஓர் அறைக்குள் கொண்டு செல்லப்பட்டான். பட்டென்று அறைக் கதவு சாத்தப்பட்டது.

சாத்தப்பட்ட அறைக் கதவுக்கு முன்னாலிருந்த ஹாலிடோரில் நான் பதற்றத்தோடு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தேன். பயத்தில் குதிரை வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த இதயத் துடிப்பின் வேகத்தைப் போல, என் கால்களும் ஓரிடத்தில் கணநேரம் கூட நிற்காமல் ஓடிக்கொண்டேயிருந்தது.

எனக்கிருந்த அத்தனை பதற்றத்திற்கு மத்தியிலும் சாத்தப்பட்ட கதவினைப் பார்த்தவாறு அதற்கு எதிரில் சிலை போல் அசைவிழந்து நின்றுகொண்டிருந்த ரகுவை நான் பார்க்கத் தவறவில்லை. அவன் மிகவும் அமைதியாகக் கதவினை நேராகப் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தான். அவன் முகத்தில் பயம் இருக்கவில்லை. பதற்றம் அவனை ஒட்டிக்கொள்ளவில்லை. நடந்த எதற்கும் வருத்தப்படுவதாக அவன் முகம் காணப்படவில்லை. அவன் கண்களில் தெரிந்ததெல்லாம் அதிர்ச்சி மட்டுமே.

திட்டமிட்டது போலவே ரிஷப்சனில் சம்பவத்துக்கு விளக்கம் கொடுத்து விட்டு அங்கு வந்து சேர்ந்த அமுதன், என்னிடம்

“யாராவது ஒருத்தர் தான் பேஷன்டுக்கு உதவியா இங்க இருக்க முடியுமுண்ணு சொல்றாங்க. நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போங்க. நான் இங்கேயே இருக்கேன்.”

“இல்ல. நான் இங்கேயே இருக்கேன். நீ ரகுவைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போ. ரகு றொம்ப அதிர்ச்சியில இருக்கான்.”

“இல்ல யாகவா. நான் பார்த்துக் கொள்றேன். நீங்க ரெண்டு பேரும் கெழம்புங்க.”

“யாகவா! அமுதா! நீங்க ரெண்டு பேரும் போங்க. நான் பரணியோட இருக்கேன். நடந்ததுக்கெல்லாம் நான் தான் காரணம். நான் மட்டும் அவனைச் சுவர் மேல தள்ளி விடாம இருந்திருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்காது. வீட்டுக்குப் போனாக் கூட என்னால நிம்மதியா இருக்க முடியாது. நான் இங்கேயே இருக்குறது தான் சரி.”

என்று எங்கள் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் சாத்திய கதவைப் பார்த்தபடி நின்று கொண்டே நிதானமாகப் பேசினான் ரகு. எனக்கும் அமுதனுக்கும் அவனின் பேச்சை மீறி எதுவும் பேசத் தோன்றவில்லை. அவனின் நிலையைப் புரிந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பினோம்.

நாங்கள் வீட்டுக்குள் நுழையும் போது கடிகாரம் அதிகாலை இரண்டு மணியைக் காட்டிக் கொண்டிருந்தது. நானும் அமுதனும் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அமைதியாகவிருந்தோம். எங்களுக்குப் பேச எதுவும் தோன்றவில்லை. கடிகார முள் சுற்றும் சத்தம் அந்த அமைதியில் என் நெஞ்சில் ஆணியடிப்பது போல் பிரமையை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. பயத்தில் உடம்பெல்லாம் வியர்த்தது. மனமும் வாயும் தெரிந்த கடவுள்களின் பெயர்களையெல்லாம் உச்சரித்துக் கொண்டிருந்தது. அமுதனைப் போலவே எனது கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தது. நான் அடிக்கடி பெருமூச்சு விட்ட சத்தம் பலமாக இருந்திருக்க வேண்டுமென்பதை அந்தச் சத்தத்தைக் கேட்டு ஒவ்வொரு தடவையும் என்னைத் திரும்பிப் பார்த்த அமுதனின் பார்வையில் புரிந்து கொள்ள முடிந்தது.

அமைதியாக உட்கார்ந்திருந்த அமுதன் திடீரென்று

“யாகவா! ஆந்தை சத்தம் போடுது. இது ஏதோ கெட்ட சகுனமுண்ணு சொல்லுவாங்க. எனக்குப் பயமா இருக்குதுடா. பரணிக்கு ஏதாவது…..”

“உன் மூடநம்பிக்கையெல்லாம் தூக்கிக் குப்பையில போடு. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.”

அது மூடநம்பிக்கையென்று அவனுக்கு ஆறுதல் சொன்னாலும் ஆந்தையின் சத்தம் கேட்கக் கேட்க எனக்கும் பதற்றம் தலைக்கேறியது. அதை அமுதனுக்குக் காட்டிக்கொள்ளாது நான் தைரியமானவன் போல் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆந்தையின் சத்தம் அடங்குவதற்குள்ளேயே நாய்கள் ஓலமிடத் தொடங்கியது. இதுவும் கெட்ட சகுனம் தான் என்பது போல அமுதன் என் முகத்தைப் பார்த்தான். அவ்வாறு இருக்காது என்பது போல நான் அவனின் பார்வையை தவிர்த்துக் கொண்டிருந்தேன். வெளியில் தைரியமானவன் போல் நடித்துக் கொண்டிருந்தாலும், என் மனதிலும் அப்படி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் எழுந்து கொண்டும் மறைந்து கொண்டுமிருந்தன. நேரம் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வது போல் தோன்றியது. நெஞ்சுப் படபடப்புச் சத்தம் கூடுவதும் குறைவதுமாகவிருந்தது.

