November 23, 2017

ஏனிந்தத் தாமதமோ



பொழுது பட்டுப் போயாச்சி
பொற நிலவும் வந்தாச்சி
விறகெடுத்து வந்த ஆச்சி
விளக்கு வைக்கும் நேரமாச்சி

கோழி கூடு சேர்ந்தாச்சி
கொம்பு மாடும் வந்தாச்சி
கோமளவள்ளி என் குடிசையில
கோப்பத் தயிரும் புளிச்சாச்சி

காள மாடு வண்டில் கட்டி
காடு வெட்டப் போன மச்சான்
நீ மட்டும் ஏன் வரல்ல
உன் நினைப்புக் கூட நேரம் தவறவில்ல

சமைஞ்ச நாளு முதல் இருந்து
உன்ன மட்டும் நினைச்சிருக்கன்
அமைஞ்ச முகூத்த நாளு வரும்
ஆச அணைக்க நேரம் வரும்

அந்திபடும் வேளையில
செஞ்சிவப்பு வானத்துல
கொஞ்சிப் போகும் மேகம் போல
நாளும் உன் வண்டில் போகும் வாசலால

காடு வெட்டி நீ வரவே
காத்திருப்பன் கால் கடுக்க
கச்சான் காத்தும் சாட்சி சொல்லும்
ஆனா மச்சான் நீ என்னப் பாத்ததில்ல

வண்டில் நிறைய கம்பு போகும்
வக வகையா அலம்பல் போகும்
கடந்து நீ போறப்ப என் குடிசைய
ஓடுற மாட்ட மனம் விரட்டிப் போகும்

காளி கோயில் சூலம் போல
முறுக்கு மீச வச்சவரே
காலில் முள்ளுக் குத்துமையா
கையத் தாரன் செருப்பாப் போடு

பரட்ட முடி வாரி விட
பத்து விரல் எனக்கிருக்கு
குறட்ட விட்டுத் தூங்கினாலும்
குழலிசைதான் அது எனக்கு

அழுக்கு வேட்டி கட்டிக்கிட்டு
அரை உடம்புக்குச் சட்டை போட்டு
அரசன் போல நடக்கும் மச்சான்
அரைச்சாண் இடம் கொடு மனசுக்குள்ள

சீதனமா நான் கொடுக்க
சில்லறைகள் சேர்த்ததில்ல
சேர்த்ததெல்லாம் ஒண்டே ஒண்டு
நீ கிள்ளிப் போட்ட வெத்தலக் காம்பு

குத்துயிராக் காத்திருக்கன்
குப்பி விளக்கு வெளிச்சத்துல
எங்கு தான் போனீரோ
ஏனிந்தத் தாமதமோ

தனியாகப் போன மச்சான்
வழி மாறிப் போனீரோ
திசை கண்டு வந்தாலும்
பசியேறி வருவீரோ

ஆஹா! மணிச் சத்தம் கேக்குதம்மா
மாட்டு வண்டி கட கடக்குதம்மா
புயலொண்டு கடக்குமுண்ணு
பூ மனசு சொல்லுதம்மா

No comments:

Post a Comment