தூக்கம் சிறிதுமில்லாமல் கழிந்த அந்தப் பயங்கரமான இரவின் அமைதியை காலை ஆறு மணிக்கு அமுதனின் செல்போனுக்கு ஹாஸ்பிட்டலிலிருந்து வந்த அந்த அழைப்பு மணியொலி கலைத்தது.

“உடனே கெழம்பி ஹாஸ்பிட்டலுக்கு வாங்க” என்பது மட்டும் தான் தொலைபேசியில் மறுபக்கம் பேசியவர் சொன்ன செய்தி. எங்களை மீண்டும் நடுக்கம் பீடித்துக் கொண்டது. அந்த அழைப்புக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்று எண்ணிய போதெல்லாம், ஆந்தை கத்துவதும் நாய்கள் ஓலமிடுவதும் என் காதில் கேட்கத் தொடங்கியது.

நாங்கள் மிகவும் பயத்தோடும் பரபரப்போடும் ஹாஸ்பிட்டலினுள் நுழையும் போது இரவு டியூட்டியிலிருந்த ஒரு மேல் நர்ஸ் எனக்கு எதிரில் வந்து நின்று கொண்டு

“ஓ! வந்துட்டீங்களா!”

“அண்ணா, ஹாஸ்பிட்டல்ல இருந்து கால் பண்ணி உடனே கெழம்பி வரும்படி சொன்னாங்க. ஏதாவது பிரச்சனையா? எங்களுக்கு றொம்பப் பயமா இருக்கு.”

“நீங்க சொல்லுறதப் பாத்தா, அப்போ ராத்திரி உங்க ஃப்ரண்டு இறந்த விசயம் உங்களுக்குத் தெரியாதா?”

என்று மிகவும் சாதாரணமாகச் சொல்லத் தொடங்கினார்.

எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது. வாய் புலம்பத் தொடங்கியது. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. நான் சுதாகரித்துக் கொண்டு பரணி இருந்த அறையை நோக்கி ஓடினேன். உள்ளே செல்ல வேண்டாம் என ஒரு நர்ஸ் தடுத்ததையும் பொருட்படுத்தாமல் அறைக் கதவை உடைப்பது போல் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

அங்கே பரணி கட்டிலில் படுத்திருந்தவாறே

“யாகவா! வந்துட்டியா! நான் எப்படி இங்கே வந்தேன்? எனக்கு என்ன நடந்தது?” என்றான்.

எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் குழப்பமும் ஒன்றாகக் கலந்து கொண்டது. ஓடிப்போய் பரணியைக் கட்டியணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டேன். என் கண்ணீரில் அவனது தோள் நனைய ஆரம்பித்து விட்டது. அவன் நடந்தவை எவையும் நினைவில் இல்லாமல், நான் அழுவதற்குக் காரணம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

நான் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் போது அமுதன் அங்கே வந்து சேர்ந்தான். நான் அவனிடம் பரணியைக் காட்டிக் கண்களில் கண்ணீரோடு சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினேன்.

“அமுதா, நம்ம பரணி நல்லா இருக்குறான்டா. நம்ம ஃப்ரண்டுக்கு நர்ஸ் சொன்னது மாதிரி எதுவும் ஆகல்லடா.”

அமுதன் விம்மி விம்மி அழத் தொடங்கினான்.

“யாகவா! யாகவா! செத்தது நம்ம ஃப்ரண்டு தான்டா”

எனக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. மறு நிமிடம் தான் ரகுவின் நினைப்பு வந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை. கிட்டத்தட்ட என் இதயம் சிதறிப் போனது.

அமுதன் சத்தம் போட்டு ஓவென்று அழுது கொண்டே

“ராத்திரி முழுக்கத் தனியா இருந்து யோசிச்சிட்டே இருந்திருக்குறான்டா. பாத்றூமுல….! ஆ….! ஐயோ யாகவா! பாத்றூமுல கயிறு மாட்டித் தொங்கிட்டான்டா. ஐயோ யாகவா….! நாம அவனக் கொண்ணுட்டோம்டா. நாம தான் அவனக் கொண்ணுட்டோம்டா.”

எனக்கு மெல்ல மெல்ல எல்லாமே புரிந்தது. ரகுவின் குற்றவுணர்வு அவனைக் கொன்றுவிட்டது. குற்றவுணர்வோடும், அதிர்ச்சியோடுமிருந்த ரகுவைத் தனியாக விட்டுப் போன நானும் அமுதனும் தான் அவனின் மரணத்திற்குக் காரணமான இரண்டு குற்றவாளிகள்.

முற்றிற்று


No comments:

Post a Comment